பலவீனத்தைப் பலமாக மாற்றுங்கள்
பலவீனத்தைப் பலமாக மாற்றுங்கள்
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்." - விவேகானந்தர்
என்னிடம் ஒரு பலவீனம் இருக்கிறது.எந்தச் செயலையும் உடனே செய்வதில்லை. நாளை நாளை என்று நாளைக் கடத்திக் கொண்டிருப்பேன்.
அதனால் எதுவும் அதற்காக குறிக்கப்பட்ட நாட்களுக்குள் செய்து முடிக்க மாட்டேன் அந்தக் குணம் மட்டும் இல்லாதிருந்தால்...
நான் என்றோ எங்கோ இருந்திருப்பேன். அதுதான் என் பலவீனம்.
என்னிடம் மட்டும் பணம் இருந்திருந்தால்...
எப்போதோ தொழில் தொடங்கி பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பேன்.
இங்கே பணம் தனது பலவீனமாகிப் போனது.
நான் மட்டும் நன்றாக படித்திருந்தால்....
நல்ல பதவிக்குப் போயிருப்பேன்.
வாழ்க்கை நல்லமுறையில் அமைந்திருக்கும்.
இங்கே பணம் ஒருவரின் பலவீனமாகிப்
போனது.
இப்படி ஒவ்வொரு வரும் தன்னிடம் எது இல்லையோ அது தங்களது பலவீனம் என்கின்றனர்.
அதனால்தான் நான் முடங்கிக் கிடக்கிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர். ஆனால் தன்னிடம் இருப்பது எதுவோ அது அவர்களுக்கான பலம் என்று யாரும் எண்ணுவதில்லை.
நம்மில் இருக்கும் பலம் என்ன என்பதை சற்றே ஆய்வுக்குட்படுத்திப் பாருங்கள்.
நிறைய பலம் இருக்கும். ஒரே ஒரு பலவீனம் மட்டும் தான் இருக்கும்.
அந்த ஒற்றை பலவீனத்தைப் பிடித்துக்கொண்டு என்னால் முடியாது என்று முடங்கிக் கிடப்போம்.
ஏன் இருக்கிற பலத்தை வைத்துச் சாதிக்கக்கூடாது?
ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பற்றிப் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும் . இயற்பியலுக்காக பெரும்பங்களிப்பைச் செய்தவர் அவர்.
இவர் உடலின் பெரும்பாலான பகுதிகள் செயலிழந்த நிலையில் இருந்தவர். சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
உடல் பாகங்கள் எதுவுமே அசையாத நிலை. பேசுவதற்குக் கூட ஒரு கணினி வேண்டும். பார்ப்பவர்கள் பரிதாபப்படும் நிலைமை அவருடையது.மொத்த உடம்புமே பலவீனமானது. அதில் ஒன்று மட்டும் அதிக பலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்தது.
மூளைதான் அவருடைய பலம். சிந்தித்தார். பலவீனங்களை ஒதுங்கிக் தள்ளினார். பலத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.
முழு நேரமும் வாசிப்பதிலும் சிந்திப்பதிலும் செலவிட்டார். சாதனைகளைப் படைத்தார். அறிவியல் உள்ளவரை அழியாத கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆனார்.
பலவீனங்கள் இல்லாத மனிதர் இல்லை. இந்த உண்மையை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.
எனக்கொரு பலவீனம் இருக்கிறது.இல்லையென்றால் நான் வாழ்க்கையில் ஜெயிச்சுக் காட்டியிருப்பேன் என்று இன்னும் எவ்வளவு காலம்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்.
பலவீனத்தை முதலீடாய்க் கொண்டு வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கும் போது தான் பலவீனங்கள் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்னும் உண்மை புரியும்.
பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைக்கும் ஒவ்வொரு வீரர்களையும் பாருங்கள்.
எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை இருந்தால் அவர்கள் இந்தச் சாதனைகளை எட்டியிருக்க முடியும். தாங்கள் பலவீனமானவர்கள் என்று முடங்கிப் போயிருந்தால் அவர்கள் திறமையை உலகம் அறிந்துகொள்ள முடியாமலே போயிருக்கும்.
நம்முடைய வாழ்க்கையிலும் பல விஷயங்களை நாம் பலவீனம் என நினைத்திருப்போம். ஆனால் அதே விஷயங்கள் தான் நமக்கு பலமான விஷயங்களாக மாறிவிடும்
பலவீனத்தை பலமாய்ப் பார்க்க மனம் பலமாய் இருக்க வேண்டும். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்டம் அந்த மனம் இருந்தது. அதனால் தான் அவர் இன்னும் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார்.
ஒருவருடைய பலம் இன்னொருவருக்கு பலவீனமாகும். ஒருவருடைய பலவீனம் இன்னொருவருக்கு பலமாய் இருக்கும்.
புல்லாங்குழலுக்குத் துளைதான் பலம். துளைகள் இல்லையேல் புல்லாங்குழலில் இசை இல்லை.
மாறாக மிருதங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
துளைகள் இருந்தால் அதில் இசை
வராது.
புல்லாங்குழலுக்கு துளை பலம்.
மிருதங்கத்திற்குத் துளை பலவீனம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாறுபட்ட, பலம் இருக்கும்.அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்து ஐயையோ....அவர்க்கு இருக்கும் அந்த திறமை நம்மிடமில்லையே என்று புலம்புவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
என்னிடமும் பலம் இருக்கிறது. இருக்கிற பலத்தை வைத்து என்னாலும் வென்று காட்ட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.
நமது மனதில் நிறைய திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன . ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித்தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது.
பலவேளைகளில் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்து நினைத்துப் பின்தங்கி நின்று விடுகிறோம் .
பிறரைப் பற்றிய நினைப்பு நமது வாழ்க்கை ஓட்டத்தில் வேகத்தடையாக அமைந்துவிடும்.
சில நேரங்களில் பிறரின் விமர்சனங்கள்கூட நம்மை குப்புறத் தள்ளிவிடலாம். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நம்மால் முடியாது என்று நமக்கு நாமே ஒரு
தடையை உருவாக்கி வைத்து விடுவது
நமது ஓட்டத்தைத் தடுத்துவிடும்.
முடியாது என்ற சொல்லை ஓரமாய்த் தூக்கி வையுங்கள். முடியும் என்ற சொல்லைத் தூக்கிப் பிடியுங்கள்.
இது என்னுடைய பலவீனம் என நாம் நம்பும் வரை அது நம்முடைய பலவீனமாய்த்தான் இருக்கும். இது என் பலவீனமல்ல .
இதுதான் என் பலம் என்று நம்புங்கள். மறுவினாடியே உள்ளத்தில் ஒரு புது உற்சாகம் பிறக்கும்.
அந்தப் பலவீனமே நமக்கு மிகப்பெரிய பலமாய் மாறிவிடும்.
பலவீனம் இல்லாத மனிதனில்லை.பலவீனத்தைப் பலமாய் மாற்றத் தெரிந்தவர்க்கு தோல்வி என்பது ஒரு போதும் இல்லை.
பலவீனங்களோடு கொள்ளுங்கள் பிணக்கு.பலத்துடன் தொடங்கட்டும் உங்கள் வெற்றிக் கணக்கு.
Comments
Post a Comment