குறுந்தொகை பேசும் காதல்
குறுந்தொகை பேசும் காதல் புன்னை மரத்தின் கீழ் தலைவி ஒருத்தி நின்றிருக்கிறாள். புன்னை மரத்தில் அணில் ஒன்று அங்குமிங்கும் தாவித்தாவி புன்னங்கனிகளை ஒரு கடி கடித்து கீழே வீசி விளையாடுகிறது. புன்னம் இலைகளுக்கு இடையே பூத்துக் கிடக்கும் பூக்களை உடலோடு உரசி விளையாட்டு காட்டுகிறது. அணிலின் விளையாட்டினைக் கண்ட காற்றுக்கு கிளைகளை அசைத்து நாமும் கொஞ்சம் அணிலோடு விளையாடலாமே என்ற ஆசை வந்துவிட.... சற்று வேகமாக மரக் கொம்புகளை ஆட்டி அணிலை ஊஞ்சலாட வைக்கிறது. அணிலின் ஊஞ்சலாட்டமும் கொம்புகளின் உரசலும் பூக்களை ஒன்றோடொன்று முத்தமிட்டு விளையாட வைத்துவிட பூந்தாது இதழ்களில் ஒட்டிக்கொள்கிறது. இதழ்களின் மீதிருக்கும் தாதினைப் புன்னம் இலைகள் துடைத்து நிற்க, பூக்கள் நன்றி சொல்வதுபோல் மலர்ச்சி காட்ட என்று புன்னை மரத்தில் அழகிய காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியில் தன்னை மறந்து நின்றவளைத் தொட்டு உலுக்கிய தோழி பாவை, "என்ன கனவு பலமாக இருக்கிறதோ?" என்றாள். "அப்படி ஒன்றுமில்லை. அந்த அணில் விளையாடுவதைப் பார்த்தேன்.அவ்வளவுதான்" "அவ்வளவுதானா? வேறு ஏதேனும் நினைவுகளா?...