Posts

Showing posts from December, 2024

புத்தாண்டு பிறந்தாச்சு

Image
புத்தாண்டு பிறந்தாச்சு  புத்தாண்டு பிறந்தாச்சு. புதிய டைரி வாங்கியாச்சு. புதுப்பக்கங்களில் புதுப்புது தீர்மானங்கள்  எழுதி வைச்சாச்சு. நான்கு நாட்களுக்கு.. புது டைரியைப் புரட்டுவதும் எழுதுவதும்.... நான் அது செய்ய மாட்டேன் இது செய்ய மாட்டேன் என்று  நிமிடத்திற்கு நாலு முறை நினைவு படுத்துவதும் என்று நாலு நாளைக்கு ஒரே அலப்பறை யாக இருக்கும். அப்புறம்?  பழையபடி எல்லாம் முன்பு நடந்தது போல்தான் நடக்கும். வழக்கம்போல நிகழும் வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்று இந்த டைரி வாங்குது  எழுதுவது பதிய தீர்மானங்கள் எடுத்திருக்கிறோம். பார்த்துகிட்டே இருங்கள்....நாளையிலிருந்து நான்  புதிய ஆள் என்ற பேச்சு காற்றோடு என் காதுவரை வந்தாச்சு. என் காதுகளுக்கு மட்டுமா வந்திருக்கும்.? உங்கள் காதுகளுக்கும்   கண்டிப்பாக வந்திருக்கும். இந்தப் புத்தாண்டில் நான் அப்படி இருப்பேன். இப்படி இருப்பேன் என்று ஆளுக்கொரு  உருட்டு உருட்டிக் கொண்டிருப்போம். ஆனால் என்னடி மீனாட்சி கடந்த ஆண்டு எடுத்த புத்தாண்டு தீர்மானங்கள் என்னாச்சு ? அவை... காற்றோடு போயாச்சு என்ற பாடல் காற்றோடு வந்து ...

தமிழரசன்

Image
       தமிழரசன்  பள்ளி வாசல் வரை உற்சாகமாக வந்த தமிழரசனுக்கு அதற்கு மேல் செல்ல கால் எழவில்லை.     ஒரு கணம் அப்படியே நின்று பள்ளியையே பார்த்தான்.       பள்ளிக்குள் செல்வதா வேண்டாமா என்று ஒரு தாவா மனதிற்குள் வந்து அவனை அப்படியே நிறுத்தி வைத்தது.  நாலு நாளாக பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர் கேட்டால் என்ன சொல்வது ?  எப்படி சமாளிப்பது.?  மற்ற மாணவர்களைப் போல சட்டென்று பொய் பேசி பழக்கம் இல்லை.  உண்மையைச் சொல்லி விடலாம்.  ஆனால் மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்கள் .  தன் உண்மை நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே வெதும்பி நின்றான். நினைக்க நினைக்க கூச்சமாக இருந்தது.  ஏன் இப்படி ? எனக்கு மட்டும் ஏன் இப்படி? கடவுளைக் கண்டு  கேட்க வேண்டும் போல இருந்தது.  கேட்டால் பதில் கிடைக்கவா போகிறது.  கோபத்தை உள்ளுக்குள்ளே புதைத்து விட்டு  ஊமையாக நின்றிருந்தான்.     மற்ற மாணவர்கள் கிண்டலாகப் பேசுவது இப்போதே காதுகளில்  ஒலிக்க ஆரம்பித்தது.          " போதும் நிறுத்துங்...

எங்கே நிற்கிறேன்

எங்கே நிற்கிறேன்  2024 ஆம் ஆண்டின் கடைசி வாரத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஓடிய கால்கள் சற்றே ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்கின்றன. நான் எங்கே நிற்கிறேன்? எனக்குள் எழுந்த இந்தக் கேள்வி உங்களுக்குள்ளும் எழுந்திருக்கும். எல்லோருக்குள்ளும் நான் எங்கே நிற்கிறேன் என்பதுதான் இன்று முதன்மை கேள்வியாக முன் வந்து விடை கேட்டு நிற்கும். எங்கே நிற்கிறேன் என்றால்.... ஒரே வார்த்தையில் விடை கூறிவிட முடியுமா? கடந்து வந்த பாதை  கண்முன் விரிகிறது. காட்சிகளாக வந்து கை குலுக்கி வாழ்த்தி நிற்கிறது. நானா...நானா இங்கே நிற்கிறேன். நினைத்தாலே இனிக்கும்  நிகழ்வுகள் நெஞ்சைத் திக்குமுக்காட  வைக்கின்றன. உடன் பயணித்த நல்ல மனிதர்கள் மறக்க முடியாத நல்ல நினைவுகளோடு இங்கே வந்து நிற்கிறேன். மகிழ்ச்சி. இப்படித்தான் அனைவர் மனநிலையும் இருக்குமா? மாறுபட்ட  சூழ்நிலைகள் வேறுவேறு மனநிலையில் இருக்கும் மனிதர்களோடு நடந்த பயணம் , வசதி வாய்ப்புகள், பணம் என்று எத்தனையோ காரணிகள் கடந்து வந்த பாதையில் குறுக்கே வந்து கோடு போட்டு  வைத்திருந்திருக்கும். அதனால் சிலர் கடந்துவந்த பாதையும் கடக்க எடுத்துக்கொ...

கிறிஸ்துமஸ் தாத்தா

Image
கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்மஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்மஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த உடல் இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் வசீகரமான முகம்.  யாரிந்த கிறிஸ்துமஸ் தாத்தா ? கிறிஸ்துவுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் என்ன தொடர்பு? கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? இப்படி பல கேள்விகள் வந்து இடைமறித்து நிற்கின்றன. கிறிஸ்மஸ் தாத்தா பற்றிய செய்திகள் பைபிளில் இல்லை. பிறகு எங்கிருந்து இந்த கிறிஸ்துமஸ் தாத்தா வந்தார்? கிறிஸ்துமஸ் தாத்தா என்ற கதாப்பாத்திரம் இடையில் நுழைவதற்குக் காரணம் என்ன ? சிறுவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும்  இந்த கிறிஸ்துமஸ் தாத்தா  யார் ? அதற்கான விடையை அறிய வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. கி.பி.4 ம் நூற்றாண்டில் துருக்கி நாட்டின்  சிமிர்னா என்ற இடத்தில்  நிக்கோலஸ் என்பவர் பேராயராக இருந்தார். இவர் மிகப் பெரிய செல்வந்தர். ஆனால் ஏழைகளுக்கு உதவும் நற்பண்பு  கொண்டவர்.குறிப்பாக குழந்தைகள் மே...

அதே கண்கள்

Image
அதே கண்கள்  அதே கண்கள். கடந்த ஒரு வார காலமாக என் தூக்கத்தைக் கெடுத்த அதே கண்கள். இதைத்தானே கடந்த ஒரு வாரகாலமாக நான் தேடிக் கொண்டிருந்தேன். இவ்வளவு சீக்கிரமாக பார்க்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. பார்த்த அந்தக் கணத்தில் தடுமாறிப் போனேன்.தலைகுப்புற  விழுந்தது போல் இருந்தது.  முன்னும் பின்னுமாக  கால்கள்  பின்ன ஆரம்பித்தன. ஏன் இந்தத் தடுமாற்றம்? அப்படி அந்தக் கண்கள் என்னதான்  பேசியன? விடை தெரியாமல் மறுபடியும் என் கண்கள் அந்தக் கண்களைத் தேடின. ஒரு ஐந்து வினாடிதான். அதற்குள் அந்தக் கண்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று என்னை அதற்கு மேல் போகவிடாமல் கட்டிப் போட்டுவிட்டன. கண நேரக் காட்சி வந்து வந்து  மறைந்து போனது.  மறுபடியும் அந்தக் கண்களைக் காண மாட்டோமா ?என்ற ஏக்கம். துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தேன். நேரில் பார்க்க வேண்டும்.. பேச வேண்டும் .... மனம் தவித்தாலும் என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. யாரும் பார்த்துவிட்டால்... அதற்குமேல் வேறு வினையை வேண்டாம். அங்கேயும் இங்கேயும் பார்த்தேன். நல்ல வேளை யாரும்  பார்க்கமில்லை.. உடம்பெல...

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து ஆசிரியருள் மாணிக்கமாய் அனைவரின் அன்புக்குரியோனாய் மாணவரின் கனவு நாயகனாய் மாண்பமை மதியாளனாய்  மட்டில்லா மொழியறிவாளனாய் தெற்றில்லா தமிழ்க்களனாய் வெற்றுமொழி பேசா ஞானியாய் தேய்வில்லா மதியாளரானாய் வாழும் செல்வகணேசன் செவியில் கவியோதி செந்தமிழில் வாழ்த்துரைக்க கற்றோர் கரம் கூப்பி வரிசையில் காத்திருக்க தொன்மை புகழ் பண்ணையூராருக்கு  வாழ்த்துப்பா என் கைசுமக்க நெடும்புனல் நன்னீர் தரு இனிமை நுகர்ந்து ஆழ்கடல் அலைகுவி மணலினும் மிக்க நாட்கள் வாழ்ந்தின்பம் காண  வாழ்த்துகிறேன் மகிழ்ந்து  வாழ்க !இன்றுபோல் என்றும்  மகிழ்ச்சிக் கடலில் நனைந்து!

பேனாவின் முனை ...

Image
பேனாவின் முனை.... "பேனாவின் முனை வாளின் முனையைவிட கூர்மையானது " சொல் வீச்சுக்கு வாள் வீச்சைவிட வலிமை அதிகம். எழுத்தாளர் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் வாசகரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ஒரு வார்த்தையும் வெறுமனே திரும்பி வராது. காயங்களை ஏற்படுத்தவும் தெரியும். காயங்களுக்கு மருந்து போடும்  மருத்துவராக செயல்படும் சக்தியும் எழுத்துக்கு உண்டு. உணர்ச்சியைத் தூண்டும். உத்வேகத்தைக் கொடுக்கும். மூடநம்பிக்கைக்குத் துணை நிற்கும். மூடநம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும். அந்தப்பக்கம் என்று காற்று  எல்லாப் பக்கமும் சுழன்று சுழன்று வீசுவதுபோல் இருக்கும். தென்றல் காற்றாய் மனதை வருடும். திடீரென்று எதிர்க்காற்றாய் மாறி சூறாவளியாய்ச் சுழற்றி அடிக்கும். நேர்மறை ...எதிர்மறை ...என்று  முன்னூற்று அறுபது பாகையிலும் திரும்பி நின்று பேசும். " வாளின் வலிமையைவிட  எனது பேனா முனை கூர்மையான பலம் வாய்ந்தது. எனது எழுதுகோல்  ஒரு கொடுங்கோல் சாம்ராஜ்யத்தையும் அழிக்கும்.  ஒரு செங்கோல் ஆட்சியையும் உருவாக்கும் ""  என்றார் புரட்சி எழுத்தாளர்  வால்டேர். இவரது ...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

Image
பணி நிறைவுப் பாராட்டு மடல்  சேலத்து மாங்கனிச் சுவையானவளை சீர்மிகு நரசிம்மன் லட்சுமி இணை மடி சுமந்தவளை மாதவளை மன்னன் பாலசுப்பிரமணியம் மனையானவளை எம் ஆசானானவளை ஆயிழை சித்ரா  மாணவர்க்கு மாமழை! ஆரே காலனியில் பெய்த முதல்மழை மாதுங்கா முலுண்ட் கோலிவாடா மாணவர் வளைமாயம் கற்றவளை பேரருள் பெருமதியானவளை மாணிழை சித்ரா மாணவர்க்கு மாமழை! நினைவுவளை  நிறைகுடமானவளை புரிந்தவரைப் புடமிடச்செய்தவளை உயர்ந்தவளை உள்ளம் கவர்ந்தவளை நல்லவளை நற்பண்பானவளை தேனிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை! தமிழானவளை தமிழாய்ந்தவளை தக்கவரைத் தரமாக்கும்வளை தளராதவளை தனித்துவமானவளை தூதுவளை போலானவளை சேயிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை! கனிந்தவளை கல்வி மொழிந்தவளை அன்னவளை அன்பு தந்தவளை புன்னகையிழை பொலிமுகமானவளை என்னவளை  என்நெஞ்சில் நிறைந்தவளை பூவிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை! ஓதும்பணி நிறைவானவளை ஓர்ந்துநலம் சூழ்ந்தவளை ஒத்திருகை தொழுதவளை வாயார வாழ்த்துதும்  இப்பொன்மகளை நேரிழை சித்ரா  மாணவர்க்கு வான்மழை!

பிறந்தநாள் வாழ்த்து

Image
பிறந்தநாள் வாழ்த்து  மொக்கவிழ் மலரன்ன சிரிப்பு  பக்கல் ஈர்க்கும்  வனப்பு எல்லை வகுத்திடா நட்பு கள்ளமில்லா நாவசைப்பு கிறிஸ்டி என்பதென் கணிப்பு கதிரவனுக்கு இன்று களிப்பு காரணம் கிறிஸ்டியின் பிறப்பு நாள் இன்றென   அழைப்பு தந்தது  பெருங்களிப்பு சொற்களின் அணி வகுப்பு  தோரணம் கட்டிய கவித்தொகுப்பு கரங்களில் தந்தேன் பேருவப்பு நித்தம் உன்றன் நினைப்பு நெஞ்சில் குடியிருக்கும்  நட்பு  வானன்ன நெடிய புகழ் கண்டு நிலனன்ன நெடுநாள்  நிலைத்து மலரன்ன  மகிழ்மணம் தந்து வாழ  இறையருள் உண்டு வாழ்க ...பல்லாண்டு...  பல்லாண்டு... பல்லாயிரம் ஆண்டு எம் உள்ளங்களை ஆண்டு!

போராளியோ பேராழியோ

Image
போராளியோ பேராழியோ போராளியோ  பெரும்பேராழியோ விளங்கிட முடியா வேதம்தான் பெண்ணோ! இளநகை புரிந்து  இன்முகம் காட்டியவளைப் பேதை என்றது முத்தமிழோ! சிறகுகள் முளைத்துச் சிட்டாய்ப் பறந்து  செவிமடல் திறந்து செம்மையை அறிந்து கேள்விக் கணைகள் தொடுத்து கர்வம் தொலைத்தவளைப் பெதும்பை என்றது நற்றமிழோ! மாசிமாதத் தென்றலாய்  மாலை நேரத் தென்றலாய்  மயங்கிட வைத்து மனமதைத் துவைத்து மடவரலானவளை மங்கையென அழைத்தது வண்டமிழோ! உள்ளதை உரைத்து உவப்பினில் திளைத்து உன்மத்தம் கொண்டு ஊமைமொழி பேசி உள்ளம் கவர்ந்தவளை  மடந்தையென உரைத்தது தீந்தமிழோ! இமையாய் இருந்து இதயத்தில் சுமந்து இனிமையைத் தந்து இல்லம் மகிழ இளம்பிடியானவளை அரிவை என்றது அருந்தமிழோ! உள்ளங் கையில் உறவினைச் சுமந்து உலகினை அறிந்து உழைப்பினைத் தந்து உண்மையை உரைத்து உயர்யானவளை தெரிவை என்றது தண்டமிழோ! பேராளுமையோடு  வீட்டாளுமை செய்து நாட்டாமையாய்  நற்கடனாற்றி நற்பணி முடித்து நன்மகளானவளை பேரிளம் பெண் என்றது பைந்தமிழோ! இத்துணைப் பெயர்கள்  தந்தவர் எவரோ? எப்படி இப்படி என்ற வியப்புதான் நினதோ போராளியோ பெரும்பேராழியோ வி...

பிரளயம் வருமா?

Image
பிரளயம் வருமா  வழக்கத்திற்கு மாறான பெருவெள்ளம்.  பார்க்கும் இடமெங்கும் வெள்ளக்காடு.  மழை ஓவென்று ஒப்பாரி வைத்து  தன் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை.  சிறுகுளங்கள் எல்லாம் உடைப்பெடுத்து  ஊருக்குள் தண்ணீர் வந்துவிடுகிறது.   அவ்வளவுதான் ஊர் முழுவதும் கூச்சலும்   கூப்பாடுமாக மாறிவிடுகிறது.  என்ன செய்வதெனத் தெரியாத பதற்றம்.  ஐயோ...ஜலப் பிரளயம் வந்து   உலகம் அழியப் போகிறது போலிருக்கிறதே  என்று ஆளாளுக்குப் புலம்பத்  தொடங்கிவிடுகின்றனர்.    இப்படிப்பட்டதான சூழ்நிலை பல நேரங்களில்  நிகழ்ந்ததுண்டு.  இப்போதே ஊர் அழிந்து போகக் கூடுமோ   என அஞ்சி இருப்போம்.  எல்லாம் நான்கு நாட்கள்தான்.  அதன்பிறகு பிரளயம் வந்ததற்கான  சுவடே இல்லாமல் போய்விடும். "பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள " என்ற சிலப்பதிகார அடிகள் பிரளயத்தால் குமரிக் கண்டம் காணாமல் போனதைப் பற்றி குறிப்பிடுகிறது. பிரளயம் என்றால் என்ன? என்பது இப்போது புரிந்திருக்கும். இயற்கைப் பேரிடர்...

உவப்பத் தலைக்கூடி

உவப்பத் தலைக்கூடி.....  உவப்பத் தலைக்கூடி இருக்கும் அன்பு  நண்பர்கள் அனைவருக்கும்  என் முதல் வணக்கம். பள்ளி வளாகத்தில் கால்பதித்ததும் சில்லென்று துளிர்விட்ட நினைவுகள் என்னைச் சிலிர்க்க வைத்தது. எதிரே உங்கள் முகங்களைக் கண்டதும்  சொல்ல முடியாத மகிழ்ச்சி என்னைத் திக்குமுக்காட  வைக்கிறது. இதோ இங்கே நிற்பது நானா...? நானா .... நான்தான் உங்கள் முன்னால்  நின்று கொண்டிருக்கிறேனா? நினைத்துப் பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சி. உங்களோடு என் அன்பைப் பகிர்ந்துகொள்ள  இப்படியொரு வாய்ப்பை வரமாக அளித்த இறைவனுக்கு முதலாவது  நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். காலம் வரைந்துவிட்ட கோலம் நம்  அனைவர் முகத்திலும் தெரிகிறது. கண்கள் அதே பழைய  துடிப்புடன் கூடிய நினைவில். பேசாதவற்றைப் பேசத்  துடிக்கும் உதடுகள். என்னப் பேசுவது எனத் தெரியாத ஊமைமொழிப் பரிமாற்றங்கள். நலமா  எனக் கேட்கும் பாசப் பிணைப்பு பார்வையில். இவை யாவும் என்னை எங்கெங்கோ கொண்டு செல்கின்றன. அனைவர் கண்களிலும் ஏதோ ஒரு பனிமூட்டம். எதையோ காணாததொரு வாட்டம். ஆசிரியர் முகம்  காண வேண்டும் என்ற தேட்...

அன்னையும் அத்தனும் அல்லரோதோழி

அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி  தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். நெடுநாள் ஆகிவிட்டது. அவன் இன்னும் வந்தபாடில்லை. தலைவி ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள். உடல் மெலிகிறது. தலைவியால் எதிலும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. தலைவியின்  ஏக்கம்  கவலை,உடல் வாட்டம் அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த தோழியால் அதற்கு மேலும் சும்மா இருக்க முடியவில்லை. தலைவன் மீது கோபம் கொள்கிறாள்.  அவனை அன்பில்லாதவன்  அதனால்தான்  உன்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டான் என்று கோபமாகப் பேசுகிறாள். தலைவன் தன்னைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டானே என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அவன்மீது பிறர் குறை கூறுவதையோ கோபமாகப் பேசுவதையோ அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை . கோபமாகப் பேசிய தோழிக்குப் பதிலாக அமைந்த ஒரு குறுந்தொகைப் பாடல் என்னை நெகிழ வைத்தது. இந்தப் பெண்களே இப்படித்தான் என்று சாதாரணமாக நினைத்துக் கடந்து போக முடியவில்லை. தலைவன் தலைவி இருவருக்கும் இடையில் ஊடல் இருக்கும். அந்த ஊடலுக்கு இப்படி ஒரு சிறப்புக் காரணம் இருப்பதை இந்தப் பாடலைப் படித்ததும் த...

மாதம் மும்மாரி பொழிய காரணம்

Image
மாதம் மும்மாரி பொழிய காரணம்  அரசர்  ஒருவர் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் நாடு எப்படி இருக்கிறது? நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? நாட்டில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்று நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும்  கேட்டுவிட்டுத்தான் தன்  வேலைகளைத் தொடங்குவார். அன்றும் அப்படித்தான்.  அரசவைக்கு வந்தார் மன்னர். அரசவை கூடியது.  "நாடு எப்படி இருக்கிறது ? அமைச்சரிடம் என்று கேட்டார். அதற்கு அமைச்சர், "மன்னா!வணக்கம். நாடு நன்றாக இருக்கிறது . உங்கள் ஆட்சியில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏது குறை என்று சொல்லிக்கொள்கிறார்கள்?" என்றார். "தாங்களாக கூறுகிறீர்களா? நாட்டு மக்கள் கூறினார்களா?" நாட்டு மக்கள்தான் கூறினார்கள். விளைச்சல் எல்லாம் எப்படி இருக்கிறது? மழை பொழிகிறதா? "அதற்கெல்லாம் குறைச்சல் இல்லை மன்னா...மாதம் மும்மாரி பொழிகிறது" "மாரி கேள்விப்பட்டிருக்கிறேன் . ஒரு மாறி...  உருமாறி கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன மும்மாரி? "என்று கேட்டார் மன்னர். மன்னரிடமிருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்...

மனிதநேய மாமணி எடிசன்

மனிதநேய மாமணி  எடிசன் "பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் " என்றார் வள்ளுவர். மனிதநேயத்தால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.எல்லா நற்பண்புகளுக்கும் உயிர் நீரோட்டமாக இருந்து இயக்குவது  மனிதநேயம். மனிதநேயம்தான் ஒரு  மனிதனைப் பற்றிய உண்மையான மதிப்பீடு.  மனிதநேயம் மிக்க பெருமகனாக வாழும்  மனிதர்களைத்தான் சமூகம்கொண்டாடும்.  அந்த வகையில் ஆசிரியர் சமூகம் கொண்டாடும்  மனிதநேய மாண்பு மிக்க நல்லாசிரியர் ஸ்டீபன் எடிசன் ஆசிரியர் என்றால் மிகையாகாது . இளமைப் பருவம் : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடி ஆசிரியரின் சொந்த ஊர் .   ஆனால் அவர் தன் சொந்த ஊரில் வாழ்ந்ததைவிட  மற்ற ஊர்களில் வாழ்ந்த நாட்கள்தான் அதிகம். அப்பா ஞானமாணிக்கம்  டேவிட் மற்றும் அம்மா ராஜரெத்தினம் இருவருமே ஆசிரியர்கள். அதனால் ஊர் ஊராக இடமாறுதல் பெற்றுச் செல்லும் சூழ்நிலை இருந்தது . அதன் காரணமாக எட்டுக்கும் மேற்பட்ட ஊர்  மக்களோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறுவயதிலேயே "யாதும் ஊரே யாவரும்  கேளிர் "என்ற பொதுமைக் கருத்தில் அசையா நம்பிக்கை கொண...