இரவல் சேலை
இரவல் சேலை போஸ்ட்மேன் வந்துவிட்டுப் போனதிலிருந்து அப்படியே உட்காந்திருந்தாள் பாலாமணி. என்றுமில்லாதபடி ஏதேதோ வந்து மனதைக் குமைய வைத்தது. இப்படிச் செய்தால் என்ன ....அப்படிச் செய்தால் என்ன.... இன்டர்வியூக்கு உடைஉடுத்திப் போவதிலும் கவனம் வேண்டும் என்று எங்கோ படித்த ஞாபகம். ஆனால் உடுத்திப் போகும்படி ஒரு சேலைகூட நல்லதா இல்லை. என்ன செய்வது.... நாலு பொட்ட பிள்ளைகளோடு பிறந்துவிட்டாலே இப்படித்தான். ஒருநாள் ஒருத்தி கட்டின சேலையை மறுநாள் மற்ற தங்கச்சி கட்டிக்கொள்வாள். ஆத்திர அவசரத்திற்கு உடுத்திட்டுப் போகும்படி ஒரு நல்ல சேலை மிச்சம் வைக்க மாட்டாளுக.. இப்படி திடுதிப்பென்று இன்டர்வியூ வந்து நிற்கும் என்று யாரு நினைச்சா..... நாளையே போகணுமாம்... "அம்மா உடுத்துட்டுப் போக நல்லசேலை இல்லம்மா..." ...