Posts

Showing posts from January, 2024

தமிழ்ப் போட்டி

Image
தமிழ்ப் போட்டி  ஒரு மாலை வேளை. அங்குமிங்கும் உலாவிய சிங்கம் காதுகளில் எங்கிருந்தோ வந்த இனிய பாடல் ஒன்று கேட்க ஆரம்பித்தது. என்னே இனிமை! என்னே இனிமை! மெய்மறந்து அப்படியே நின்றார் காட்டுராசா. "தமிழுக்கு அமுதென்று பேர் -அந்தத்  தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்...." மறுபடியும் மறுபடியும் அந்தப் பாடல் வரிகள் நினைவில் வந்து இனிமை தந்தன. இப்போது சிங்கத்திற்கு காட்டிலுள்ள விலங்குகளின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது என்று அறிய வேண்டும் என்று ஒரு ஆசை. அதனால் காட்டில் வாழும் விலங்குகளுக்கு எல்லாம் ஒரு போட்டி அறிவித்தார் காட்டு ராசா சிங்கம்.          ஆலமரம் போட்டி நடை பெறும் இடமாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் பதினொரு மணிக்கு எல்லா விலங்குகளும ஆலமரத்தடியில் வந்து கூடும்படி  அறிவிப்புக் கொடுக்கப்பட்டது.    அதன்படி  எல்லா விலங்குகளும் வந்து ஆலமரத்தடியில் வந்து கூடின.          சிங்கத்தின் தலைமையில் போட்டி தொடங்கியது.          ஆசி...

நல்லை அல்லை

நல்லை அல்லை  நிலவைப் பார்த்துப் பாடாத புலவர்கள் இல்லை. நிலவின்மீது காதல் கொள்ளாத கண்கள் இல்லை. காதலர்கள் கண்களில் முதலில் தெரிவது நிலவென்னும் அழகு தேவதை தான். அதனை மூடி மறைத்து , வெட்கப்பட வைத்து, எட்டிப் பார்க்க வைத்து , ஓடி ஒளிய வைத்து  முந்நூற்று அறுபது  பாகையிலும் நின்று பார்த்துப் பார்த்து கவிதை எழுதியதை வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். .நிலவு சுடுகிறது என்பார்கள். மகிழ்ந்திருக்கிறோம். நிலவு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டுகிறது என்பார்கள். நாமும் கூடவே ஒளிந்து விளையாடியிருப்போம். ஆனால் நிலவைப் பார்த்து நீ நல்லவளே  இல்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கிறீர்களா? யாருங்க நிலவைப் பார்த்து நல்லவள் இல்லை என்று சொல்லுவார்? சொல்லியிருக்காளே.... இங்கு ஒரு பெண்ணே நீ நல்லவள் இல்லை என்று சொல்லியிருக்கிறாளே ஒருவேளை பொறாமையாக இருக்குமோ? பெண்ணுக்குப் பெண் எதிரியாகி விட்டாளோ? ஏன் அப்படிச் சொன்னாள்? எதற்காக நிலவு அவளுக்கு நல்லவள் இல்லாதவள் ஆகிவிட்டாள். அப்படி என்ன குற்றம் கண்டுவிட்டாள் அவளிடமே கேட்டுவிடுவோம் வாருங்கள். அவள் குற்றஞ்சாட்டிய பாடல் இதோ உங்களுக்காக... " கருங்கால் வேங்கை வீயுகு...

பினாங்கு மாப்பிள்ளை

பினாங்கு மாப்பிள்ளை  கண்ணம்மோ ... கண்ணம்மோ... மூச்சிரைக்க கண்ணம்ம வீட்டு வாசலில் வந்து நின்றான் முத்துசாமி. "ஏல...என்ன இந்த ஓட்டம் ஓடியார... என்னமும் அவசரமா?" "அம்மதான் உங்கள் கையோட கூட்டிவரச் சொன்னாவ" "இந்தா வாரேன்னு சொல்லு" "வாங்க... உடனே வரணுமாம்" "அப்படி என்ன தல போற அவசரம்" "வாயேன்....நேரதாத போக்கிட்டு எங்க பசு கூட்டிப் போடப்போவுது... அதுதான் அம்ம கூப்பிட்டாவ..." கையைப்பிடித்து இழுத்தான் முத்துசாமி. கூடவே போனார் கண்ணம்ம. இப்படி நாளும் கண்ணம்மயை தேடி யாராவது வந்துவிடுவர். மாட்டுக்கு ஒண்ணுன்னாலும் மனுசனுக்கு ஒண்ணுன்னாலும் கூப்பிடுங்க கண்ணம்மய என்பார்கள். கண்ணம்மாவைத்  தெரியாதவர் யாரும் அந்த ஊரில் இருக்க முடியாது.  அவ்வளவு பிரபலம். எல்லாருக்காகவும் ஓடி ஓடி  உதவும் குணம்.  ஊருல ஒருத்தருக்கு ஒன்று என்றால்  முதல் ஆளாக ஆஜர் ஆகி நிற்பது  கண்ணம்ம மட்டும்தான். கைப்பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கணுமா... கண்ணம்மயத் தவிர யாரும் அவ்வளவு பக்குவமா மருந்து கொடுத்திட முடியாது. எந்த வீட்டுல குழந்தை பிறந்தாலும் கண்ணம்மாவின் ஆஜர் இருக்கும். கண்ண...

உண்ணுநீர் விக்கினான்

உண்ணுநீர் விக்கினான்  காதலும் வீரமும் இல்லாமல் தமிழரின் வாழ்வியலைச்  சொல்லிவிட முடியாது. வீரத்தை சொல்லும்போதும் காதல் சொல்லப்படும். காதலைச் சொல்லும்போதும் வீரம் சொல்லப்படும். இப்படி தமிழரின் வாழ்வியலில் காதலும் வீரமும் இணைந்தே தான் போய்க்கொண்டிருக்கும். காதல் வருவது ஒன்றும் இயற்கைக்கு முரணான ஒரு செயலல்ல. அனைவருக்கும் காதல் வரும். ஒரு தரப்பினர் முளையிலேயே  காதலைக் கிள்ளி எறிந்துவிட்டு தான் உண்டு. தன் வேலை உண்டு என்று பொருளீட்டும் சிந்தனையில் போய்க்கொண்டே இருப்பர். மற்றொரு தரப்பினரோ  காதலே வேலையாகச்   செய்து கொண்டிருப்பர். எந்தக் தரப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் முளைவிட்ட காதல் நினைவுகள் என்றும் நெஞ்சோடு நிலைத்திருக்கும். அதனைக் காலத்தாலும்  அழித்துவிட முடியாது. அப்படியே கால வெள்ளத்தில் காணாமல் போயிருந்தாலும்  அங்கங்கே படிக்கும் சில செய்திகள், கவிதைகள் நம்மை இளமை கால நினைவுகளில் மூழ்கடிக்க வைக்கும். காதல் செய்வது அவரவர் விருப்பம். காதல் செய்யாதிருந்தவர்கள் அடுத்தவர் செய்யும் காதலை எட்டிப் பார்த்து மகிழ்தல் உண்டு.  காதலித்தவருக்கும் காதல் செய்ய...

திருமண வாழ்த்து

Image
திருமண வாழ்த்து  நன்றென இறைவன்  நினைத்திருக்க நல்லருள் மணமகன் கரம் பிடிக்க சிறு புள்ளாய் மனம் சிறகடிக்க தேவதையாய் மணமகள் உடன் நடக்க ஆல்போல் வாழ்வு தழைத்திருக்க அருகுபோல் பரம்பரை நிலைத்திருக்க மூங்கில் போல் சுற்றம் தழுவி நிற்க இல்லறம் இன்பம் இனித்திருக்க  வாழ்வீர் என்றும் இணையாக! வாழ்த்துகிறோம் உறவுகள் மகிழ்வாக வாழ்க பல்லாண்டு நலமாக!           - செல்வபாய் ஜெயராஜ் 

வெள்ளிவிழா வாழ்த்து

வெள்ளிவிழா வாழ்த்து வாழும் நாட்கள் வரமாக வாழ்க்கை என்றும் இனிதாக இணைத்தார் இறைவன் துணையாக இருபத்தைந்து ஆண்டுகள் உவப்பாக வந்தது வெள்ளிவிழா மகிழ்வாக வசந்தம் வீசும் நறுமணமாக   வாழ்வாங்கு வாழ்வீர் இணையாக  வாழ்நாள் எல்லாம் துணையாக வரமாய் தொடரட்டும்  நலமாக இல்லறம் என்றும் சிறப்பாக இணைந்த நாட்கள் நல்நினைவாக பொன்விழா கனவு  நனவாக வாழ்த்தி மகிழ்கிறோம்  நிறைவாக!             -செல்வபாய் ஜெயராஜ் 

பணிநிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமதி . வசந்தி தேவராஜன் B.Sc,B.Ed,        த. தா. காய்க்வாட் தமிழ்ப் பள்ளி ,        மும்பை - 37                                                                                 ,  புகழ் மண்டிக் கிடக்கும் திண்டிவனத்தேன் வேணுகோபால் சகுந்தலா இணையர் தேன் மடியில் விழுந்த கன்னித்தேன் வசந்தத்தேன் மன்னர் தேவராஜனுக்கு வாய்த்தக் கட்டித்தேன்! மக்கள் இருவர் அழகுத்தேன் அமுதத்தேன்  கூட்டுத்தேன் சுவை கூட்டுத்தேனென உரைத்தேன் பணித்தேன் என்பதை உம்மிடம் படித்தேன் பண்புத்தேன்  பணிவுத்தேன் உம்மில் கற்றேன்! அறிவியல் பணிமனையில் உம்பணி கண்டேன் கண்கள் பனித்தேன் இமைப்பதைத் துறந்தேன் கலைத்தேன் கலைப் படைப்பினை வியந்தேன் உள்ளத்தில் உன்னை ஓவியமாய் வரைந்தேன்! தமிழ்ச்சங்க பரிசினை அள்ளுவதைக் கண்டேன் எப்படி ...

பாரி இறக்கக் காரணம் கபிலரா?

பாரி இறக்கக் காரணம் கபிலரா? கடையேழு வள்ளல்கள் யார் யார்? அவர்களின் சிறப்புக்குக் காரணம் என்ன? அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதுவும் பாரியைப்பற்றி அறிந்துகொள்ள  மிகுந்த ஆவல் இருக்கும். காரணம் கடையேழு வள்ளல்கள் என்றதுமே முதலாவதாக உதடுகள் உச்சரிக்கும் பெயர் பாரி. பாரி, ஓரி ,காரி,பேகன், அதியமான் ,ஆய் நல்லி இவர்கள் ஏழுபேரும் கடையேழு வள்ளல்கள் என்று அறிந்திருக்கிறோம். அவர்களுள் முதன்மையானவன் முதல்தரமானவன் என்று பாரியைக் கொண்டாடுகிறோம். இந்தக் கொண்டாட்டங்களுக்குக் காரணம் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று ஒற்றை வரியில் சொல்லி கடந்து போய்விட முடியுமா? இந்த  ஒற்றைக்  காரணத்திற்காகவா பாரி வள்ளல்களுள் முதல் வரிசையில் வைத்துக் கொண்டாடப்படுகிறான். இதைவிடப் பெரிய அளவில் உதவுகிற புரவலர்கள் இல்லையா? வாரி வாரி வழங்கும் வள்ளல்கள் இல்லையா? இப்படியொரு கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கலாம். முல்லைக்குத் தேர் கொடுத்த அந்த வள்ளலைப் பார்த்துவிட வேண்டும். பார்த்து ஓரிரு கேள்விகளுக்கு விடை கண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இதயத்தில் சுமந்த கேள்விகளோடு நடந்தேன். இடையி...

அம்மிக்கல்லும் அறுசுவையும்

அம்மிக்கல்லும்  அறுசுவையும்  கோபம் வந்தால் சிலருக்கு  என்ன பேசுவது என்றே தெரியாது. உன்னை எல்லாம் அம்மிக் கல்லில் வைத்து அரைக்க விட்டால்தான் நீயெல்லாம் அடங்குவாய் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மிக்கல்லே இல்லை. இதில் எங்கே அம்மிக்கல்லில்  அரைக்க விடுவது? வழக்கொழிந்துபோன ஒரு பொருள் இன்றும் நம் பேச்சைவிட்டு வழக்கொழிந்து போகாமல் தொடர்ந்து நம்மோடு  பயணித்துக் கொண்டிருக்கிறது.    அப்படியானால் அந்த அம்மிக்கல்   எங்கோ நம் ஆழ்மனதில் பதிந்துபோன   ஒரு சொல்லாகத்தான்   இருந்து கொண்டிருக்கிறது.  அம்மிக்கல்லில் அரைக்க விடுவேன்  என்பது தவறான சொல்லா....?  அப்படியானால் நமக்குத் தண்டனை   தருவதற்காகத்தான் நம்மை அம்மிக் கல்லில்  அரைக்க வைத்தார்களா...?  இப்படி என்னென்னவோ எண்ணங்கள் நம்  சிந்தையில் எழலாம்.    எது எப்படியோ அம்மிக்கல்லில் அரைத்தல்  என்பது ஒரு கலை.  அது அம்மியில் அரைத்தவர்களுக்குத்தான்  தெரியும்.  எத்தனையோ சுவைகளையும் சுகங்களையும்  தொலைத்துக் கொண்ட...

மும்மாரி பொழிகிறதா

மும்மாரி பொழிகிறதா  அரசர் ஒருவர் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் நாடு எப்படி இருக்கிறது? நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? நாட்டில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்று நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும்  கேட்டுவிட்டுத்தான் தன்  வேலைகளைத் தொடங்குவார். அன்றும் அப்படித்தான்.  அரசவைக்கு வந்தார் மன்னர். அரசவை கூடியது.  "நாடு எப்படி இருக்கிறது ? அமைச்சரிடம் என்று கேட்டார். அதற்கு அமைச்சர், "மன்னா!வணக்கம். நாடு நன்றாக இருக்கிறது . உங்கள் ஆட்சியில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏது குறை என்று சொல்லிக்கொள்கிறார்கள்?" என்றார். "தாங்களாக கூறுகிறீர்களா? நாட்டு மக்கள் கூறினார்களா?" நாட்டு மக்கள்தான் கூறினார்கள். விளைச்சல் எல்லாம் எப்படி இருக்கிறது? மழை பொழிகிறதா? "அதற்கெல்லாம் குறைச்சல் இல்லை மன்னா...மாதம் மும்மாரி பொழிகிறது" "மாரி கேள்விப்பட்டிருக்கிறேன் . ஒரு மாறி... உருமாறி கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன மும்மாரி? "என்று கேட்டார் மன்னர். மன்னரிடமிருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத அமைச்சருக்கு என்ன...

கையில் ஊமன் கண்ணிற் உணங்கல்

கையில் ஊமன் கண்ணிற் உணங்கல்  சங்க இலக்கியம் என்றதுமே  அது படித்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதுபோல முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு ஒதுங்கி  நின்று விடுவோம். காரணம் பல சொற்கள் பொருள் புரியாததுபோல இருப்பதுதான். படித்தவர்களும் இதைப்போய் யார் படிப்பார்கள் என்று சாதாரணமாகக் கடந்து போய்விடுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள் மட்டும் மாங்குமாங்கென்று படித்து தமிழ் இலக்கிய இன்பத்தை நுகர்ந்து மகிழ்ச்சியில் வாழ்ந்து  கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே சங்க இலக்கியம் படித்தவர்களுக்காக எழுதி வைக்கப்  பட்டதா? நமது வாழ்வியலைச் சொல்வதுதான் இலக்கியம். நாம் பார்த்த... நம்மோடு பழகிய ..! இன்றும் நாம் கண்டு சுவைக்கத் கூடிய நடைமுறை செயல்பாடுகளைக் கண்முன்  கொண்டு நிறுத்துவதாகவே இலக்கியங்கள்  இருக்கின்றன.   படிக்கப் படிக்கத் தான் இந்த  உண்மை புரியும்.   அந்த அழகியலை  அருமையான சொல்லோவியத்தை சங்க இலக்கியப் பாடல்களில்  நான் கண்டு வியந்ததுண்டு. நான் வியந்து பார்த்த அந்தக் காட்சியை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்த விழைகிறேன். அந்தக் காட்சி உங்களுக்குள்ளும் இலக...

ரூத்தும் நகோமியும்

ரூத்தும் நகோமியும்    காட்சி - 1 இடம் :  சமவெளிப் பகுதி உறுப்பினர்கள் : நகோமி ,ரூத் ,ஓர்பாள் நகோமி : யெகோவா உங்களையும் உங்கள்                   குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக ஓர்பாள் : நம்மையும் ஆசீர்வதிப்பாராக நகோமி: அன்னையே| ஏன் எங்களை பிரித்துப் பேசுகிறீர்கள்.                    நகோமி : காரணமாகத்தான் ஓர்பாள் : என்ன காரணம் என்று நாங்கள்                    அறிந்து கொள்ளலாமா? நகோமி : இன்னும் எவ்வளவு காலம்தான்                     என்னோடு சேர்ந்து கஷ்டப்படப்போகிறீர்கள்.                     போதும். இதுவரை நீங்கள் பட்ட                     கஷ்டங்கள் போதும். ரூத் : என்னம்மா சொல்ல வருகிறீர்கள் நகோமி : நீங்கள் உங்கள் பெற்றோரிடம்          ...

முதலைக் கண்ணீர்

முதலைக் கண்ணீர் போலிகள் நிறைந்த உலகம் இது. எது போலி எது அசல் என்று தெரியாதபடி போலிகளின் நடிப்பால் திணறிப் போய் நிற்கிறோம். சிலருக்குப் பொசுக் பொசுக்கென்று கண்ணீர் வரும். சிறிது கவலையாகப் பேசிவிட்டால் போதும். கண்களைக் கண்களைத் துடைப்பார். நமக்கு அவர்மீது ஒரு நல்லெண்ணம் ஏற்பட்டு விடும். நமக்காக வருந்த ஓர் உயிர் இருக்கிறது என்று நம்பி எளிதில் அவர் வலையில் விழுந்து விடுவோம். அவருடைய கண்ணீர்  போலியாக செயற்கைத் தனமாக வேண்டுமென்றே வடிப்பதாக இருக்கலாம். அது என்றாவது ஒருநாள் நமக்குத் தெரிய வரும். அப்போது "முதலைக் கண்ணீர்  வடித்திருக்கிறான்" என்போம். ஏன் முதலைக் கண்ணீர் என்று சொல்கிறோம்.? யானைக் கண்ணீர் என்று சொல்லலாம். பூனைக்கண்ணீர் என்று சொல்லலாம். ஏன் மாட்டுக் கண்ணீர் என்று கூட சொல்லலாம். ஏன் முதலைக் கண்ணீர் என்றனர் என்ற கேள்வி எழலாம். முதலைக்கும் கண்ணீருக்கும் என்ன சம்பந்தம் ? முதலை எந்தக் காலத்தில் கண்ணீர் வடித்தது? எதற்காக வடித்தது? அப்படியே வடித்திருந்தாலும் நம்மால் காண முடியுமா? தண்ணீருக்குள்ளேயே கிடக்கும் முதலையின் கண்களில் இருந்து வடியும் நீர் கண்ணீர் என்று எப்படி அறிவது? ஒர...

செல்லரித்த ஓலை செல்லுமோ

செல்லரித்த ஓலை செல்லுமோ? விளம்பரங்கள் இல்லா பொருட்கள் விற்பனையாகாது என்ற ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைத்து விட்டோம். எதற்குத் தான் விளம்பரம் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் விளம்பரம்.... விளம்பரம்... விளம்பரம். விளம்பரப்படுத்தப்படும் பொருளுக்குக் கொடுக்கும் தர வரிசையைப் பொறுத்து அந்தப் பொருட்களின் சந்தை மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும். பொருட்களுக்கு இது சாத்தியம். மனிதர்களுக்கு இது சாத்தியமா என்றால் இல்லையா ஆமாவா என்ற குழப்பமான இடத்தில்தான் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களுக்கும் விளம்பரம் வந்து விட்டது. விளம்பரம் இல்லாமல் எந்த வியாபாரமும் நடைபெறுவதில்லை என்னும் போது மனிதர்கள் மட்டும் விதிவிலக்கு என்ன? திருமணத் தகவல் மையங்கள் பெருமளவில் பலுகி பெரிய அளவில் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கின்றன. திருமணத் தகவல் மையங்களில் பதிவு செய்யாவிட்டால் திருமணமே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். ஆனால் இந்தத் தகவல் தொழில்நுட்பங்கள் எல்லாம் இல்லாக் காலத்தில் திருமணங்கள் எப்படி நடைபெற்றன என்ற கேள்வி எழுகிறதல்லவா? தரகர்கள் மூலமாக இருக்குமோ? இல்லை தூது அனுப்பி பேசி முடித்து இர...

கடவுள் வேண்டும்

கடவுள் வேண்டும்  ஓடி வந்து வீட்டிற்குள்  எட்டிப் பார்த்தான் ரவி. அம்மா கட்டிலில் படுத்திருந்தார். அருகில் போய் நின்று கொண்டான். அம்மாவையே மூச்சிரைக்கப் பார்த்துக் கொண்டு நின்றான். சாதாரணமான நாளாக இருந்தால் அம்மா எதுக்கு இப்படி தலைதெறிக்க ஓடி வர்ற....மெதுவா வந்தா என்னவாம் என்று திட்டியிருப்பார். ஏனின்று கண்டும் காணாமலும் மௌனமாகக் கிடக்கிறார்? மெதுவாக அம்மா என்று அழைத்த படி அம்மா மீது கையை வைத்தான். சில்லென்ற இருந்தது. திடீரென்று என்ன இது? அம்மா பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறாளே ஒரு பயம் வந்து அப்பிக் கொண்டது. கைகால் நடுங்குவது போல் இருந்தது. அம்மா... அம்மா உருட்டிப் பார்த்தான் ரவி உணர்வில்லாதது போல கிடந்தார்....அம்மா..அம்மா.. ."அம்மா...எவ்வளவு தேரம் கூப்பிடுவது...பசிக்கும்மா..சோறு போடு" அழுதுப் பார்த்தான் . அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை . "போம்மா.. நான் உன்கூட பேச மாட்டேன் " கோபமாக பேசியபடி முழங்கால்களுக்குள் தலையைப் புதைத்தபடி திண்ணையில் போய் தலை கவிழ்ந்து சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டான். எவ்வளவு நேரம் இருந்திருப்பான் என்று தெரியவில்லை. அப்படியே தூங்கி கீழே சரி...