போகி பிறந்த கதை
போகிப் பண்டிகை பிறந்த கதை கதை இல்லாமல் பண்டிகைகள் இல்லை. துரோகிக்குக் கதை இருக்கும்போது போகிக்குக் கதை இல்லாமல் இருக்குமா என்ன? போகிக்கும் கதை ஒன்று இருக்கிறது. ஒரு கடினமான சூழலுக்குப் பிறகு கிடைக்கும் நன்மையைக் கொண்டாடி மகிழ்வது தான் பண்டிகைகள். அந்தவகையில் போகியும் கடினமான காலத்தைக் கடந்து வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவிக்கும் முகமாகவே கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பழையவை ஒழிந்தன. தொல்லைகள் தொலைந்தன. கர்வம் ஒழிந்தது. களிப்பு வந்தது. புதியவை புகுந்தன. புத்தொளி பிறந்தது என்ற ஒரு புதுமையான எண்ணத்தோடு போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து பழைய குப்பைகளை எல்லாம் முற்றிலுமாக அகற்றி தூய்மையோடு வருங்காலத்தை எதிர் நோக்கி கொண்டாடப்படும் பண்டிகை போகிப் பண்டிகை. போகிப் பண்டிகை பற்றிய புராணக் கதை ஒன்று உள்ளது. மழை கடவுள் இந்திரன். நீரின்றமையாது உலகம். நீர் என்றால் உயிரல்லவா? நீராதாரம் மழை. இந்திரனுக்கு எப்போதுமே மனதில் ஒரு கர்வம் உண்டு. என்னால்தான் மாதம் மும்மாரி பொழிந்து நாட்டில் நல்ல விளைச்சல் ஏற்படுகிறது என்று ஆணவமாக இருப்பான்...