அம்மா வேணும்
அம்மா வேணும் பள்ளி வாசல் வரை உற்சாகமாக வந்த தமிழரசனுக்கு அதற்கு மேல் செல்ல கால் எழவில்லை. ஒரு கணம் அப்படியே நின்று பள்ளியையே பார்த்தான். பள்ளிக்குள் செல்வதா வேண்டாமா என்று ஒரு தாவா மனதிற்குள் வந்து அவனை அப்படியே நிறுத்தி வைத்தது. நாலு நாளாக பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர் கேட்டால் என்ன சொல்வது ? எப்படி சமாளிப்பது.? மற்ற மாணவர்களைப் போல சட்டென்று பொய் பேசி பழக்கம் இல்லை. உண்மையைச் சொல்லி விடலாம். ஆனால் மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்கள் . தன் உண்மை நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே வெதும்பி நின்றான். நினைக்க நினைக்க கூச்சமாக இருந்தது. ஏன் இப்படி ? எனக்கு மட்டும் ஏன் இப்படி? கடவுளைக் கண்டு கேட்க வேண்டும் போல இருந்தது. கேட்டால் பதில் கிடைக்கவா போகிறது.? கடவுள் மீதுள்ள கோபத்தை உள்ளுக்குள்ளே புதைத்து விட்டு ஊமையாக நின்றிருந்தான். மற்ற மாணவர்கள் கிண்டலாகப் பேசுவது இப்போதே காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது. ...