தன்வினை பிறவினை
தன்வினை பிறவினை விளக்கம் ஒரு செயலைத் தானே செய்வது தன்வினை எனப்படும். ஒரு செயலைச் பிறரைக் கொண்டு செய்விப்பது பிறவினை எனப்படும். எடுத்துக்காட்டாக சேர்வான்,சேர்ப்பான் என்ற இரண்டு சொற்களையும் எடுத்துக் கொள்வோம். தானே சேர்தலாகிய தொழிலைச் செய்கிறான்.ஆதலால் சேர்வான் என்பது தன்வினை. சேர்ப்பான் என்பது வேறு யாரையோ சேரும்படி இவன் செய்வான் என்று பொருள்படுகிறது. அதனால் சேர்ப்பான் என்பது பிறவினையாயிற்று. தன்வினை செயப்படுபொருள் குன்றிய வினையாகவோ செயப்படுபொருள் குன்றாத வினையாகவோ இருக்கும். பிறவினை செயப்படுபொருள் குன்றாத வினையாகவே இருக்கும். இப்போது செயப்படுபொருள் குன்றிய வினை , செயப்படுபொருள் குன்றா வினை என்றால் என்ன என்ற கேள்வி எழலாம். செயப்படு பொருளை ஏற்காத வினை செயற்படு பொருள் குன்றிய வினை எனப்படும். எதை? யாரை? என்ற இரண்டு கேள்விகளுக்கு விடை தரமுடியாத வினை செயப்படுபொருள் குன்றிய வினை எனப்படும். எடுத்துக்காட்டாக போனான் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். எதைப் போனான்? யாரைப் போனான்? என்று கேள்விகள் கேட்க முடியுமா? முடியாதல்லவா? வாசிக்கும் போதே தவறாக இருப்பது புரிகிறதல்லவா? இத...