Posts

Showing posts from October, 2022

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்....

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்.... கையில் ஊமன்.... அருமையான உவமை. சிந்திக்க வைக்கும் உவமை. நம்மைப் பிடறியில் தட்டி புரிய  வைத்த உவமை. சில நேரங்களில் நம்மால் எதுவுமே பேச முடியாத நிலையில் இருப்போம். பேசத் தெரியும். ஆனால் பேச முடியாதபடி சூழல் அமைந்திருக்கும். கையைப் பிசைந்து கொண்டு நிற்போம். என்ன சொல்ல? ...!என்ன சொல்ல? ஒன்றும் சொல்ல முடியலியே... குறுக்கும் நெடுக்குமாக நடப்போம். பல்லை நறநறவென்று கடிப்போம். பார்ப்பவர்கள் எல்லாம் ஏன் இவன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறான்? இவனென்ன கோழையா? என்று காது கேட்கும்படியாகப்  பேசுவார்கள். ஆனால் என்ன செய்வது? சூழல் அப்படி அமைந்து போயிற்றே. இப்படிப்பட்ட சூழ்நிலை நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். நான் கையாலாகாத நிலையில் இருக்கிறேன். என்னைத் தனியாக விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கடந்து போகப் பார்த்திருப்போம். சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். இதுதான் கையில் ஊமன் நிலை. இதே நிலையில்தான் குறுந்தொகையில்  தலைவன் ஒருவன் இருந்திருக்கிறான். அவனிடம் அவன் நண்பர்கள்  ஏன் இப்படி என்று கேட்டபோது நான் கையாலாகாத நிலையில் இருக்கிறேன...

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.....

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.... அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் "                      குறள் : 428 அஞ்சுவது- பயப்படத் தக்கவற்றிற்கு அஞ்சாமை -பயப்படாதிருப்பது பேதைமை - மதியீனம்,அறியாமை அஞ்சுவது - அஞ்சத் தக்கனவற்றிற்கு அஞ்சல் - பயப்படுதல் அறிவார் - அறிவுடையார் தொழில் - செயல் பயப்படத் தக்க செயல்களுக்குப் பயப்படாதிருப்பது அறியாமையாகும். பயப்படத் தக்க செயல்களுக்குப் பயப்படுதல் அறிவுடையவர் செயலாக இருக்கும். விளக்கம் : எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று சிலர் மார்தட்டித் திரிவர். தான் மட்டும்தான் வீரன். மற்றவர்கள் எல்லாம் தன்னைவிட மட்டம் என்று காட்டிக் கொள்வதற்காகச் செய்யப்படும் தம்பட்டம். இது எல்லா இடங்களிலும் சாத்தியப்படுமா என்றால் இல்லை என்கிறார் வள்ளுவர். 'பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும்.'  நான் பயப்பட மாட்டேன் என்று  பாம்பை மிதித்தால் பாம்பு கொத்தத்தான் செய்யும். அஞ்ச வேண்டிய செயல்கள் சில உண்டு. அதற்கு அஞ்சித்தான்  ஆக வேண்டும். தவறான செயல்களில் ஈடுபட அஞ்ச வேண்டும். உண்மைக்குப் புறம்பாகப் பேச ...

சங்க இலக்கியத்தில் காதல்

சங்க இலக்கியத்தில் காதல் காதலும் வீரமும் இல்லாமல் தமிழரின் வாழ்வியலைச்  சொல்லிவிட முடியாது. வீரத்தை சொல்லும்போதும் காதல் சொல்லப்படும். காதலைச் சொல்லும்போதும் வீரம் சொல்லப்படும். இப்படி தமிழரின் வாழ்வியலில் காதலும் வீரமும் இணைந்தே தான் போய்க்கொண்டிருக்கும். காதல் வருவது ஒன்றும் இயற்கைக்கு முரணான ஒரு செயலல்ல. அனைவருக்கும் காதல் வரும். ஒரு தரப்பினர் முளையிலேயே  காதலைக் கிள்ளி எறிந்துவிட்டு தான் உண்டு. தன் வேலை உண்டு என்று பொருளீட்டும் சிந்தனையில் போய்க்கொண்டே இருப்பர். மற்றொரு தரப்பினரோ  காதலே வேலையாகச்   செய்து கொண்டிருப்பர். எந்தக் தரப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் முளைவிட்ட  காதல் நினைவுகள் என்றும் நெஞ்சோடு நிலைத்திருக்கும். அதனைக் காலத்தாலும்  அழித்துவிட முடியாது. அப்படியே கால வெள்ளத்தில் காணாமல் போயிருந்தாலும்  அங்கங்கே படிக்கும் சில செய்திகள், கவிதைகள் நம்மை இளமை கால நினைவுகளில் மூழ்கடிக்க வைக்கும். காதல் செய்வது அவரவர் விருப்பம். காதல் செய்யாதிருந்தவர்கள் அடுத்தவர் செய்யும் காதலை எட்டிப் பார்த்து மகிழ்தல் உண்டு.  காதலித்தவருக்கும் காதல் செ...

சொல் விளையாட்டு

  சொல் விளையாட்டு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவர்கள் முதுசூரியன், இளஞ்சூரியன் என்ற  இரட்டைப் புலவர்கள் ஆவர். இந்த இரட்டையர்கள் எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தேதான் செல்வர். இவர்களுள் ஒருவருக்கு கண் பார்வை கிடையாது. மற்றொருவரால் நடக்கமுடியாது. கண் தெரியாதவர் காலில்லாதவரைத் தோளில் சுமந்து கொண்டே செல்வார். காலிலில்லாதவர் வழி காட்ட கண்ணில்லாதவர் சுமக்க என்று  இவர்கள் பயணம் இருக்கும். இருவருமே நல்ல புலமை மிக்கவர்கள் இவர்கள் பாடல்களில் தமிழ் கொஞ்சி விளையாடும். சொற்களை வைத்து  விளையாட்டுக் காட்டும்  வித்தை இவர்கள் பாடல்களில் மிகுதியாக இருக்கும். கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்பதால்  "கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்" என்று இவர்கள் புகழப்பட்டனர். இவர்களுடைய பாடல்கள் அனைத்தும் முன் பாதியை ஒருவர் பாட பின்பாதியை இன்னொருவர் பாடி முடிப்பதாகவே இருக்கும். அப்படி இவர்கள் பாடிய  பாடல்களுள்  ஒன்று உங்களுக்காக.... " அக்காலைப் பொழுதினிலே முக்காலை ஊன்றி மூவிரண்டு போகும்போது ஐந்து தலை நாகமொன்று ஆழ்ந்து கடித்ததுவ...

இறைகாக்கும் வையகம் எல்லாம்.....

இறைகாக்கும் வையகம் எல்லாம்..... இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் "                      குறள்: 547 இறை - வேந்தன், நல்லது காக்கும்- காப்பாற்றும் வையகம் - உலகம் எல்லாம் - அனைத்தும் அவனை - அந்த நபரை முறை - நீதி காக்கும் - காப்பாற்றும் முட்டா- வழுவாமல் செயின் - செய்தால் அரசன் நீதி வழுவாமல் ஆட்சி  செய்வானானால் அவனுடைய அரசை  அவன் செய்யும் நீதியே முன்வந்து காப்பாற்றி நிற்கும். விளக்கம்: நாட்டு மக்களை எல்லாம் காப்பாற்றுபவன் அரசன்.அவனுடைய ஆட்சி  நீதி வழுவாத ஆட்சியாக இருக்க வேண்டும். உயர்வு தாழ்வு பாராட்டாத நற்பண்பு கொண்ட ஆட்சியாக இருக்க  வேண்டும். துன்பம் கண்டவிடத்து ஓடிச் சென்று துயர் துடைக்கும் நற்பண்பு ஆட்சியாளனிடம் இருக்க வேண்டும். செங்கோல் முறைதவறாது ஆட்சி நடைபெற வேண்டும். இத்தனை பண்புகளோடு ஆட்சி நடத்தும் ஆட்சியாளனை காப்பாற்ற வேறு யாரும் வர வேண்டியதில்லை. அவன் செய்த நல்லாட்சியே அவனைக் காப்பாற்றும். நீதி தவறாது ஆட்சி செய்யும்போது பல தடங்கல்கள் வரலாம். தடைகளைக் கண்டு இடைமுறிவு செய்து  ப...

சங்க இலக்கியத்தில் உவமை

Image
சங்க இலக்கியத்தில் உவமை  சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை. அதைக் கதையாக எழுதலாம். கதாப்பாத்திரங்கள் சுமந்துவரும் கருத்தைச் சுவைத்து மகிழலாம்.  உவமை நயத்தை அள்ளிப் பருகலாம். காட்சிகளைக் மனத்துக்குள் வரைந்து களிப்பேருவகை கொள்ளலாம். பருகப் பருகத் தாகம் தணியாது மேலும் வேட்கையைத் தூண்டும். அதிலிருக்கும் ஏதோ ஒரு சுவை நம்மைக் கட்டி இழுக்கும். தம்மோடு பிணிக்கும்.  சொல்லப்படும் காட்சிகள். கையாளப்படும் உவமைகள். கண்முன் வந்து நின்று பேசும். என்னோடு என் இடத்திற்கு வந்து பார் என்று நம்மை கூடவே அழைத்துச் செல்லும். நம் உள்ளத்தோடு உறவாடும்   உயிரோட்டமான வரிகள் யாவும் உளவியல் அறிந்த சொல்லாடல்கள். ஒரு செய்தியைச் சொல்வதற்காக புலவர்கள் கையாளும் உவமைகள் அது நடந்த இடத்திற்கே நம்மை அழைத்துச்   செல்ல வேண்டும். தான் எண்ணிய சொல்ல வந்த கருத்து வாசிப்போரைச் சென்றடைய வேண்டும். அவரை தம் பக்கமாக ஈர்க்க வேண்டும். இதுதான் படைப்பாளியின் நோக்கமாக இருக்கும். கவிதையில் சொல்லப்படும் நிகழ்வைக் கண்முன் கொண்டுவந்து  காட்சிப்படுத்த வேண்டும். இதோ இங்கே ஒரு புலவர்...

நோவற்க நொந்தது அறியார்க்கு....

  நோவற்க நொந்தது அறியார்க்கு.... "நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து"                                  குறள் : 877                                   நோவற்க - துன்பத்தைச் சொல்லாதிருப்பீராக நொந்தது - துன்பப்பட்டது,வருந்தியது அறியார்க்கு- தெரியாதவர்க்கு மேவற்க-  பொருந்தாதிருப்பீராக மென்மை - வலியின்மை பகைவர்- எதிரிகள் அகத்து- உணரும்படியாக துன்பம் அறியா நண்பர்களிடம்  துன்பத்தைப்பற்றிச் சொல்லக்கூடாது. நம் பலவீனத்தைப் பகைவர் உணரும்படி  நடந்து கொள்ளக்கூடாது. விளக்கம் : துன்பத்தைப் பற்றி அறியாதவனிடம் நம் துன்பத்தைப் பற்றிப் பேசினால் அவனுக்கு அந்தத் துன்பத்தின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது. பசியே அறியாதவனிடம் பசியைப் பற்றிப் பேசினால் பசியின் கொடுமையை அவனால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? பட்டவனுக்குத்தான் தெரியும் நோவும் அதனால் ஏற்படும் மன உளைச்சலும் வலியும்.  துன்பம் என்பதைச் சரியா...

கைம்மாறு வேண்டா கடப்பாடு...

Image
கைம்மாறு வேண்டா கடப்பாடு.... " கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு"                                 குறள்: 211 கைம்மாறு- எதிர்உதவி வேண்டா - எதிர்பார்க்காது கடப்பாடு - கடமை மாரிமாட்டு - மேகத்திற்கு என் - என்ன ஆற்றும் - செய்யும் கொல்லோ-( அசைச்சொல்) உலகு - உலகம்  உதவியை எதிர்பார்த்து உதவுவது அல்ல உதவி . ஒருவர் செய்த உதவியைத் திரும்பச் செய்துதான் ஆக வேண்டும் என்றால் மழை செய்யும் உதவிக்கு  இந்த உலகம் என்ன   கைம்மாறு செய்துவிடப் போகிறது.? விளக்கம் : நீரின்றமையாது உலகம். அந்த நீரைத் தருவது மழை. அந்த மழையின் உதவி இல்லை என்றால் உயிர்கள் உயிர்வாழ முடியாது. மழையின் இந்த மிகப்பெரிய உதவிக்காக நாம் என்ன உதவி செய்துவிட முடியும்? எனக்கு திரும்பவும் வேண்டும் நேரத்தில்  இந்த உயிர்கள் உதவி செய்யும்  என்ற ஓர் எதிர்பார்ப்பிலா  மழைபொழிகிறது?   இல்லையே. உயிர்களுக்கு உதவுவது நம் கடமை என்ற நோக்கில் தான் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உதவ...

கிட்டாதாயின் வெட்டென மற

கிட்டாதாயின் வெட்டென மற கொன்றை வேந்தனில் ஔவை  எழுதிய அருமையான வரிகளும் ஒன்று "கிட்டாதாயின் வெட்டென மற" கொன்றை வேந்தன் என்றதும்  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லறமல்லது நல்லறமன்று.... என்று மனப்பாடமாகப் படித்தப் பாடல்  வரிகள் முந்தி வந்து வரிசை கட்டி நிற்கும். அவற்றுள் , "கிட்டாதாயின் வெட்டென மற" என்ற வரியையும் படித்திருப்போம். இன்றுவரை நம் நினைவில் நிலைத்திருக்கும் அருமையான வரி பொருளும்  தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அது இளமையிலேயே எதற்காகச் சொல்லித் தரப்பட்டது ? என்று என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? " இளமையில் கல்வி பசுமரத்தாணி " என்பார்கள்.. விழுமியங்கள் ,வாழ்வியல் நீதிக் கருத்துக்கள் இளமையிலேயே விதைப்பட்டால்  அது காலத்துக்கும் நம் நினைவில் இருக்கும். அதன்படி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். ஆனால் நாம் பல நேரங்களில் எந்த நோக்கத்திற்காக விழுமியங்கள் சொல்லித்தரப்பட்டன என்பதையே மறந்து விடுகிறோம். இந்த மறதிதான் மறக்கக்கூடாதவற்றை மறக்க வைக்கும். மறக்க வேண்டியவற்றை மறக்க முடியாமலும...

காலாழ் களரில் நரியடும்...

Image
காலாழ் களரில் நரியடும்..... " காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு "                            குறள் :500 கால் -பாதம் ஆழ் - ஆழமான களரில் -சேற்றுநிலத்தில் இருக்கும்போது  நரி - நரி அடும் - கொன்றுவிடும் கண் - விழி அஞ்சா - அஞ்சாத வேல் - நுனி கூர்மையான ஓர் ஆயுதம் ஆள்- ஆண்மகன்,வீரன் முகத்த- முகத்தையுடைய களிறு - யானை வேலேந்திய வீரரை தன் தந்தங்களால் கோர்த்தெடுக்கும் வலிமை கொண்ட யானையையும்  அதனுடைய கால்கள் சேற்றில் அகப்பட்டபோது நரிகள்   எளிதாகக் கொன்றுவிடும். விளக்கம் : யானை உருவத்தில் பெரியது.  வலிமைமிக்கது. யானையின் வலிமையின்முன் கையில் வேல்  வைத்திருக்கும் வீரரும் எதிர்த்து நிற்க அஞ்சுவர். அப்படியே எதிர்த்து நின்றாலும் தோற்றுப் போவது உறுதி. இப்படி வலிமையுடைய யானையானது ஓர் இக்கட்டான சூழலில் இருக்கிறது. அந்த நேரத்தில் வலிமையில் குறைந்தவர்களும் எதிர்த்து நின்று  வெற்றிபெற முடியும். யானையின் கால்கள் சேற்றில்  அகப்பட்டுக் கொள்கின்றன. இப்போது யானையால் சேற்றிலிருந...

பயனில்லாதவை ஏழு

பயனில்லாதவை ஏழு ஒரு பொருள் தேவையானதா? தேவை இல்லாததா? பயனளிக்கக்கக் கூடியதா? பயனிளிக்காததா? இதனை நிர்ணயிப்பது எது? காலம்...சூழ்நிலை...அந்த மனிதன் இருக்கும்நிலை இவைதான்  அதனைத் தீர்மானிக்கும். ஒருவருக்குத் தேவையான ஒரு பொருள் இன்னொருவருக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். ஒருவருக்குப் பயன்படுவது இன்னொருவருக்குப் பயன்படாமல் போகலாம். அதனால் சில கருத்துக்கள் மாற்றி  மாற்றி பேசப்படும். ஆளுக்கு ஆள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதுண்டு. ஆனால் சில கருத்துகள் எப்படித்தான் மாற்றி மாற்றிப் பேசினாலும் மாற்ற முடியாதபடி எல்லாக் காலத்திற்கும் எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ள தக்கதாக இருக்கும். அதுதான் காலத்தால் அழியாத, அழிக்க முடியாத கருத்தாக நம்மோடு நடை பயின்று கொண்டிருக்கும். அந்தவகையில் காலத்தால் அழிக்க முடியாத அருமையான கருத்துக்களைக்  கொண்ட ஒரு நூல்  விவேக சிந்தாமணி. அனுபவ மூதுரைகள் அடங்கிய அறிவுக் கருவூலம் விவேக சிந்தாமணி என்றுதான் சொல்ல வேண்டும். இது செய்யுள் வடிவில் இயற்றப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. சிந்தனைக்கு உகந்த கருத்துக் குவியல் என்பது மட்டும் உண்மை. நீதிக்...

நான் வேலைக்குப் போறேன்

நான் வேலைக்குப் போறேன் "எனக்கு வேலை கிடைத்திருக்கிறது... எனக்கு வேலை கிடைத்திருக்கிறது .." பாலாவிற்கு உரக்க கத்த வேண்டும் போல இருந்தது. எத்தனை ஆண்டுகள் இதற்காக காத்திருந்திருப்பாள்.? காத்திருந்திருப்பாள் என்பதைவிட ஏங்கியிருப்பாள்? இனி எனக்கு வேலையே கிடைக்காதோ என்று அம்மாவிடம் சொல்லிச் சொல்லி அழுதிருப்பாள். நான் ஒரு ஆக்கம் கெட்டவள் என்று சொல்லிச் சொல்லி புலம்பியிருப்பாள். எல்லாவற்றையும் அவள் கையில் வைத்திருக்கும் ஒற்றை கவர் மாற்றிவிட்டது. ஆம்....அவள் கையிலிருக்கும் கவரில்தான் அவள் தலையெழுத்தை மாற்றி எழுதிய லட்டர் இருக்கிறது. கவரைத் திருப்பித் திருப்பி பார்த்தாள். கண்களில் ஒற்றிக் கொண்டாள். கண்களில் திரண்டு நின்ற கண்ணீர்த் துளிகள் கவரில் விழுந்து இனி இந்தக் கண்ணீர்த் துளிகள் உனக்குரியவை அல்ல என்பதுபோல  காணாமல்  போனது இனி நாளும் எனக்கு மகிழ்ச்சி தான். நான் விரும்பிய  ஆடை வாங்கி அணியலாம். சுதந்திரமாக இருக்கலாம். எதற்காகவும் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. இனி யாரும் என்னை ஒரு கேள்வி கேட்க முடியாது.... நான் சுதந்திரப்பறவை....என்று  என்னென்னவோ கற்பனையில் மிதந்தாள். கிழிந்...

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் .....

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்.... " இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்"                              குறள் :. 1062 இரந்தும்- பிச்சையெடுத்தும் உயிர் - உயிர் வாழ்தல் - வாழ்தல் வேண்டின்- வேண்டியிருந்தால் பரந்து- அலைந்து திரிந்து கெடுக - கெடுவானாக உலகு - உலகினை இயற்றியான் - படைத்தவன் பிச்சையெடுத்து உயிர் வாழவேண்டிய நிலை சிலருக்கு ஏற்பட்டால் அதற்குக் காரணமான உலகைப் படைத்தவன் அலைந்துதிரிந்து  கெடுவானாக விளக்கம் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர்.பிறப்பு  ஒன்றாய்  இருந்தால் வாழ்க்கையும் ஒன்றுபோல் இருக்க வேண்டுமல்லவா? அப்படியிருக்க ஒருவர் வசதியாக வாழ்கிறார். இன்னொருவர் உணவுக்கே  அடுத்தவரிடம்  கையேந்தும் நிலையில் இருக்கிறார்.   ஏனிந்த ஏற்றத்தாழ்வு? இப்படி ஓர் ஏற்றத்தாழ்வோடு படைத்தவன் யார்? அப்படி ஓர் ஏற்றத்தாழ்வோடு  ஒரு சிலர் படைக்கப்பட்டிருந்தால் குற்றம் யாருடையது? படைத்தவன்தானே குற்றவாளி. குற்றவாளிக்குத் தண்டனை  கொடுக்க வேண்டுமல்லவா? அதனால்...

வினாவிடைப் பாடல்கள்

வினாவிடைப் பாடல்கள்   பாடல் இல்லாத விளையாட்டு பருப்பு இல்லாத கூட்டு போன்றது." என்பார்கள். சுவை இருக்காது. சிறுவர்கள் விளையாட்டில் கண்டிப்பாக பாடல் இருக்கும்.இருக்க வேண்டும். பாடல்கள் பாடிக்கொண்டே விளையாடுவதில் சிறுவர்களுக்கு ஓர் அலாதி இன்பம். பள்ளிப் பருவம் பாடி மகிழ்ந்த பருவம். கூடி விளையாடிய பருவம். குதுகலமாய் இருந்த பருவம். பள்ளிப் பருவத்தில் படித்தவை தான் இன்றுவரை நம் கூடவே நடை பயிற்றுக்கொண்டிருக்கின்றன. நடத்திக் கொண்டிருக்கின்றன  என்பதை யாரும் மறுக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. விளையாட்டுப் பாடல்கள்  உலக அறிவை ஊட்டுகின்றன. மொழித்திறனை  வளர்க்கின்றன. சொல்லாட்சித் திறனைப் பெருகுகின்றன. அதிலும் வினா விடைப்பாடல்கள்  மொழிப்பயிற்சி, நாப்பயிற்சி போன்ற பயிற்சிகளை வளர்ப்பவையாக இருக்கும். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது சிறுவர்கள் தம்மையும் அறியாமலேயே அதிகமாக கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. புத்தகத்தையும் தாண்டி மேலும் அதிகமான சொற்களைக் கையாளும் திறனும் வளர்கிறது.சிந்திக்கும் ஆற்றல் ஏற்படுகிறது.  தன்னொத்த வயதினருடன்  பேசும்போது அச்சமில்லாம...

க்ளூ கொடுங்களேன் ப்ளீஸ்

க்ளூ கொடுங்களேன் ப்ளீஸ்  அக்கா அக்கா .... ஒரு க்ளூ கொடுங்கக்கா....ப்ளீஸ் ஒரு க்ளு கொடுத்தால் உடனே கண்டு பிடிச்சுடுவேன்" "இதுவரை நான்கு க்ளூ கொடுத்தாயிற்று.... இதற்கு மேலும் என்னால் க்ளூ கொடுக்க முடியாது. தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லேன். இதற்குபோய் ஒரு க்ளூ கொடு...ஒன்பது க்ளூ கொடு என்று கெஞ்சுறா....?" "கொஞ்சம் புரியும்படி  க்ளூ கொடுத்தால் சட்டென்று பதில் சொல்லிடுவேன்." "தெளிவாக சொல்லணும் என்றால் விடுகதைக்கான விடையை  நேரடியாக நானே சொல்லி விடலாமே இதற்குப் போய் க்ளூவா? இப்படி க்ளூ கொடுங்கள்  க்ளூ கொடுங்கள் என்று கேட்கிறியே.? க்ளூ என்றால் என்ன?என்று தெரியுமா ?" "க்ளூ என்றால் க்ளூ தான்" "க்ளூ என்பதன் பொருள் என்ன?" "க்ளூ என்றால்  துப்பு கொடுத்தல் என்று பொருள். வேண்டுமென்றால் கூகுளில் தேடிப்பார்த்து நான் சொல்வது சரியா? தவறா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்." "  இதை மட்டும் சரியாகச் சொல். ஆனால் நான் சொன்ன விடுகதைக்கு மட்டும் விடையைப் சரியாகச்  சொல்லாதே... உன்னிடம் போய் விடுகதை  சொன்னேன் பாரு....." "இப்போதா...