மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" இது வேடிக்கையாக சொல்லப்படும் பழமொழி. ஒரு பெரிய மனிதர் தன் தோட்டத்துக் காவலுக்காக நாயை கல்லில் செதுக்கி, தன் தோட்ட வாசலில் வைத்திருந்தார். நாய் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தது. அதை உண்மையிலேயே நாய் என்று நினைத்து தோட்டத்துப் பக்கம் எந்த கள்வர்களும் வருவதில்லை. ஒருநாள் அந்தபக்கமாக வந்த ஒரு மனிதருக்கு சந்தேகம். "என்னடா...நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இந்த நாய் அந்த இடத்தைவிட்டே அசையாமல் அப்படியே கிடக்கிறது" என்று அருகில் சென்று தொட்டுப் பார்த்தார். கல்லில் செதுக்கப்பட்ட நாய். இப்போது அவருடைய கண்களில் அது நாயாகத் தெரியவில்லை. கல்லாகவே தெரிந்தது. கல் என்ற நினைப்பு வரும் முன்னர் அது நாயாகத் தெரிந்தது. கல் என்ற நினைப்பு வந்த பின்னர் நாய் என்ற எண்ணம் முற்றிலுமாக மறைந்து போயிற்று. "முழுகல்லில் செதுக்கப்பட்டடுள்ளதா? கருங்கல்லா....கடப்பா கல்லா....?இப்படி கல்லைப்பற்றிய சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தது. இப்படித்தான் கல்லைக் கண்டபோது நாயைக் காணவில்லை. நாயைக் கண்டபோது கல்லைக் காணவில்லை...