முதல் வகுப்பில் நான்
முதல் வகுப்பில் நான் அண்ணனைப் போல எனக்கும் பள்ளிக்குப் போக ஆசை. தினம்தினம் காலையில் கையில் பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பி விடுவேன். அம்மாவுக்கு என்னைப் புத்தகப் பையோடு பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கும். "என் புள்ளைய பாரு படிக்கணும் படிக்கணும்னு என்னா ஆசைப்படுது பாரு. என்று பெருமையாகச் சொல்லித் தூக்கி முத்தம் கொடுத்துவிட்டு வேலைக்குப் போய்விடுவார். "மூன்று வயதில் யார் பள்ளியில் சேர்ப்பார்கள் "என்று முதுகில் இரண்டு அடி அடித்து பையை பிடுங்கி வைத்துவிடுவாள் அக்கா. எவ்வளவு நாள்தான் பொறுத்திருப்பது? ஒருநாள்... கையில் டம்ளரோடு பள்ளி வாசலில் போய் நின்றிருந்தேன். பள்ளியில் பால் கொடுத்தார்கள். வாசலில் நின்று எட்டி எட்டிப் பார்த்தேன். பால் ஊற்றிய ஒரு பையன் வந்து கையைப் பிடித்தான். கையை உதறிவிட்டு ஓடப் பார்த்தேன். அவன் விடுவதாக இல்லை. "தங்கச்சி பால் வேணுமா?"என் பதிலுக்குக்கூட காத்திராமல் 'நில்லு'என்று சொல்லிவிட்டு கையிலிருந்த டம்ளரைப் பிடுங்கி விட்டு பள்ளிக்குள் ஓடினான். எனக்கு அழுகையாக வந்தது. சற்று நேரத்தில் பால் டம்ளரை என்னிடம் நீட்டினான். படக்க...