திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினம் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" 1330 குறள் தந்த குறளோனை உலகமே கொண்டாடும் நாள். " கனியிடை ஏறிய சுளையும்_ முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் _காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும்_ தென்னை நல்கிய குளிரிள நீரும் இனியன என்பேன் எனினும் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்" என்னும் பாவேந்தர் வாக்கிற்கிணங்க என்னுயிராம் தமிழை உலக அரங்கில் உயர்த்திய திருவள்ளுவரைக் கொண்டாடும் நாள். வான் பொய்த்தாலும் பொய்க்கலாம் வள்ளுவரின் வாய்மொழி பொய்க்காது என பொய்யாமொழிக்கு மெய்யாய் முன்னுரை எழுதி அக்காலம் இக்காலம் எக்காலம் என்று இல்லாமல் எக்காலமும் எம்மோடு உறவாடிக் கொண்டிருப்பது திருக்குறள் என்று கொண்டாடி மகிழ்கிறோம். அந்தக் கொண்டாட்டம் எந்நாளும் தொடர வேண்டும். எல்லோராலும் அறியப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தை மாதம் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். மனிதன் மனிதனுக்கு இவ்வளவு அருமையாகச் சொல்லித்தர முடியுமா? என்று உலகையே புருவம் உயர்த்திப் பா...