பாரி இறக்கக் காரணம் கபிலரா?
பாரி இறக்கக் காரணம் கபிலரா? கடையேழு வள்ளல்கள் யார் யார்? அவர்களின் சிறப்புக்குக் காரணம் என்ன? அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதுவும் பாரியைப்பற்றி அறிந்துகொள்ள மிகுந்த ஆவல் இருக்கும். காரணம் கடையேழு வள்ளல்கள் என்றதுமே முதலாவதாக உதடுகள் உச்சரிக்கும் பெயர் பாரி. பாரி, ஓரி ,காரி,பேகன், அதியமான் ,ஆய் நல்லி இவர்கள் ஏழுபேரும் கடையேழு வள்ளல்கள் என்று அறிந்திருக்கிறோம். அவர்களுள் முதன்மையானவன் முதல்தரமானவன் என்று பாரியைக் கொண்டாடுகிறோம். இந்தக் கொண்டாட்டங்களுக்குக் காரணம் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று ஒற்றை வரியில் சொல்லி கடந்து போய்விட முடியுமா? இந்த ஒற்றைக் காரணத்திற்காகவா பாரி வள்ளல்களுள் முதல் வரிசையில் வைத்துக் கொண்டாடப்படுகிறான். இதைவிடப் பெரிய அளவில் உதவுகிற புரவலர்கள் இல்லையா? வாரி வாரி வழங்கும் வள்ளல்கள் இல்லையா? இப்படியொரு கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கலாம். முல்லைக்குத் தேர் கொடுத்த அந்த வள்ளலைப் பார்த்துவிட வேண்டும். பார்த்து ஓரிரு கேள்விகளுக்கு விடை கண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இதயத்தில் சுமந்த கேள்விகளோடு நடந்தேன். இடையி...