Posts

Showing posts from September, 2025

பாரி இறந்த கதை

பாரி இறந்த கதை கடையேழு வள்ளல்கள் யார் யார்? அவர்களின் சிறப்பு பெற்றதன் காரணம் என்ன? அறிந்து கொள்ள வேண்டும் என்ற  ஆசை இருக்கும். பாரி, ஓரி ,காரி,பேகன், அதியமான் ,ஆய் இவர்கள் ஏழுபேரும் கடையேழு வள்ளல்கள் என்று சொல்லப்படுகின்றனர். அவர்களுள் முதன்மையானவன் முதல்தரமானவன் என்று பாரியைக் கொண்டாடுகிறோம். இந்தக் கொண்டாட்டங்களுக்குக் காரணம் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று ஒற்றை வரியில் சொல்லி கடந்து போய்விடுவோம். இந்த ஒரே ஒரு காரணத்திற்காகவா பாரி வள்ளல்களுள் முதன்மை வரிசையில் வைத்துக் கொண்டாடப்படுகிறான். இதைவிடப் பெரிய அளவில் உதவுகிற புரவலர்கள் இல்லையா? வாரி வாரி வழங்கும் வள்ளல்கள் இல்லையா? எனக்குள் ஒரு தேடல். முல்லைக்குத் தேர் கொடுத்த அந்த வள்ளலைப் பார்த்துவிட வேண்டும். பார்த்து ஓரிரு கேள்விகளுக்கு விடை கண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இதயத்தில் சுமந்த கேள்விகளோடு நடந்தேன். இடையில் கண்ணில் பட்டது ஒரு முல்லைக்கொடி. அருகினில் சென்றேன் .முல்லைக்கொடி படர கொழுகொம்பில்லாது அருகில் இருந்த கள்ளிச் செடியோடு கை கோர்த்து கம்பீரமாக நின்றது.  பாரி பார்த்த முல்லைக்கொடிக்கு அடித்த நற்பேறு இ...

சுரையாழ அம்மி மிதப்பு

சுரையாழ அம்மி மிதப்பு  இலக்கியங்களைப் படிக்கப் படிக்க இன்னும் வேண்டும் ...இன்னும் வேண்டும் என உள்ளம் கேட்கும். அதனால்தான் இலக்கியத்தை இலக்கிய இன்பம்  என்று சொல்லி மகிழ்கிறோம். இன்பத்தைத் தேடி ஓடும் ஓட்டம்தானே  இந்த வாழ்க்கை. இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் உள்ளுறைகள் பல நேரங்களில் எங்கிருந்து புறப்பட்டு வந்தது இத்தகைய சிந்தனைகளும் கற்பனைகளும் என வியக்க வைக்கும். சில உவமைகள் பல நினைவலைகளைக் கண்முன் காட்சிப்படுத்தி நிற்கும். அவற்றை உள்ளுந்தோறும் உவகை  மேலிடும். அவற்றோடு தொடர்புடைய மேலும் பல கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கும். ஏதோ ஒரு சிறுகதையை வாசித்த உணர்வைக் கொண்டு வந்து கண்முன் நிறுத்தும். ஒற்றை வரிக்குள் இவ்வளவு  செய்திகளா என உவகை மேலிட வைக்கும். வியந்து வியந்து பார்க்க  வைக்கும். அவ்வாறு நான் வியந்தும் மகிழ்ந்தும் மனதிற்குள் கொண்டாடிய இலக்கிய உவமைகள் ஏராளம் ....ஏராளம். அவற்றுள் ஒன்றே ஒன்றை எடுத்து உங்கள் முன் படைக்கிறேன். நற்குடியில் பிறந்த நல்லவர்கள் எல்லாம் வறுமையால் வாடுகின்றனர் ஆனால் கீழோர் எல்லாம் செல்வச் செழிப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்...

நாணமோ இது நாணமோ

நாணமோ இது நாணமோ பெண்களுக்கு உரிய நான்கு நற்பண்புகள் என்னவென்று கேட்டால் அச்சம்,மடம், நாணம்,பயிர்ப்பு என்று சொல்லிவிடுவீர்கள். அதனைக் கேட்டுக் கேட்டு பழகிவிட்டோம். அச்சம் என்றால் பயம். மடம் என்றால் அறியாமை. நாணம் என்றால் வெட்கம் பயிர்ப்பு என்றால் கூச்சம் என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதனால் அவற்றைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறோம். இந்த நான்கு பண்புகளும் பெண்களுக்கே  உரியது என்று உயர்த்திப் பேசி வருகிறோம். கொண்டாடி மகிழ்கிறோம். இதில் நாணம் மட்டும் பெண்களுக்கே உரிய சிறப்புப் பண்பாக கருதப்படுகிறது. ஆண்கள் நாணினால் எப்படி  இருக்கும்? சரியாக இருக்காது. நாணம் பெண்களிடம் மட்டும்தான் இருக்க வேண்டுமா? வேறு யாரிடமும் நாணம் இருக்கக்கூடாதா? மனிதர்களைத் தவிர வேறு யாரிடமும் நாணம் இருக்காதா? இருக்கக் கூடாதா? விலங்குகள் நாணுவதைப் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்தேன்.... யாரது விலங்குகள் முகத்தில் நாணத்தைப் பார்த்தது? நான்...நான்...நானேதான் என்கிறார் ஒரு புலவர். யாரப்பா அந்தப் புலவர்? அப்படி எந்த யானையிடம் ... எந்த இடத்தில் ...எப்போது யானை வெட்கப்பட்டு நின்றதைப் பார்த்தாராம்.? அவர...

மலை நாடன் நள்ளி

  மலை நாடன் நள்ளி  புலவர் ஒருவர் கண்டீரம்  நாட்டுக்குட்பட்ட தோட்டி மலைப் பகுதியில் வந்து கொண்டிருக்கிறார். காதுகள் அடைத்து கண் மங்குவதுபோல தெரிகிறது. கால்கள் தள்ளாடுகின்றன. இதற்குமேல் நடக்க முடியாது என்ற நிலை. நடக்கமுடியாமல்  ஒரு பலாமரத்தடியில் அமர்ந்துவிடுகிறார்.   அப்போது வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு வீரன் ஒருவன் அந்த வழியாக வருகிறான் பார்ப்பதற்கு வசதியான வீட்டுப் பிள்ளை போல தெரிகிறது. யாராயிருக்கும்?.  இளவரசனாக இருப்பானோ? இருக்கலாம்....இளவரசனாக இருந்தால் ஒருவேளை உதவி கிடைக்கலாம் .இப்படி ஒரு எண்ணத்தில் புலவர் எழும்ப முயன்றார். இளைஞனும் புலவரைப்  பார்க்கிறான். பார்த்த மாத்திரத்தில் புலவரின் நிலைமை புரிந்து போகிறது. அதற்குள் புலவர் கையைக் குவித்துக்கொண்டே எழுந்தார். " "ம்கூம்....அப்படியே இருங்கள்" என்று  இருக்கச் செய்தான் இளைஞன்.  அவனுடன் வேட்டைக்கு வந்த மற்ற இளைஞர்கள் இன்னும்  வந்து சேரவில்லை.  அங்குமிங்கும் பார்த்த இளைஞன் தானே தன் கையால் தீயை மூட்டினன்.  தான் கொன்று கொண்டு வந்த மானின் தசையை அதிலே வாட்டினான். ...

வீழ்வேன் என்று நினைத்தாயோ

வீழ்வேன் என்று நினைத்தாயோ  வயிற்றுக்காகத்தானே இந்தப்பாடு என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எண்சாண் உடம்பில் ஒரு சாண் வயிறே பிரதானம் என்று வாழ்பவர்களைப் பார்த்திருக்கிறோம். அதெல்லாம் ஒரு வாழ்க்கையா? வாழ்க்கை என்றால் எப்படி  இருக்க வேண்டும்? யாதோ பிறந்தோம்...இருந்தோம்... வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாது. எந்தக் கவலையும் இல்லா வாழ்க்கை  வாழணும். கவலை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைதான். ஆனால் இவை எல்லாம் நடக்குமா? நல்வினையோ தீவினையோ எல்லாம் இறைவன் செயல். நல்வினை எல்லாம் இறைவன் செயல். தீவினையுமா...? என்ற கேள்வி முன்னே வந்து  விடை கேட்டு நிற்கும். தீவினையும் அவன் செயல் என்றால் சற்று நெருடலாக இருக்கிறதே என்று கேட்கத் தோன்றும். "பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும் பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராய் இருப்பவர் இறைவன்" என்று பைபிளில் வாசிக்கவில்லையா? அப்படியானால் இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி? ஒன்றும் செய்யமுடியாது. அதுவும் இறைவன் கையில்தான் இருக்கிறது. இறைவனிடம் முரட்டுக் பக்தன் பிடிவாதம் பிடிப்பதுபோ...

படைப்புப் பல படைத்து

படைப்புப் பல படைத்து சங்கப் பாடல்களில் காதலும் வீரமும்  நிரம்ப இருக்கும். புலவர்கள் மட்டுமல்லாது மன்னர்களும்  புலவர்களுக்கு நிகராக பல பாடல்கள் பாடியுள்ளனர்.  வாழ்க்கையை அனுபவித்துப் பாடிய பல   பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணமுடியும்.  அறத்தோடு வாழ வேண்டும் என்று  அறவுரைகளைத் தம் கவிதையில் தந்தனர்.  வீரத்தைப் புகழ்ந்து பாடினர். எங்கெல்லாம் அன்பும் அறமும் இருக்கிறதோ அங்கெல்லாம் பாடல்கள் பாடி பரிசில் பெற பாணர்கள் கூட்டம் நிற்கும். புலவர்கள் வாழ்வாதாரத்திற்கு பணம் தேவை. தங்கள் தேவைகளை நிறைவு செய்ய மன்னர்களைத் தேடி சென்று  பாடல்கள் பாடினர். அரசர்களுக்கு அந்தத் தேவை இல்லை.  இருப்பினும் அரசர்களிடமும்  சிறந்த  புலமை இருந்திருக்கிறது. பொருளுக்காக பாட வேண்டிய தேவை இல்லாதபோதும் தமிழ் மீது கொண்ட காதல் மன்னர்களையும் பாடல்கள் பாட வைத்திருக்கிறது.  காணும் காட்சிகளை  தான் கண்டு மகிழ்ந்த  நெகிழ்ந்த ...கவினுறு  காட்சிகளைக்  பாடி  மகிழ்ந்திருக்கின்றனர். நம்மையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கின்றனர்.  எல்லாவற்றிற்...

கொங்குதேர் வாழ்க்கை

கொங்குதேர் வாழ்க்கை  காதல் என்று வந்துவிட்டால் அதில் மிகைப்படுத்தல் மிகுந்திருக்கும். காதலன் காதலியைப் புகழ்வதும் காதலி காதலனைப் புகழ்வதும் இன்று நேற்று நடப்பதல்ல. உலகம் தோன்றிய காலம் தொட்டு இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாளையும் இதுதான் நடக்கும். இதைத்தான் நாம் எல்லா  அகப்பாடல்களிலும் பார்க்கிறோம். படிக்கிறோம். உள்ளுக்குள்ளேயே சிரித்து மகிழ்கிறோம். பெயர் சுட்டப்படாத யாரோ இருவருக்குள் நிகழ்ந்த காதல் பொதுமையாக நம்முன் வைக்கப்படும் போது அந்த இலக்கிய  இன்பத்தை நம்மால் நுகரமுடிகிறது. அந்த உணர்வு அனைவராலும் ஈர்க்கப்படுகிறது. பெயர் சொல்லப்படாமல் தலைவன் தலைவி என்றே சொல்லப்படும்  ஒரு பொதுமைத் தன்மை அகப்பாடல்களில் இருப்பதைப் பார்க்கலாம். இப்போது தலைவன் ஒருவன் தன் அன்புக்குரிய தன்  தலைவியைப் பார்த்து எப்படி எல்லாம்   புகழ்வான் என்று வள்ளுவர் சொல்வதைக்  கேளுங்கள். " முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு" மூங்கில் போன்ற தோளையுடைய என் தலைவிக்கு தளிரே மேனி.  முத்தே பல் .உடல் மணமோ நறுமணம்.  வேலே மை உண்ட கண்  என்று தல...

மியாவாக்கி காடுகள்

மியாவாக்கி காடுகள் பள்ளியில் செய்தி வாசிக்கும் நேரம். தான் குறித்து வைத்திருந்த நான்கைந்து தலைப்புச் செய்திகளை கடகடவென்று வாசித்துவிட்டு தன் இடத்தில் போய் நின்று கொண்டான் செய்தி வாசித்த மாணவன். ஆசிரியருக்குப் பயந்து செய்தியைக் கவனிப்பதுபோல  அனைத்து மாணவர்களும் நின்று கொண்டிருந்தனர் . எனக்கு எப்போதுமே செய்தியில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால் கவனமாக செய்தி வாசிக்கும்போது கேட்பேன். இன்று செய்தி வாசித்த மாணவன் பெரிய நகரங்களில் மியாவாக்கி காடு வளர்ப்பு  திட்டத்தைச் செயல்படுத்த  முதல்வர் ஒப்புதல் வழங்கினார் என்று ஒரு செய்தியையும் வாசித்தான். மியாவாக்கி காடுகளா? புதுமையாக இருக்கிறதே! அது என்ன மியாவாக்கி காடுகள்? சதுப்பு நிலக் காடுகள், பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள்  படித்திருக்கிறோம். இந்த மியாவாக்கி காடுகளைப் பற்றி  கேள்விப்பட்டதாக என் நினைவில் இல்லை. ஒருவிதமான குழப்பமான மனநிலையில்  வகுப்பிற்குள் சென்றேன். "ஆசிரியரிடம் கேட்கலாமா? வேண்டாம். இதுகூட தெரியாதா?  இப்போ இதைத் தெரிந்து என்ன  செய்யப்போற? காடு வளர்க்கப் போகிறாயா? என்று திட...

வாடி இருக்குமாம் கொக்கு

வாடி இருக்குமாம் கொக்கு  மௌனம் ஓர் அழகான மொழி என்று சொல்வார்கள். எல்லாராலும் அமைதியாகவும் மௌனமாகவும் இருந்துவிட முடியாது. மௌனமாக இருப்பது கூட அறிவுள்ள ஒருவர்க்கு மட்டுமே  இயலக்கூடிய ஒன்று அமைதியாக இருக்கும் ஒருவரை அலட்சியமாக எண்ணிவிட வேண்டாம். அடக்கமாக இருப்பதால் எல்லாவற்றிற்கும் அடங்கிப் போய்விடுவார் என்று  தவறாக எண்ணிவிடவும் வேண்டாம். அந்த அமைதிக்கும் அடக்கத்திற்கும் காரணம் தேவையில்லாத இடத்தில் பேசுவதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம். சாதகமான சூழலுக்காகக்  காத்திருப்பதற்காகவும் இருக்கலாம். சாதகமான சூழல் என்றதும்  ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்குதான் கண்முன் வந்து நிற்கிறது. கொக்கு ஒருபோதும் மற்ற  பறவைகளைப் போன்று பரபரப்பாக சுற்றிக்கொண்டு திரியாது. வயலோரமாகவோ குளத்தோரமாகவோ  ஒன்றுமே தெரியாதது போல ஒற்றைக்காலில் நின்று  கொண்டிருக்கும். எதிலும் கவனம் செலுத்தாதது போலவே நின்றிருப்பதால் மீன்குஞ்சுகள் கொக்கின் கண்  முன்னாலேயே நீரில் நீச்சலடித்து  விளையாடும். ஆனால் கொக்கு இதனைக்  கண்டுகொள்வதே இல்லை.  அதனால் மீன்களுக்குக் கொக்கு  மீது...

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்  தமிழ் எழுத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும்  ஒவ்வொரு மாறுதலைச் சந்தித்து இன்றைய எழுத்து வடிவத்தைப் பெற்றுள்ளது. எழுத்து அப்படியே இருந்தால் என்ன? அதனை மாறுதலுக்கு உட்படுத்த  வேண்டிய அவசியம் என்ன? அதனால் என்ன பயன் நடந்துவிடப் போகிறது ? என்று கேட்பவர்களும் உண்டு. ஒரு எழுத்துக்கும் இன்னொரு சொல்லுக்குமிடையே உள்ள வேறுபாடு எளிதில் புலப்படாமை காரணமாக பொருள் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்ப்பதற்காகவும் எழுத்து எளிமையாக இருந்தால்தான்  அனைவரும் எளிதாக படிக்க முடியும் என்ற  கருத்திற்காகவும் இத்தகைய மாற்றங்கள் தமிழ் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய மாற்றங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தனவா  என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது சிறுசிறு மாற்றங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தம் அனைவராலும் அறியப்படாமலேயே  இருந்திருக்கிறது.  வீரமாமுனிவர் எழுத்து சீர்திருத்தம் செய...

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்  கையில் ஊமன்.... அருமையான உவமை. சிந்திக்க வைக்கும் உவமை. நம்மைப் பிடறியில் தட்டி புரிய  வைத்த உவமை. சில நேரங்களில் நம்மால் எதுவுமே பேச முடியாத நிலையில் இருப்போம். பேசத் தெரியும். ஆனால் பேச முடியாதபடி சூழல் அமைந்திருக்கும். கையைப் பிசைந்து கொண்டு நிற்போம். என்ன சொல்ல? ...!என்ன சொல்ல? ஒன்றும் சொல்ல முடியலியே... குறுக்கும் நெடுக்குமாக நடப்போம். பல்லை நறநறவென்று கடிப்போம். பார்ப்பவர்கள் எல்லாம் ஏன் இவன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறான்? இவனென்ன கோழையா? என்று காது கேட்கும்படியாகப்  பேசுவார்கள். ஆனால் என்ன செய்வது? சூழல் அப்படி அமைந்து போயிற்றே. இப்படிப்பட்ட சூழ்நிலை நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். நான் கையாலாகாத நிலையில் இருக்கிறேன். என்னைத் தனியாக விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கடந்து போகப் பார்த்திருப்போம். சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். இதுதான் கையில் ஊமன் நிலை. இதே நிலையில்தான் குறுந்தொகையில்  தலைவன் ஒருவன் இருந்திருக்கிறான். அவனிடம் அவன் நண்பர்கள்  ஏன் இப்படி என்று கேட்டபோது நான் கையாலாகாத நிலையில் இருக்கிற...

பவளவிழா வாழ்த்து

பவளவிழா வாழ்த்து தலைமையாசிரியை ஞானம் செல்லப்பா அவர்களுக்கு பொங்குபுனல் பொருநை நதி நடக்க  அங்கம் தகதகக்க அருமருந்துநீர் மணக்க  நெல்லை இராமையாபிள்ளை கோமதி  இணை மடி சுமக்க மெல்ல சிரித்தாள் ஞானம்  முகம் சிவக்க! மன்னன் செல்லப்பா மகிழ்ந்திருக்க மங்கை வளைகரம் பற்றினார்  மணம் முடிக்க மங்கல சாட்சியாய் மக்கள் நால்வர் பிறந்திருக்க மாட்சியாய் நடந்தது நல்லறம் என்றும் சிறக்க! ஆசிரியர் பணிக்காய் முல்லுண்டில் கால் பதிக்க தொடர் ஓட்டம் பவாய் மாதுங்கா பெண்டி பஜாரெனப் பயணிக்க மகுடம் சூட்டி முல்லுண்ட் அணி சேர்க்க பணி நிறைவு செய்தார் பெயர் நிலைக்க!  குன்றா மொழிப் புலமை கண்டோர் மலைக்க மண்டும் மதிகண்டு வான்மதி நாணி நிற்க பார்த்தேன்   படித்தேன் என  உள்ளம் குதுகலிக்க படி தேன்உண்டு திழைத்தே  கிடந்தேன்  இவரில் என் மதிமயங்க! பவளவிழா நாயகியாய் இவர் வீற்றிருக்க பார்த்த கண்கள் அத்தனையும் நிலைகொண்டிருக்க இளமையின் மறைபொருள் நன்மக்கள் வாய்த்தலென மொழிந்து வைத்த இலக்கணமே இவரென வழிமொழிகிறேன் பிசிராந்தையார் வழி நிற்க! பசிப்பிணிப் போக்கும் மருத்துவம் பெற்றோரிடம் கற்றிருக்க புச...

விதியின் பிழை

விதியின் பிழை இந்த உலகில் பிறந்தவர் அனைவரும்  மகிழ்ச்சியாக வாழத்தான் நினைக்கின்றனர்.ஆனால் நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைந்துவிடுகிறதா? நாம் ஒன்று நினைக்க வண்டி நம்மை அது போக்கில் எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. சில நேரங்களில் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிக்கும்  முன்னர் எதிர்பாராமல் எதிலோ முட்டி நிலைகுலைய வைக்கிறது. தடுமாறி நிற்க வைக்கிறது. தலை கீழாக விழ வைக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? யாரிடம் எல்லாமோ கேட்டுப் பார்க்கிறோம். யாருக்கும் சரியாகப் பதில் கூறத்தெரியவில்லை. ஆனால் பெரும்பாலோனோர் சொல்லும் பதில் விதி வலியது. விதிப்படித்தான் வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் அன்று விதித்த விதியை இன்று யாராலும் மாற்றி எழுத முடியாது  என்று சொல்லி கடந்து போய் விடுகின்றனர். . “ நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான்” – என்பதும் “ வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்;” – என்பதும் கேட்பதற்கும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் உள்ளன.  ஆனால் நடைமுறையில்?  நடப்பவற்றிற்கும் நாம் நினைப்பவற...

கண்ணதாசனை வளைத்த கம்பர்

கண்ணதாசனை வளைத்த கம்பர்  " பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளி வைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும்  வித்தாகவில்லை என்று பாடு"என்பார் கண்ணதாசன் இந்தப் பத்தாயிரம் மட்டும்தானா.? இன்னும் உண்டு சத்தானப் பாடல்கள். தனிப்பாடல் திரட்டிலிருந்து கம்பர் முத்தாக அள்ளி வைத்த பாடல்கள் பல உண்டு. அவற்றிலிருந்து  இதோ உங்களுக்காக ஒரே ஒரு பாடல். தன் மகள் காதல் வயப்பட்டு விட்டாள். அதனால் அவள்  உடல் மெலிந்தாள்.கைவளை கழன்று காணாமல் போனது. இதற்குக் காரணம் யார்? யாரைப் பார்த்தாள்? யார் மீது காதல் கொண்டாள்? வேறு எங்கும் செல்லவில்லையே...அப்படியானால்.... அப்படியானால்.... யாராக இருக்கும்? தாயின் மனம் கலக்கத்தில் கண்டபடி ஏதேதோ புலம்பத் தொடங்குகிறது. அன்றொருநாள் அவள் பார்த்த அவன் அவனேதான். அவன் ஆகத்தான் இருக்க வேண்டும் . யாராக இருக்க வேண்டும் என்கிறாள்? தாய் தன் மகளின் காதல் பற்றிச் சொல்கிறாள். கேளுங்கள். தவளை தத்திப் பாயும்போது  தவளையின் கால்கள் பூவில் பட்டு அதில் இருக்கு தேன் மழைபோல்   கீழே சொரியும் . அப்படிப்பட்ட வளமுடைய  பொன்னியாறு பாயும் வளநாடு.  அங்கு மாதத்தன் என்பவன...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமதி. மலர் ,தலைமை ஆசிரியை வீச்சும் பேச்சுமென எங்கும் கோலோச்சும் வாஞ்சிபுகழ் கோநகர் நெல்லை அகத்தாய் வஞ்சமில் நெஞ்சம்கொள் குலம் பிறந்தாய் கொஞ்சுதமிழ் மங்கைமலர்   விழிதிறந்தாய்!     இல்லறத்தில் அன்பரோடு இன்பம் தந்தாய்  நல்லற சாட்சியாய் நன்மக்கள் மூவர் கண்டாய் நல்லதோர் வீணையை நாளும் மீட்டி தலைமைக்கு உகந்த தகைமையாய் உயர்ந்தாய்! ஆறேழு பள்ளிகளில் அழகுதமிழ் நடைபயின்றாய் ஆழ்ந்த புலமைமிகு ஆசானெனப் பெயரெடுத்தாய் அலையாடு  மும்பைமொழி சொந்த மொழிபோல உரையாடும்  பெரும்பேறு வாய்க்கப் பல பெற்றாய் !          மலரன்ன மென்மை மனதில் கொண்டாய் இதழன்ன புன்முறுவல் இதழில் வைத்தாய் இன்னாரென்று பாராது எல்லோரையும் தொட்டாய் ஒன்னாரில்லை எனும்பேரோடு  எம்மை வென்றாய்! பருவம் வந்துவிட கனிந்திடும் கனிபோல பருவகால நிகழ்வு வந்தின்று ஓய்வுரைக்க நற்பருவம் வாய்ப்பாக வந்ததென்று  எப்பருவமும் வாழ்த்துரைக்க பணிநிறைவு பெற்றாய்! தொய்வில்லா அறப்பணி குமுகப்பணி தேர்ந்தாய் தொடர்பணி ஏற்று  தொண்டாய்த் தொடர்ந்திட விழைந்...