Posts

Showing posts from December, 2025

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து  முந்நூற்று அறுபத்தைந்து  முத்தான நாட்களின் முதல்நாள் முதல் விடியல் வெள்ளைக்  காகிதத்தை நீட்டி விரும்பியதை விரும்பியபடி வரைந்து கோலம் செய்திடுக  எனப் பணிக்க விரல்கள் காகித்தின்மீது   மெல்லத் தொட்டு விளையாட செயல்கள் சித்திரமாய் விரிய சத்தான உள்ளுறைக்கு  முத்தான அச்சாரமிட்டு  முத்தாய்ப்பாய் முன்னுரை எழுதி முதற்பக்கம் தொடங்கிடும் முனைப்பில் நிற்கிறோம் செயல்களால் நாள்தோறும் முத்திரை பதித்து  முதற்தரமான வினைகளால் முந்நூற்று அறுபத்தைந்து பக்கங்களும் கவின்பெற ஆண்டவன் அருள்மாரி  பொழிந்திடட்டும் ஆனந்தக் களிப்போடு ஆண்டு முழுவதையும் நடத்தித் தந்திடட்டும் வளமும் நலமும்  வாரி வழங்கும் ஆண்டாக இந்த 2026 அமைந்திட வாழ்த்துகள் 👍  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நினைவில் நிற்கும் ஆண்டு

நினைவில் நிற்கும் ஆண்டு  காலம் நல்லதொரு ஆசிரியர். கற்க மறுத்தாலும் வலிந்து இந்தாப் பிடி என்று வலிந்து வந்து ஏதேதோ செய்திகளைச் சொல்லிச்  செல்லும் ஏன் திணித்துச் செல்லும் என்றுதான் சொல்ல வேண்டும். படி படி என்று ஊட்ட முன் வந்து கையை நீட்டி நிற்கும். படிப்பதும் புறங்கையால் புறந் தள்ளிவிட்டு நான் பாட்டுக்குப் போவேன் என்பதும் அவரவர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது. ஆனாலும் நாள்தோறும் ஏதோ ஒரு பாடத்தைப் புகட்டிச் செல்வது காலத்தின் கடமையாக இருந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பாடங்கள் பலவிதம். எல்லாப் பாடங்களிலும் எல்லோராலும் எளிதில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது. புரிந்து கொள்ள முடியாத முன்னுக்குப்பின் முரணான கடினமான நடையுடன் கூடிய பாடங்கள் இருக்கலாம்.எளிதாக புரிந்து கொள்ள க்கூடிய பாடங்கள் இருக்கலாம். புரிந்து கொண்டவன் புத்திசாலி. புரிந்தாலும் புரியாதவர்கள்போல  கடந்து செல்பவர்கள்தான் பலர். யாருக்கோ வந்தது நமக்கென்ன என்று வாழ்பவர்களும் உண்டு.  இதில் நாம் எந்த ரகம் என்று நமக்குள் சுய பரிசோதனை செய்து பார்ப்போம். 2025 கற்றுத் தந்தது என்ன? என்ன கற்று தந்தது ஞாபகம் இல்லையே சற்று...

புத்தாண்டு வந்தாச்சு

புத்தாண்டு வந்தாச்சு  புத்தாண்டு வந்தாச்சு. புதிய டைரி வாங்கியாச்சு. புதுப்பக்கங்களில் புதுப்புது தீர்மானங்கள்  எழுதி வைச்சாச்சு. நான்கு நாட்களுக்கு புது டைரியைப் புரட்டுவதும் எழுதுவதும் நான் அது செய்ய மாட்டேன் இது செய்ய மாட்டேன் என்று  நிமிடத்திற்கு நாலு முறை நினைவு படுத்துவதும் என்று  ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அப்புறம்? அப்புறம் என்ன? பழையபடி எல்லாம் முன்பு நடந்தது போல்தான் நடக்கும். புது டைரி வாங்கி எழுதுவதும் புதிய தீர்மானங்கள் எடுப்பதும் வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றாகிப் போகிறது. இது நான். ஆனாலும் சிலரிடமிருந்து வேறுவிதமாக மனதின் ஒலி நேரடியாக ஒலிபரப்பட்டு வருவதைக் கேட்க முடிகிறது. புதிய தீர்மானங்கள் எடுத்திருக்கிறோம். பார்த்துக்கொண்டே  இருங்கள்.நாளையிலிருந்து நான்  புதிய ஆள் என்ற பேச்சு காற்றோடு என் காதுவரை வந்தாச்சு. என் காதுகளுக்கு மட்டுமா வந்திருக்கும்.? அனைவர் காதுகளுக்கும்   கண்டிப்பாக வந்திருக்கும். இந்தப் புத்தாண்டில் நான் அப்படி இருப்பேன். இப்படி இருப்பேன் என்று ஆளுக்கொரு  உருட்டு உருட்டிக் கொண்டிருப்பர். ஆனால் என்னடி மீனாட்சி ...

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை  2025 ஆம் ஆண்டின் கடைசி நாளில் நின்று கொண்டிருக்கிறோம். ஓடிய கால்கள் சற்றே ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்கின்றன. நான் எங்கே நிற்கிறேன்? எனக்குள் எழுந்த இந்தக் கேள்வி உங்களுக்குள்ளும் எழுந்திருக்கும். எல்லோருக்குள்ளும் நான் எங்கே நிற்கிறேன் என்பதுதான் முதன்மை கேள்வியாக முன் வந்து விடை கேட்டு நிற்கும். எங்கே நிற்கிறேன் என்றால்.... ஒரே வார்த்தையில் விடை கூறிவிட முடியுமா? என்னைக் கேட்டால்.... வேறு யாரிடம் கேட்பது? நிற்கும் இடம் நிற்கும் நிலை இந்த இடத்தைப் பிடிப்பதற்காக கடந்து வந்த பாதை அனைத்தும் கண்முன் விரிகிறது. காட்சிகளாக வந்து கை குலுக்கி வாழ்த்தி நிற்கிறது. நானா...நானா இங்கே நிற்கிறேன். நினைத்தாலே இனிக்கும்  நிகழ்வுகள் நெஞ்சைத் திக்குமுக்காட  வைக்கின்றன. நான் எதிர்பாராத உயரத்தில் வந்து நிற்கிறேன். இங்கிருந்து நாலாபக்கமும் பார்க்கிறேன். எவ்வளவு அழகான பாதை உடன் பயணித்த நல்ல மனிதர்கள் மறக்க முடியாத நல்ல நினைவுகளோடு இங்கே வந்து நிற்கிறேன் என்பதை நினைத்தாலே திக்குமுக்காட வைக்கிறது. மகிழ்ச்சி. இப்படித்தான் அனைவர் மனநிலையும் இருக்குமா? மாறுபட்ட  சூழ...

என்றும் கிழியாதென் பாட்டு

Image
என்றும் கிழியாதென் பாட்டு "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு " என்பார்கள். தன் பிள்ளை தனக்கு எவ்வளவு அழகுடையவனோ அதுபோல ஒரு படைப்பாளிக்கு தன் படைப்புகள்  மீது ஒரு அலாதி பிரியம் இருக்கும். எந்த ஒரு படைப்பையும் தரம் பிரித்துப் பார்க்க மனம் வராது. ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு சூழலில் எழுதப்பட்டதாக இருக்கலாம். அது அது அந்தந்தக் காலத்தில் பேசு பொருளாக இருந்திருக்கும். அல்லது விவாதிக்கப்பட வேண்டிய கருத்தாக இருந்திருக்கும். அதுபோலத்தான் புலவர்களுக்கும் தாங்கள் எழுதும் பாடல்கள் மீது ஒரு கர்வம் உண்டு. எந்தப் பாடலையும் குறைவாக எண்ண இடம் கொடுக்காது. இந்தச் சமூகத்தில்  ஒரு புலவர்க்கு கொடுக்கப்படும் இடம் என்ன ? பொருளுக்காகப் பாடுபவர் தானே? இன்று வறியவர் எந்த நிலையில் மதிக்கப்படுகிறாரோ அந்த நிலைக்குத்தான் புலவர்களைப் பற்றிய மக்கள் மனநிலையும் இருந்துகொண்டிருக்கிறது. நீங்கள் மதியுங்கள் மதியாமல் போங்கள். என் பாடல் மீது எனக்கு கர்வம் உண்டு என்கிறார் ஒரு புலவர்.  சோழ மன்னன் அவையில் ஒருநாள் ஔவை பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே  ஒரு  துணிவணிகன் வருகிறார். அவர் தான...

புண்ணியம் ஆம் பாவம் போம்

புண்ணியம் ஆம் பாவம் போம் தீமை ஒழிய வேண்டுமா ? நன்மை செய். இது யாருக்குத் தெரியாது? நன்மை செய்தால் தீமை காணாமல்  போகும். அனைத்து மதங்களும் இதைத்தானே சொல்கின்றன. பெரியவர்களும் இதையேதான் சொல்லித் தருவார்கள். எத்தனை பேர் சொல்லித் தத்தித் என்ன? ஒரு கருத்தினை மனதில் பதிய வைக்க வேண்டுமா? எத்தனை முறை வேண்டுமானாலும்  சொல்லலாம்.  இதையேதான் ஔவையும்  தனது  நல்வழியின் முதல் பாடலில் சொல்லித் தந்திருக்கிறார். வாருங்கள் ஔவை என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். புண்ணியம் ஆம்; பாவம் போம்; போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்; எண்ணுங்கால், ஈது ஒழிய வேறு இல்லை, எச் சமயத்தோர் சொல்லும்; தீது ஒழிய, நன்மை செயல்!                    நல்வழி பாடல் 1 "மனிதன் பிறக்கும் போதும் அவன் இறக்கும் போதும்  அவன் கூடவே வருவது அவன் செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான். சேர்த்து வைத்த சொத்தோ பொருளோ புகழோ படித்த படிப்போ பெற்ற பதவியோ எதுவும் கூட வரப் போவதில்லை. அதனால்  உலகில் வாழு...

கைவேல் களிற்றொடு போக்கி

கைவேல் களிற்றொடு போக்கி  " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு " என்று தமிழின், தமிழ் நாட்டின் அடையாளம் திருவள்ளுவர் என்ற பெருமை கொள்ள வைத்தவர். 1330 குறட்பாக்களைத் தந்தவர். அறத்துப்பால்  பொருட்பால் இன்பத்துப்பால் என்று முப்பாலையையும் தந்து எப்பால் உனக்கு வேண்டுமோ அப்பாலை எடுத்து தப்பாமல் வாழ்க என்று வாழ்த்தி நிற்பவர். ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்தவர். "கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டி குறுகத் தரித்தக் குறள் " என்று அனைவரையும் கொண்டாட வைத்தவர். இப்படி எல்லாத் தரப்பினராலும் கொண்டாடப்படும் வள்ளுவரின் ஒவ்வொரு குறளும்  ஒவ்வொரு கதை பேசும். அப்படி என்னோடு கதை பேசி இப்படியொரு வீரனா என்று என்னை வியக்க வைத்து  கலங்க வைத்த குறள் ஒன்று இதோ உங்களுக்காக... "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்."                குறள் :774 இதுதான் என்னைப் போர்க்களத்திற்கே அழைத்துச் சென்று கலங்க வைத்த குறள். தீவிரமாகப் போர்க்களத்தில்  போர் நடந்து கொண்டிருக்கிறது. வீரன் ஒருவன் ...

புலவர் பாடாது வரைக

உள்ளத்துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத்தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை" என்பார் கவிமணி. ஆனால் கவிதைக்குப் பொய்யழகு என்று ஒரு கற்பனையான கருத்தியலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதனால் எந்தப் பாடலைக் கேட்டாலும் அதில் உண்மை இருக்காது.மிகைப்படுத்தலாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் படிக்கத் தொடங்குவோம். இது கவிதையைப்பற்றி நேற்று இன்று நாளை  என்று எல்லாக் காலத்திற்கும்  சேர்த்தே உருவான கருத்தியலா? இன்றைய புதுக்கவிதைக்கு மட்டும் உரியதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதே கருத்து உங்களுக்குள்ளும்  எழுந்திருக்கலாம்.. அதற்கான விடை தேடலில் ஈடுபட்டபோது கிடைத்த ஒற்றை வரி இப்படியாக இருக்குமோ என்று இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது. கண்டிப்பாக இவை காலமாற்றத்தில் ஏற்பட்ட கருத்தியலாகத்தான் இருக்கும். காரணம் "புலவர் பாடாது வரைக என் நிலவரை " என்ற ஒற்றை வரி. இந்த வரி என்னை முன்பின் நகர விடாமல்  அங்கேயே நிற்க வைத்தது. வஞ்சினம் உரைக்கும் மன்னன் வாயிலிருந்து வந்த செய்தி. பொய்யாக புனையப்படும் பாடல்களாக இருந்தால் இவரில்லை என்றால் வேறு யாரோ ஒருவர் என்னைப...

இனியது கேட்கின்

இனியது கேட்கின் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் ? கை நிறைய பணம் வேண்டும். ஆசைப்பட்டப் பொருட்கள் எல்லாம் வாங்கி சாப்பிட வேண்டும். விரும்பிய ஆடைகளை எல்லாம்  அணிந்து அழகு பார்க்க வேண்டும். உலகிலுள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும். அழகான வீடு வேண்டும். கால்மேல் கால் போட்டு இருந்து சாப்பிட வேண்டும். அன்பான மனைவி  அறிவான குழந்தைகள் என்று வாழ்க்கை இனிதாக ஓட வேண்டும். நாளொரு உடை... பொழுதெல்லாம் உடன் நடக்க... உரையாட... நண்பர்கள் உடனிருக்க வேண்டும். ஏன்? எதற்கு ?எங்கே? என்று கேட்காத பெற்றோர் வேண்டும். துள்ளித் திரிய கால்கள் வேண்டும். தொட்டுத் தழுவ ஓடியாட பட்டாம்பூச்சி சூழ் மலர் வனம் வேண்டும். நோயில்லா உடல் வேண்டும். ஏனென்று கேட்க  விழுந்தால் தூக்கிவிட பிள்ளைகள்  வேண்டும் . இவைதான் இனிமை. இப்படி இனிமை ஆளுக்கு ஆள் காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம் மாறுபடும்.  வேறுபடும். இவைதான் இனிமை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறனர். இவற்றைத் தேடித்தான்   ஓட்டம்... தேட்டம்....  நாட்டம்..... எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. ...

சொல்லால் வென்றவன் வரலாறு

சொல்லால் வென்றவன் வரலாறு  " சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து" என்றார் வள்ளுவர். நாம் பேசுகிற சொல்லை இன்னொரு சொல் வெல்ல முடியாது என்பதைத் தெரிந்த பின்னரே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் நமது சொல்லில் யாரும் குற்றம் கண்டுபிடித்துவிடக் கூடாது. நமது சொல்தான் இறுதித் தீர்ப்புக்கு  உரியதாக இருக்க வேண்டும். உள்ளங்களை வெல்லும் சொல்லாக  இருக்க வேண்டும். "ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்" என்று சொல்வார்கள் . " வெல்லும் சொல்... கொல்லும் சொல் ...  அனைத்தும் யாம் அறிவோம்.... என்கிறீர்களா?"     "அனைத்தும் அறிந்து விட்டால் ...    நீங்கள்  பேசும் சொல் யாவும்    வெல்லும் சொல்  என்று ஆகிவிடுமா .?      "வேறென்ன வேண்டும்.   சுட்ட சொல் வேண்டுமா ?   சுடாத சொல் வேண்டுமா?"     நீங்கள் சுட்ட சொல்   என்றதும்தான்  எனக்கு ஒன்று   நினைவுக்கு வருகிறது.        சிறுவன் ஒருவனிடம்   நாவ...

அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல " கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார்  தம்மோடு கூடுதல் கோடி பெறும் " என்று கோடியை அள்ளி விட்டு அவர் பாட்டுக்குப் போய்விட்டார் ஔவை. ஔவை இப்படிச் சொல்லி விட்டாரே என்று நமக்கும் உறவுகளோடு  ஒட்டி வாழ ஆசைதான். ஆனால் எப்படித்தான் ஒட்டநினைத்தாலும் தாமரை இலை மேல் நீர் போல  ஒட்ட மறுப்பவர்களை என்ன செய்வது? அப்படி ஒட்ட மறுப்பதற்குக் காரணம்? உங்கள் குணமா? அல்லது உங்களிடம் இல்லாத பணமா? என்று சிந்தித்துப் பார்த்தால் இந்த விலகலுக்குக் காரணம் பணமாகத்தான் இருக்கும். " பணம் இருப்பவன் பின்னால் பத்துப்பேர் பதவி இருப்பவன் பின்னாலும் பத்துப்பேர் "என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பத்துப்பேர் யார் யார்? என்று பட்டியலிட்டுப் பாருங்கள். அதில்  உறவுகளும் இருக்கும். உங்களிடம் பொருள்  இல்லாதபோது உறவுகள் உறவினர்  என்று சொல்லிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். இதுதான் எதார்த்தம். ஒன்றிரண்டு உறவுகளுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கலாம் . மற்றபடி பெரும்பான்மை பணத்தின் பக்கம்தான் நிற்கும். ஒட்டி நின்று நலம் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வர். அதனால்தான்...

தவறவிட்ட தருணங்கள்

மழை பெய்ததும் கலப்பையை எடுத்துச்  செல்லாத உழவர்கள்  படிக்கும் காலத்தில் புத்தகத்தை மூடி வைத்துக் கொண்டு தூங்கும் மாணவர்கள்  வேலையின்போது சிரத்தை எடுத்துக் கொள்ளாத ஊழியக்காரர்கள் இளமையில் சின்னச்சின்ன சேட்டைகள் செய்யத் தவறிய  இளைஞர்கள்  உடலும் உள்ளமும் உறுதியாக இருக்கும்போது உழைக்கத்  தவறிய மனிதர்கள் பணம் புரளும் போது சேமிக்கத் தவறியவர்கள் இவர்கள் எல்லாம் கிடைத்த நல்ல தருணத்தைத் தவற விட்டவர்கள்.    இவர்கள் மட்டுமல்ல...   நம் ஒவ்வொருவர் வாழ்விலும்  ஏதோ ஒன்றைத் தவறவிட்ட தருணம் கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும். அதை நினைத்து நினைத்து மருகி இருப்போம். எல்லாவற்றையும் இழந்தது போன்ற விரக்தியில் இருந்திருப்போம். இனி எனக்கு நல்லதே நடக்காதா என எண்ணி எண்ணி வெதும்பியிருப்போம். இளமையில் காதலைச் சொல்ல முடியாமல் தவறவிட்டுவிட்டு  இன்றுவரை தவித்துக் கொண்டிருப்பவர்கள் நிறையபேர் இருப்பர். அதற்கான தருணம் வாய்த்திருக்கும். இருப்பினும் ஏதோ ஒரு பயம்....ஒரு தயக்கம் உங்கள் காதலைச் சொல்ல விடாமல்  தடுத்திருக்கும். அதனால் உங்கள் காதல் நிறைவேறாமலேயே நிராசையாய் ந...

தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்  " இமிழ் கடல் சூழ் உலகெங்கும் போய் வாழ்ந்தாலும் எந்தமிழர் தமிழ் மொழியால் இணைந்து கொள்க" என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். கண்டம்தாண்டி கண்டம் வந்தாலும் மொழியால் ஒன்றுபடுவீராக என்பது பாவலரேறு அவர்களின் வேண்டுகோள். இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள்  இல்லா நாடுகளே இல்லை என்னும்  அளவுக்கு உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் தமிழர்கள்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வாழ்வைத்தேடி ... வாழ்வாதாரத்தைத் தேடி உலகெங்கும் பணத்திற்காக பதவிக்காக குடியமர்ந்து விட்டோம். பெருமைக்குரியது. பெருமிதப்படக்கூடியது  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  இருக்கவும் முடியாது. . வீட்டை மறந்து  நாட்டைத் துறந்து அந்நிய தேசத்தில் வந்து குடியமர்ந்து விட்டோம். அழகான அந்நியமொழியோடு நம்மைப் பிணைத்துக்கொண்டு விட்டோம். ஆனால் தாய்மொழியை மட்டும் நாம் மறந்திலோம் என்பதை அங்கங்கே காணப்படும் தமிழ்ச் சங்கங்கள் நமக்கு  நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.  தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்காரர் என்றுகூட நமக்குத் தெரியாது. ஆனால் தமிழ்க் குரல் ஒன்று கேட்டுவிட்டால் போதும். திரும்பிப் பார்க...

தன்னம்பிக்கை தரும் முதலடி

தன்னம்பிக்கை தரும் முதலடி  "ஒல்வது  அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்" என்பார் வள்ளுவர். "ஒருவர் தனக்கு இயலும் செயலையும்  அதைப்பற்றிய அறிவையும் பெற்று  தன்னம்பிக்கையோடு உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாதது என்று எதுவும் இருக்க முடியாது"  " தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது" என்பார் மாவீரன் நெப்போலியன்.  எவ்வளவு தன்னம்பிக்கை தரும் வரிகள் பாருங்கள். தோல்வி துரத்தட்டும். தோல்வி என் பின்னால் தானே வருகிறது. நான் பிடிகொடுக்காமல் ஓடிக்கொண்டே இருப்பேன். எனது பயணம் முன்னோக்கி மட்டுமே இருக்கும். எந்தச் சூழலிலும் நான் தோல்வியைத் திரும்பிப் பார்க்கப் போவதில்லை.     கண்ணுக்கு எட்டும் தூரத்தில்தான் வெற்றி இருக்கிறது என்று முன்னோக்கி மட்டுமே பார்க்க வேண்டும்.   இதற்கு மிக உறுதியான மனநிலை வேண்டும்.    முதலாவது நம்மீது நமக்கு நம்பிக்கை  இருக்க வேண்டும். நம்மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே எந்தச் செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து வெற்றி காண முடியும். நம்பிக்கையில் சிறிது ஆட்டம் கண்டு ...

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும்

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும்  அனைவர்க்கும் பொருள் ஈட்ட வேண்டும் என்று ஆசை. அதனை முழுவதுமாக சேமித்து வைக்க முடிகிறதா? ஏதோ ஒரு வழியில் செலவழிந்து விடுகிறது. எங்கிருந்துதான் அதற்கென்றே ஒரு செலவு வருகிறதோ என்ற புலம்பல் நம் காதுகளில் விழாமலில்லை. என் கைதான் ஓட்டைக் கையா  என்று வருத்தம் இருந்திருக்கும். அதையும் மீறி சிலரிடம் மட்டும் பொருள் குவியும். அவர்கள் சிக்கனமாக இருப்பதினாலா? இல்லையே அவர்களும் எல்லாச் செலவும் செய்யத்தானே செய்கிறார்கள். காரணம் என்ன ? ஒன்றுமே புரியவில்லை. மதியில்லாமல் இருந்தேனா? யாரிடம் போய் கேட்டுத் தெரிந்து கொள்வது? மதியில்லாதபோதெல்லாம் மதிகேட்டு  வழி கேட்டு ஔவையிடம்தான் போய் நின்றிருக்கிறேன். இன்றைய என் குழப்பத்திற்கும் ஔவையிடம் வழியில்லாமலா இருக்கும். போய் வாசலில் நின்றேன். செவிவழி வந்து விழுந்தது ஒரு பாடல். இதுவன்றோ என் கேள்விக்கான பதில் என்றபடி திரும்பினேன் . என்ன திரும்பிவிட்டாய் என்று திரும்ப வைத்தது ஒரு குரல். கண்முன்னால் வந்து நின்றது யார் என்ற ஐயம் தெளியும் முன்னர் மறுபடியும்  அதே பாடல் என் காதுகளில் வந்து விழுந்தது. பாடல் இதோ உங்...

வெற்றிக்கணக்கு

வெற்றிக்கணக்கு   காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது" ஒவ்வொருவருக்கும் காலையில் எழும்பியதுமே கையில் இருபத்து நான்குமணி நேரத்தைக் கொடுத்துதான் அனுப்புகிறார் கடவுள். கிடைத்த அந்த இருபத்து நான்குமணி நேரமும் எப்படி செலவிடப்படுகிறது என்பதில்தான் ஒருவருடைய வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் தூங்கட்டும். இன்னும் கொஞ்சம் உறங்கட்டும். இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?  உன் தரித்திரம் வழிப் போக்கனைப் போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப் போலவும் வரும்" என்கிறது பைபிள். நேரத்தைப் படுக்கையில் கழித்தால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவாய். எவ்வளவு பெரிய உண்மை! இருக்கிற நேரத்தில் பாதி நேரத்தைப்  படுக்கையில் கழிப்போர் உண்டு. ஊர் வம்பு பேசி ஒரு காசுக்கும் பிரயோசனமில்லாமல் நேரத்தை விரயம் செய்வோர் உண்டு. நாளை பார்த்துக் கொள்ளலாம்... நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நாளையும் பொழுதையும் நகர்த்தித் தள்ளுவோர் உண்டு. நாம் விரும்புகிறோமோ இல்லையோ காலையிலேயே காலமென்னும் வரம்  நம் கைகளில் கொடுக்கப்பட்டுவிட்டது. வரம் வாங்கி வந்த நாம் வரும் வழியிலேயே பறிகொடுத...