அளிதோ தானே பாரியது பறம்பே
அளிதோ தானே பாரியது பறம்பே கடையேழு வள்ளல்கள் யார் யார்? அவர்கள் இத்தகைய சிறப்பு பெற்றதற்கான காரணம் என்ன? அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைவர் உள்ளத்திலும் இருக்கும். பாரி, ஓரி ,காரி,பேகன், நள்ளி,அதியமான் ,ஆய் இவர்கள் ஏழுபேரும் கடையேழு வள்ளல்கள் என்று சொல்லப்படுகின்றனர். அவர்களுள் முதன்மையானவன் முதல்தரமானவன் என்று பாரியைக் கொண்டாடுகிறோம். இந்தக் கொண்டாட்டங்களுக்குக் காரணம் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று ஒற்றை வரியில் சொல்லி கடந்து போய்விடுவோம். இந்த ஒரே ஒரு காரணத்திற்காகவா பாரி வள்ளல்களுள் முதன்மை வரிசையில் வைத்துக் கொண்டாடப்படுகிறான். இதைவிடப் பெரிய அளவில் உதவுகிற புரவலர்கள் இல்லையா? வாரி வாரி வழங்கும் வள்ளல்கள் இல்லையா? எனக்குள் ஒரு தேடல். முல்லைக்குத் தேர் கொடுத்த அந்த வள்ளலைப் பார்த்துவிட வேண்டும். பார்த்து ஓரிரு கேள்விகளுக்கு விடை கண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இதயத்தில் சுமந்த கேள்விகளோடு நடந்தேன். இடையில் கண்ணில் பட்டது ஒரு முல்லைக்கொடி. அருகினில் சென்றேன் .முல்லைக்கொடி படர கொழுகொம்பில்லாது அருகில் இருந்த கள்ளிச் செடியோடு கை கோர்த்து கம்பீரமாக நின்றது. ...