தமிழரசன்
பள்ளி வாசல் வரை உற்சாகமாக வந்த தமிழரசனுக்கு அதற்கு மேல் பள்ளிக்குள் செல்ல கால் எழவில்லை. ஒரு கணம் அப்படியே நின்று பள்ளியையே பார்த்தான். " பள்ளிக்குள் செல்வதா ?வேண்டாமா?" என்று ஒரு தாவா மனதிற்குள் வந்து அவனை அப்படியே நிறுத்தி வைத்தது. கால்கள் தள்ளாடின. மனசுக்குள் ஒரு படபடப்பு. நாலு நாளாக பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர் கேட்டால் என்ன சொல்வது ? எப்படி சமாளிப்பது.? மற்ற மாணவர்களைப் போல சட்டென்று பொய் பேசி பழக்கம் இல்லை. உண்மையைச் சொல்லி விடலாமா? ஐயோ...வேண்டாம். மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்கள்? நினைப்பதோடு மட்டும் விட்டு விடுவார்களா? பிச்சைக்காரன்... பிச்சைக்காரன்... என்று சொல்லி சொல்லி கூனிக்குறுக வைத்துவிடுவார்களே! நினைத்துப் பார்க்கவே உடலெல்லாம் கூசியது. நான் என்ன வேண்டும் என்றேயா பிச்சை எடுக்கிறேன்... எங்கள் வீட்டு நிலைமை அப்படி. இரண்டு பிள்ளைகளைக் கையில் கொடுத்துவிட்டு ஓடிப்போன அப்பா . அம்மா என்னதான் செய்வார்? இருக்க வீடு கிடையாது. ...