Posts

Showing posts from September, 2021

பகைமையும் கேண்மையும்....

பகைமையும் கேண்மையும்..... " பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் "                       குறள்.  :    709 பகைமையும் - எதிரியும் கேண்மையும் -நட்பும் கண் - விழி உரைக்கும் - சொல்லும் கண்ணின் - நோக்கினது வகைமை - வேறுபாட்டினை உணர்வார் -அறிந்து கொள்வார் பெறின்- நேர்ந்தால், பெற்றிருந்தால் கண்ணின் பார்வை வேறுபாட்டினை அறிந்து கொள்ளும் திறன் மட்டும் இருந்தால் ஒருவன் பகைவனா?நண்பனா? என்பதை அவன் கண்களே நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும் விளக்கம் : ஒரு மனிதனைப் பார்க்கும்போதே அவன் உள்ளக்கிடக்கையை அறிவிக்க வல்லது கண். கண்ணை வைத்தே ஒரு மனிதனை எடை போட்டுவிடலாம். பார்க்கும் பார்வையில் பல வகை இருக்கும். அந்த நுட்பம் எல்லோருக்கும் தெரியாது. அது தெரியாமல் போவதால்தான் பல நேரங்களில் எதிரியையும் நண்பனாக எண்ணி ஏமாந்து போகிறோம். அப்படிப்பட்ட நுட்பம் தெரிந்த அமைச்சர்களை ஒரு மன்னன் தன் அமைச்சரவையில் வைத்துக் கொள்ள வேண்டுமாம். அப்போதுதான் எதிரியை உடனடியாக கண்டுபிடித்து தம்மையும் தன் நாட்டையும் காத்துக் கொள்ள முடியும் எ...

சோத்துக்கணக்கு

    சோத்துக்கணக்கு "ஒரு மாசமா உங்க அம்மா  இங்கேயே இருக்குறாங்க... ஊருக்கு எப்ப போவாங்களாம்?" காலையிலேயே தன் கோபத்தை சுரேஷ் முன் கொட்டினாள் பாலா. பாலா தாயம்ம பாட்டியின் இரண்டாவது மகன் சுரேஷின் மனைவி. சுரேஷ் நல்ல வேலையில் இருப்பதால் வசதியான குடும்பத்திலிருந்து பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தார் தாயம்ம பாட்டி. பாலாவுக்கு சுரேஷ் குடும்பத்தைப் பார்த்தாலே ஆகாது. நாங்க பெரிய குடும்பம் என்று எப்போதும் சிலுப்பிக் கொள்வாள்.  சந்தோசமாக தன் குடும்பதோடு இருப்பதற்கு சுரேஷ் குடும்பம் தடையாகிவிடக்கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே முகம் கொடுத்து யாரிடமும் பேசமாட்டாள். கிட்ட நெருங்க விட்டுட்டா பணம் காசை அள்ளி கொடுத்துருவானோ என்ற பயம். பத்து நாளைக்கு முன்னர்தான் தாயம்ம பாட்டி மவனையும்  பேரனையும் பாத்துட்டுப் போகலாம் என்று வந்துருந்தாவ... நாலு நாளையில போயிரணும் என்றுதான் வந்தாவ... சுரேஷ்தான் அங்கே போய் என்ன செய்யபோறா... கூட பத்துநாளு இருன்னு வலு கட்டாயமா இருக்க வச்சான். பத்துநாளு பொறுக்கல... அதுக்குள்ள சண்டையைத் தொடங்கிட்டா... சுரேசுக்கு என்ன செய்வதென்றே தெரியல.. "போவாங்க...போவா...

பொண்ணு பொறந்தாச்சு

பொண்ணு பொறந்தாச்சு முற்றத்தில் கிடந்த கட்டிலில் படுத்துக் கிடந்தார் பாலு. "இந்த முறையாவது நல்லது நடக்கணும்" கண்ட தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டார். மனசுக்குள் திக்..திக் என்று மரணபயம் கவ்விக் கிடந்தது. ஒவ்வொரு நிமிடம் கடப்பதும் ஒரு யுகம் கடப்பது போல் இருந்தது. இதற்கு முன்னரும் இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால் இந்தமுறை அநியாயத்துக்கு கூடுதலாக வியர்க்குது. தொடர்ந்து பத்து நிமிடம் படுக்க முடியவில்லை. எழும்பி இந்தத் தெருவுவரை போயிட்டு வரலாம் என்று வெளியில் வந்தார். அதற்குள் "எப்பா எங்கப் போறிய நானும் வாரேன் "என்று ஓடி வந்து கையைப் பிடித்தாள் பூரணி. "எங்கேயும் போகல... காலையிலயிருந்தே ஒண்ணும் சாப்பிடலயில்ல...காப்பிக் கடையில போயி உங்களுக்கு ஏதாவது தின்பதற்கு வாங்கி வாறேன்." "நானும் கூட வாரேன்....."அப்பாவை விட்டுட கூடாது என்று கையைப் பிடித்து இழுத்தாள் மூன்றாவது பெண் பூரணி. "நான் ஒரு இடத்துக்கும் போகல போதுமா.... "சொல்லிவிட்டு அப்படியே பக்கத்தில் கிடந்த குறுங்கட்டிலில் உட்கார்ந்தார். மடியில் ஏறி உ...

என்பி லதனை வெயில்போலக் காயுமே...

என்பி லதனை வெயில் போலக் காயுமே... என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்"                      குறள் : 77 என்பு -எலும்பு இலதனை - இல்லாததை வெயில் - கதிரவனின் வெப்பம் காயுமே - கருக்கிவிடுவது போல -  போன்று அன்பு - அன்பு இலதனை - இல்லாதவர்களை அறம் - அறமானது எலும்பில்லாத உயிர்களை வெயில் வாட்டி கருக்கிவிடுவதுபோல  அன்பில்லாத உயிர்களை அறம் வாட்டி வருத்தும். விளக்கம் : அறம் என்பது எல்லாம் வல்ல ஒரு பேராற்றல். அது தூயதாய், நடுநிலை பிறழாததாய் நிற்கும். அதனைத்தான் அறக் கடவுள் என்று இலக்கியங்களில் பேசப்படுகிறது. எல்லா சமயமும் போதிக்கும் ஒரே தர்மம் அன்பு மட்டுமே. அன்பு மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் கடந்த ஒரு உன்னத நிலை. அந்த அன்பு ஒருவனிடம் இருந்தால் எந்தவித சண்டைச் சச்சரவுகளுக்கும் இடமிருக்காது. அன்பு ஒருவனிடம் இல்லையென்றால்...என்ன நடக்கும்? வள்ளுவர் கூறுகிறார் நீங்களே கேளுங்கள். "எலும்பில்லாத புழுக்கள் வெயிலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் துடிதுடித்து அங...

மறந்தும் பிறன்கேடு சூழற்க....

மறந்தும் பிறன்கேடு சூழற்க.... " மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு"                        குறள் : 204 மறந்தும் - நினைவொழிந்தும் பிறன் - அடுத்தவனுக்கு கேடு - தீமை, அழிவு சூழற்க - நினையாதொழிக சூழின் - நினைத்தால் அறம் - அறக்கடவுள் சூழும் - நினைக்கும் சூழ்ந்தவன் -  எண்ணியவன் கேடு - கெடுதி, தீமை பிறனுக்குத் தீமை தரும் செயலை மறந்தும் செய்யாது ஒழிவீராக. மாறாக தீமையை மனதளவில் நினைத்தாலும் அந்தத் தீமை ஒருநாள் நம்மிடமே திரும்பி வந்து சேரும். விளக்கம் : அடுத்தவர்களுக்குத் தீமை தரும் செயலை ஒரு போதும் செய்தல் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அந்தக் கேடு உங்களுக்கே திருப்பி வந்து சேரும். ஆதலால் மறந்தும் பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் மற்றவர்களுக்குத் தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அறக்கடவுள் உங்களுக்குத் தீமையைத் தண்டனையாகத் தருவார். அந்தத் தண்டனையிலிருந்து நீங்கள் தப்பவே முடி...

உண்பது நாழி உடுப்பவை இரண்டே...

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே... உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க வீடும் இருந்தால் போதும். இந்த மூன்றும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளாகும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவு செய்வதற்குதான் மனிதன் ஓடி ஓடி உழைக்கிறான். ஆனால் இந்த மூன்றும் கிடைத்தால் போதும் என்று நாம் திருப்திப்பட்டுக் கொள்கிறோமா? ஆடம்பரங்களை நோக்கி நம் கண்கள் அலை பாயும். முதலாவது ஏதோ இருப்பதற்குச் சொந்தமாக ஒரு வீடு இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்போம்.  சொந்தவீடு கட்டியாயிற்று. இப்போது கண்கள் அங்குமிங்கும் தேடும்.அந்த வீட்டைப் போல் கட்டியிருக்கலாமோ? இந்த வீட்டைப்போல் கட்டியிருக்கலாமோ? இரண்டு மாடி எழுப்பி இருக்கலாமோ? என்று எதிலும் ஒரு திருப்தி இல்லாத மனநிலையிலேயே இருப்போம். உடை விசயத்திலும் இதே நிலைதான். ஆடம்பரங்களை நோக்கிய பயணம்தான் நம்மை இருக்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. நாளொரு உடை தேவையாக இருக்கிறது. ஆனால் அந்த உடை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. எளிமையாக இருந்தால் போதும் என்று மனம் ஏற்றுக் கொள்கிறதா?இல்லையே.. ஒருவன் உலகம் முழுவதையும் பிறருக்கு இல்லாமல் தனக்கே உரியதாக தன் வெண்கொற்றக் ...

மனதில் உறுதி வேண்டும்

மனிதில் உறுதி வேண்டும் மனதில் உறுதி இருப்பவர்கள் எதையும் சாதிக்கும் துடிப்பு  மிக்கவர்களாக இருப்பர். தளர்ச்சி என்பது அவர்கள் அகராதியில் இருக்காது. வேகமும் துடிப்பும் அவர்கள் செயலில் இருக்கும்.  வெற்றி பெற வேண்டும் என்ற தணியாத் தாகம் அவர்கள் தேடலில் இருக்கும். மனதில் உறுதி இருந்தால் எந்தச் சோர்வும் கிட்ட அண்டாது. இதை மனதில் வைத்துதான் பாரதி மனதில் உறுதி வேண்டும் என்ற பாடல் பாடியிருக்க வேண்டும். இதோ பாரதியின் அந்தப் பாடல். மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் அருமையான பாடலில்லையா? மனதில் உறுதி வேண்டும். உறுதி மட்டும் இருந்தால் போதுமா?  பேச்சில் இனிமை வேண்டாமா? பேச்சு ஒன்று நினைவு ஒன்று என்று மாறுபாடாக இருக்கலாமா? கூடாதல்லவா! நினைவும் நல்லதா...

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்

 "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது"                     குறள் : 647 சொலல் - சொல்வதற்கு வல்லன் - ஆற்றல் சோர்விலன் - மனச்சோர்வில்லாதவன் அஞ்சான் - அஞ்சாதவன் அவனை -இத்தகைய பண்புகள் கொண்டவனை இகல் - போர், பகை வெல்லல் - வெற்றி கொள்ளுதல் யார்க்கும் - எவர்க்கும் அரிது - அரிதான செயல் சொல்வதற்குத்  திறனும் சோர்வும் அச்சமும் இல்லாதவன்மீது பகை கொண்டு அவனை வெல்ல நினைப்பது எவர்க்கும் இயலாத செயலாகும். விளக்கம் : பேசும்போது என்ன பேச நினைக்கிறோமோ  அத்தனையையும் பேசிவிடக் கூடிய ஆற்றல் வேண்டும்.பேச்சில் உறுதியான கருத்து இருக்க வேண்டும். பேச்சுக்கிடையில் சொல்லும் செய்தி கடினமானது இதனை நாம் எப்படிப் பேசிவிடப்போகிறோம் ?என்ற மனச்சோர்வு வந்துவிடக்கூடாது. கேட்பவர் பெரிய அறிவாளியல்லவா? இவர்கள்முன் எப்படிப் பேசுவது? என்று திணறிவிடக் கூடாது. இவர்கள் என் எதிரிகளல்லவா? அவர்கள் என் பேச்சில் தவறு கண்டுபிடித்துவிடுவார்களோ?  என்று அச்சப்படக் கூடாது. மொத்தத்தில் தன் பேச்சிலும் கருத்திலும் உறுதியாக இருக்க வேண்டும். இத்தகையப்...

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்

Image
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் மொழியின் பெருமை அது எளிதாகக் கற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். பண்டிதமொழி  என்று சொல்லாதபடி பாமரரும் எளிதில் படிக்கும் நிலை இருக்கும்போதுதான் மொழி வளர்ச்சியடையும். எழுத்து அமைப்பில் ஒரு வரன்முறையும் ஒழுங்கும் இருந்தால் பிறமொழியினரும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். கல்வி அறிவு பெற்றவர்கள் மட்டுமே படிக்கலாம் என்ற நிலை இருந்தால் மொழி எப்படி வளர்ச்சி அடையும்? மொழி என்றும் இளமையோடு இருப்பதற்கு புதிய தகவல் தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அவற்றிற்கு உகந்த தமிழ்மொழியாக்கச் சொற்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும். இது மொழி ஆய்வாளர்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளும் கருத்து. இதனை அனைவரும் அங்கங்கே சொல்லிச் சென்றாலும் அதற்கான முன்னெடுப்பைக் கையிலெடுக்கும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை. இந்தக் கருத்துக்கள் யாவும் பெரியாரின் கவனத்திற்கு வந்தபோது அதில் இருக்கும் உண்மையைப் புரிந்து கொண்டார் . பெரியார்  எழுத்துச்சீர்திருத்தத்தின் அவசியத்தை உணர்ந்தார். "மொழியின் சிறப்பே அதைச் சுலபமாகக் கற்றுக் கொள்ளக்கூடியதாகவும் புதியவற்றை அறிந்துகொள்ள உதவியாகவும் சுத...

காலம் பொன் போன்றது

காலம் பொன் போன்றது " காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது" என்பார்கள். ஒவ்வொருவருக்கும் காலையில் எழும்பியதுமே கையில் இருபத்து நான்குமணி நேரத்தைக் கொடுத்துதான் அனுப்புகிறார் கடவுள். கிடைத்த அந்த இருபத்து நான்குமணி நேரமும் எப்படி செலவிடப்படுகிறது என்பதில்தான் ஒருவருடைய வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் தூங்கட்டும். இன்னும் கொஞ்சம் உறங்கட்டும். இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?  உன் தரித்திரம் வழிப் போக்கனைப் போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப் போலவும் வரும்" என்கிறது பைபிள். நேரத்தைப் படுக்கையில் கழித்தால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவாய். எவ்வளவு பெரிய உண்மை! இருக்கிற நேரத்தில் பாதி நேரத்தைப்  படுக்கையில் கழிப்போர் உண்டு. ஊர் வம்பு பேசி ஒரு காசுக்கும் பிரயோசனமில்லாமல் நேரத்தை விரயம் செய்வோர் உண்டு. நாளை பார்த்துக் கொள்ளலாம்... நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நாளையும் பொழுதையும் நகர்த்தித் தள்ளுவோர் உண்டு. நாம் விரும்புகிறோமோ இல்லையோ காலையிலேயே காலமென்னும் வரம்  நம் கைகளில் கொடுக்கப்பட்டுவிட்டது. வரம் வாங்கி வந்த நாம் வரும் வழியில...

உள்ளியது எய்தல் எளிதுமன்....

உள்ளியது எய்தல் எளிதுமன்... " உள்ளியது  எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் "                                குறள்   :  540 உள்ளியது - நினைத்தது, கருதியது எய்தல்  - அடைதல் எளிது  -  வருந்தாமல் கிடைக்கக் கூடியது மன் - (அசைச் சொல்) மற்றும் - பின்னும் தான் - தான், ஒருவன் உள்ளியது - எண்ணியது உள்ளப் பெறின் -இடைவிடாது நினைக்கக்                                 கூடுமினால் நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது. விளக்கம் : நாம் ஒரு செயலை அடைய விரும்பினால் தொடர்ந்து அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும். இடையில் தொய்வு ஏற்பட்டு விட்டுவிடக் கூடாது. எனக்கு இது வேண்டும்.. வேண்டும் என்று உள் மனது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த இடைவிடாத ஆசை அதாவது விருப்பம் அதனை அடையும்வரை  நம்மை ஓய விடாது துரத்தும். எண்ணிக் கொண்டே இருந்தால் எப்படி பொ...

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்....

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்.... " புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் "                        குறள்  : 538 புகழ்ந்தவை _  புகழ்ந்து சொல்லப்பட்டவை போற்றி -  எண்ணி செயல் - செய்தல் வேண்டும் -செய்ய வேண்டும் செய்யாது - செய்யாது விட்டால் இகழ்ந்தார்க்கு - மறந்தவர்க்கு, இகழ்ச்சி செய்பவர்க்கு  ஏழ்மையும் - ஏழு பிறப்பிலும் இல் - நன்மை இல்லை சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைச்  செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும்  நன்மை இல்லை. விளக்கம் : சான்றோர்களால் இவை நன்மை  தரக்கூடியன. இவையிவை   செய்யத்தக்கவை என்று சொல்லித் தரப்பட்ட செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். நாளும் பெரியோர் வாயிலிருந்து நல்லவற்றைக் கேட்கிறோம். கேட்டுவிட்டு காற்றோடு விட்டுவிட்டால் அதனால் பயன் ஒன்றுமில்லை. கேட்ட நல்லவற்றை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காவிட்டால் என்ன ஆகும் என்று ஏனோதானோவென்று இருந்துவிடாதீர்கள். நல்லவற்றைச்  செய்யத் தவறினால்... அ...

பகல் வெல்லும் கூகையைக் காக்கை....

Image
பகல் வெல்லும் கூகையைக் காக்கை.... பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது "                           குறள்   : 481 பகல் - பகல்பொழுது வெல்லும் - வென்றுவிடும் கூகையை - ஆந்தையை,கோட்டானை காக்கை - காகம் இகல் - மாறுபாடு, பகை வெல்லும் -வெற்றி கொள்ளக் கருதும் வேந்தர்க்கு - மன்னருக்கு வேண்டும் - இன்றியமையாத பொழுது- நேரம் , காலம் காக்கையானது தன்னைவிட வலிமையான ஆந்தையைப் பகலில் வென்றுவிடும். அதுபோல தன் எதிரியை வீழ்த்த எண்ணும் மன்னன் ஏற்ற காலம் வரை காத்திருத்தல் வேண்டும். விளக்கம் : ஆந்தை காகத்தைவிட வலிமை மிக்கப் பறவை. ஆனால் ஆந்தைக்குப் பகலில் கண்தெரியாது. அதனால் ஆந்தையைப் பகலில் மிக எளிமையாக காகம் வென்றுவிட முடியும். காகம் ஆந்தையின் பலவீனமான அந்த நேரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மிக எளிதாக தோற்கடித்துவிடும். இரவு நேரத்தில் காகம் ஆந்தையிடம் மோதிப் பார்த்தால் தோல்விதான் மிஞ்சும். அது போன்றுதான் படை நடத்திச் செல்லும் மன்னனும் எதிரியைப் பற்றிய மனக்கணக்கு ஒன்று போட்டு வைத்துக் கொ...

காளமேகத்தின் கணக்கு

காளமேகத்தின் கணக்கு இறைவனை தொழுவதற்கு உகந்த  நேரம் எது? "என்று பாலன் தன் தன் நண்பர் மதிவண்ணனிடம் கேட்டார். "அதிகாலை நேரம் அதுதான் இறைவனைத் தொழுவதற்கு உகந்த நேரம் "என்று  பதிலளித்தார் நண்பர். "அமைதியான அந்தக் காலைப் பொழுதுதான் மனதை ஒருமுகப்படுத்தி பிராத்தனையில் ஈடுபட முடியும் .வெளியுலக குறுக்கீடு எதுவும் இல்லாத அமைதியானச் சூழல் பிராத்தனைக்கு ஏற்ற நேரம்தான். ஆனால் என்னால் அது முடிவதில்லையே" என்றார் பாலன். "நீர் சொல்லுவதும் சரிதான். வேலை வேலை என்று சதா கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுகிறோம். கடவுளைத் தொழ நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது" புலம்பினார் மதி வண்ணன். "  இப்படி ஆளுக்கொரு சாக்கு போக்குச் சொல்லிக்   கொண்டிருந்தால் இறைவனைத் தொழுவதற்கு   கால நேரமே கிடையாதா ?  ஒரு மனிதன் எப்போதுதான்  இறைவனை வணங்குவது? " "இன்று இதற்கு ஒரு தீர்வு கண்டே  ஆக வேண்டும்." " யாரிடம் போனால் இதற்குத் தீர்வு  கிடைக்கும் ?"   "வாரும். காளமேகத்திடம் போவோம். அவர்தான் இதற்குச் சரியான பதில் சொல்லுவார்"  நேரே இருவரும் காளமேகத்திடம்  வ...

அளவளா வில்லாதான் வாழ்க்கை...

அளவளா வில்லாதான் வாழ்க்கை..... " அளவளா வில்லாதான் வாழ்க்கை  குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று "                                      குறள் :  523 அளவு   - நலம் விசாரித்து அளாவு -நெஞ்சு கலத்தல் இல்லாதான் - இல்லாதவனது வாழ்க்கை - வாழ்வானது குள - குளத்தினது வளா - பரப்பு கோடின்றி - கரை இல்லாமல் நீர்நிறைந்து - நீர் நிறைந்திருத்தல் அன்று - போன்றது , அத்தகையது சுற்றத்தாரோடு நலம் விசாரித்து  மனம் கலந்து மகிழ்ந்து பழகும்  நற்பண்பு  இல்லாதவன் வாழ்க்கை கரையில்லாத குளம் நீர் நிறைவது போன்றதாகும் விளக்கம் : குளம் என்றால் அதற்கு கரை உயர்ந்திருக்க வேண்டும்.அப்போதுதான் நீர் குளத்தில் நிறைந்திருக்கும். அந்த நீரால் பயன் உண்டு. கரை இல்லாத குளத்தில் எவ்வளவு நீரைப் பெருக்கினாலும் நீர் முழுவதும் வழிந்தோடி குளம் காய்ந்து போய்விடும். நீர் இருக்கும்போதுதான் குளத்திற்கு மதிப்பு. அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் செழிப்பு. அது போன்றதுதான் மனித வாழ்வும். ஒருவன் சுற்றம் தழுவி வாழும்போதுதான்...

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் வேண்டும்... வேண்டும் நல்ல எண்ணம் இருக்க வேண்டும். செயலில் நேர்மை இருக்க வேண்டும். பேச்சில் இனிமை இருக்க வேண்டும். பழகுவதில் உண்மை இருக்க வேண்டும். இப்படி எல்லாவற்றிலும் வேண்டும்..வேண்டும் என்று நேர்மறையான சொல்லே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றி நடப்பவை யாவும் நன்மையானதாக நடக்கும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம்.  ஒரு எதிர்மறை சொல் வாயிலிருந்து   வந்துவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்துப் பேசுவோம். ஆனால் இலங்கியங்கள் இவை எல்லாவற்றிற்கும் நேர் மாறானவை. இனியவை நாற்பது உண்டு என்றால் ஒரு இன்னா நாற்பதும் உண்டு. இனியவை நாற்பதைவிட எந்தவிதத்திலும் குறைபடாத சொல்லாட்சி கருத்தாளுமை ஆகியவற்றை இன்னா நாற்பதிலும் காணலாம். தீ என்று சொல்வதால் நாக்கு வெந்துவிடப்போவதில்லை. சர்க்கரை என்று சொல்வதால்  நாக்கு இனித்துவிடப் போதில்லை. எது எப்படியோ சொல்லப்படும் கருத்து உயர்வானதாக இருந்தால் நாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் அவை வேண்டும் வேண்டும் என்று நம்மோடு என்றும் நடைபயின்று கொண்டிருக்கும்.  வேண்டாம் என்ற சொல்லை வைத்தே ந...

ஆசிரியர் நாள் நல்வாழ்த்து

Image

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் உண்மைதாங்க...ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் அரசன் என்ன? யாராக இருந்தாலும் ஆண்டிதான். தங்கம் என்ன வாங்கும்படியாகவா இருக்கிறது? என்ற உங்கள் புலம்பல் என் காதுகளில் விழுகிறது. ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து, சீர் செனத்தி என்று ஒவ்வொவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து முடித்து எழும்பும்முன் கூன் குறுக்கு எல்லாம் ஒடிந்தே போய்விடும். அரசனாலேயே இதனை எளிதாகச் செய்துவிட முடியாது. சாதாரண எளிய மக்களால் எப்படி செய்துவிட முடியும் ?  கையில் இருக்கும் ஊறுனது பாருனது எல்லாம் கொடுத்துவிட்டு ஓட்டாண்டியாகப் போக வேண்டியதுதான். இப்படி எத்தனை குடும்பங்களைப் பார்த்திருப்போம்.? அதனால்தான் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழி சொல்லப்பட்டிருக்கும். இதுதானே தங்களின் எண்ணம். இந்தப் பழமொழிக்கான பொருள் நீங்கள் நினைப்பதுபோல் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் ஆண்டியாகிவிடுவோம் என்பதாகத்தான் இருக்குமோ?  சற்றே சிந்திக்க வேண்டிய பழமொழிதான். அப்படிச் சொல்லி இருந்தால் அது பெண்கள் குலத்திற்கே இழிவு அல்லவா! பெண்பிள்ளைகள் பெற்றோருக்குத் தொல்லை  க...