யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் உலக சகோதரத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்குச் சொல்லித் தந்தவன் தமிழன். உலகம் வியந்து பார்க்கும் ஒப்பற்ற தமிழ்க் கவிதைகளைப் படைத்து உலக அரங்கில் தமிழருக்கென்று தனித்துவத்தைப் பெற்றுத் தந்தவர்கள் பலர். தமிழர்கள் சிந்தனை ஆற்றல் மிக்கவர்கள் என்பது உலக மக்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட செய்தி. நமது பரிணாம வளர்ச்சி அறிவியல்,சமூகவியல், உளவியல், தத்துவம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது என்பதற்கு இலக்கியங்களில் பல ஆதாரங்கள் உள்ளன. அந்தவகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென தனி இடம்பெற்ற புலவர்களுள் கணியன்பூங்குன்றனார் என்னும் சங்க காலப் புலவர் தனிப் பெருமை மிக்கவர். எந்த அரங்கிலும் இவர் புகழ்பாடாதவர் எவரும் இலர் என்றுதான் சொல்ல வேண்டும். நாள், கிழமைகளைக் கணித்துக் கொடுக்கும் சோதிடக்கலை தெரிந்தவர்களைக் கணியன் என்று அழைப்பர். பூங்குன்றம் என்பது இவர...