தருமம் இன்றெனில் தாமே சிதையுமால்
தருமம் இன்றெனில் தாமே சிதையுமால் வாழ்க்கையின் ஓட்டமே செல்வத்தை நோக்கியதாகவே இருக்கும். எனக்குப் பணமே வேண்டாம் என்று சொன்னால் நீ இந்த உலகில் இருக்க தகுதியற்றவன் ஆகிறாய். இதை நான் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்கிறார். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார். வள்ளுவரே சொல்லிவிட்டார் . அப்படியானால் பொருளைத் தேடித்தான் ஆக வேண்டும். இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்தத் தாய் வேண்டாள் .... என்று சொல்லிவிட்டார் ஔவை. தாயைக்கூட தள்ளி நிற்க வைத்துவிடும் வல்லமை பெற்றதா பொருள்? இப்படி ஒரு கலக்கம். அப்படியானால் வேண்டும் வேண்டும் பொருள் வேண்டும் என்று மனம் பொருள் பின்னால் ஓட்டம் பிடிக்கும். பொருள் இருந்தால்தான் இன்பத்தை அடைய முடியும். விரும்பியதைப் பெற முடியும். விரும்பியதை அடைந்துவிட்டால் இன்பம் இல்லம் வந்து சேரும். இல்லத்தில் இருப்பவர்களும் நம்மைத் கொண்டாடுவர். பொருளும் இன்பமும் இருந்தால் சிறப்புக்கு ஏது குறை? போகுமிடமெல்லாம் சிறப்பு. இத்தோடு மனம் போதும் என்று நின்றுவிடுமா? புகழ் வேண்டும் ஐயா புகழ்...