திருவிழா கண்ட ஆட்டுக்கல்
திருவிழா கண்ட ஆட்டுக்கல் எங்க வீட்டு ஆட்டுக்கல்லுக்கு இன்று திருவிழா. வெள்ளைக் கலரை அள்ளிப்பூசி விடுவடுவெனத் தலையை உருட்டி கடகடவென கர்ஜித்து ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஆசுவாசப்படுத்தி இப்படி ஒரு முறையோடு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. எங்க வீட்டில் மட்டுமல்ல. ஊரில் உள்ள ஒவ்வொரு ஆட்டுக்கல்லுக்கும் அன்று கொண்டாட்டம்தான். ஆனால் பெண்பிள்ளைகள் எங்களுக்கு மட்டும் திண்டாட்டம். ஊரில் உள்ள கன்னிப் பெண்களுக்கெல்லாம் ஒருமணி நேரம் அங்கிங்கு என்று எங்கும் நகரவிடாமல் ஆட்டுக்கல்லை ஆட்டுவிக்கும் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. நாலு நிமிடத்திற்கு ஒருமுறை ஊறப்போட்ட அரிசியில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தேன். கோபத்தை ஆட்டுக்கல் மீது காட்டியதால் வீடு முழுவதும் ஒரு அதிர்வு. முகம் முழுக்க மாக்கோலம் வரைந்த நிலையில் பார்ப்பதற்கே உக்கிரமாக இருந்தது.அதுவும் ஒரு பாதுகாப்புத்தான். அதனால்தான் என் உக்கிரம் கொஞ்சம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளம் ஊர் முழுவதும் சுத்...