ஆகுபெயர் வகைகள்
ஒருசொல் அதன் பொருளைத் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது ஆகுபெயர் எனப்படும். எடுத்துக்காட்டாக நெல் அறுத்தான் என்ற சொற்றொடரை வைத்துக் கொள்வோம். உண்மையில் அறுக்கப்பட்டது நெல்லா? இல்லை. உண்மையிலேயே அறுவடை செய்யப்பட்டது நெற்பயிர் தான். நெல் அறுத்தான் என்பது இங்கே நெற்பயிரைக் குறிக்கிறது. இதேபோன்றுதான் வெற்றிலை நட்டான் என்பதும் வெற்றிலைக்கொடி நட்டான் என்பதைத்தான் வெற்றிலை நட்டான் என்று கூறுவோம். இப்படி ஒன்றின் பெயர் மற்றொன்றிற்கு ஆகி வருவது ஆகு பெயர் எனப்படும். " பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிரிவைத் தொல்முறை உரைப்பன ஆகு பெயரே" என்கிறது நன்னூல். ஆகுபெயர் பதினாறு வகைப்படும். 1. பொருளாகு பெயர்: ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்கு ஆகி வருதல் பொருளாகுபெயர் எனப்படும். இதனை முதலாகு பெயர் என்றும் கூறுவர். ராணி மல்லிகை சூடினாள். மல்லிகை என்பது வேர்,கொடி,இலை,பூ எல்லாம் சேர்ந்த ஒரு பொருளின் முழுப்பெயர் . அந்த முழுப்பெயர் சினையாகிய அதாவது ஒரே ஒரு உறுப்பாகிய ப...