பெண் பிறந்தாச்சு
பெண் பிறந்தாச்சு முற்றத்தில் கிடந்த கட்டிலில் படுத்துக் கிடந்தார் பாலு. "இந்த முறையாவது நல்லது நடக்கணும்" கண்ட தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டார். மனசுக்குள் திக்..திக் என்று மரணபயம் கவ்விக் கிடந்தது. ஒவ்வொரு நிமிடம் கடப்பதும் ஒரு யுகம் கடப்பது போல் இருந்தது. இதற்கு முன்னரும் இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால் இந்தமுறை அநியாயத்துக்கு கூடுதலாக வியர்க்குது. தொடர்ந்து பத்து நிமிடம் படுக்க முடியவில்லை. எழும்பி இந்தத் தெருவுவரை போயிட்டு வரலாம் என்று வெளியில் வந்தார். அதற்குள் "எப்பா எங்கப் போறிய நானும் வாரேன் "என்று ஓடி வந்து கையைப் பிடித்தாள் பூரணி. "எங்கேயும் போகல... காலையிலயிருந்தே ஒண்ணும் சாப்பிடலயில்ல...காப்பிக் கடையில போயி உங்களுக்கு ஏதாவது தின்பதற்கு வாங்கி வாறேன்." "நானும் கூட வாரேன்....."அப்பாவை விட்டுட கூடாது என்று கையைப் பிடித்து இழுத்தாள் மூன்றாவது பெண் பூரணி. "நான் ஒரு இடத்துக்கும் போகல போதுமா.... "சொல்லிவிட்டு அப்படியே பக்கத்தில் கிடந்த குறுங்கட்டிலில் உட்கார்ந்தார். மடியில் ஏறி உட்கார்ந்து அப்பாவின் மோவாயைத் தடவ...