திருவிழா கண்ட ஆட்டுக்கல்
திருவிழா கண்ட ஆட்டுக்கல் எங்க வீட்டு ஆட்டுக்கல் திருவிழாதோறும் ஆட்டம் போடும். வெள்ளைக் கலரை அள்ளிப்பூசி விடுவிடுவெனத் தலையை உருட்டி கடகடவெனக் கர்ஜித்து ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஆசுவாசப்படுத்தி இப்படி ஒரு முறையோடு ஆட்டம் போடும்.ஆட்டத்தோடு இசையும் இருக்கும். எங்க வீட்டில் மட்டுமல்ல. ஊரில் உள்ள ஒவ்வொரு ஆட்டுக்கல்லுக்கும் அன்று கொண்டாட்டம்தான். ஆனால் பெண்பிள்ளைகள் எங்களுக்கு மட்டும் திண்டாட்டம். ஊரில் உள்ள கன்னிப் பெண்களுக்கெல்லாம் ஒருமணி நேரம் அங்கிங்கு என்று எங்கும் நகரவிடாமல் ஆட்டுக்கல்லை ஆட்டுவிக்கும் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும். நாலு நிமிடத்திற்கு ஒருமுறை அப்படியே ஊறப்போட்ட அரிசியில் கொஞ்சம் எடுத்து வாய் அசை போடும். உள்ளம் ஊர் முழுவதும் சுத்தி வரும். நாளை என்ன என்ன கலரில் வளையல் வாங்கணும்...என்னன்ன பொருட்கள் வாங்கணும்... எப்படி தலை சீவணும்...என்று ஒரு லிஸ்டே மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும். வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக பக்கத்திலேயே டிரான்சிஸ்டர் ரேடியோ ஒன்று இலங்கை வானொலியை ஒலிபரப்பி கொண்டிருக்கும். ...