பல கற்றோம் யாமென்று....
பல கற்றோம் யாம் என்று. தற்புகழ வேண்டா... " கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு" என்பார் ஔவை. ஆனால் நிறைய புத்தகம் படிப்பவர்களுக்கு நமக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு வந்துவிடும்.அதன் காரணமாக இயல்பாக ஒரு தற்பெருமை வந்து ஒட்டிக் கொள்ளும். எல்லாம் தெரியும் என்பது வேறு. நமக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்பது வேறு. இப்படிப்பட்ட சிந்தை உள்ளவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் மனதிற்குள் ஓர் ஓரத்தில் இந்தப் பெருமை பதுங்கியிருக்கும். நேரம் பார்த்து வெளியில் எட்டிப் பார்த்து உள்ளேன் ஐயா என்று குரல் கொடுத்துச் செல்லும். "அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்" என்பார் அதிவீர ராமபாண்டியர். அந்த நினைப்பு கொஞ்சமாவது மனதில் இருந்தால் தற்பெருமை வராது. படிப்பு என்பது வேறு. அனுபவ அறிவு என்பது வேறு. சில நேரங்களில் அனுபவ அறிவின்முன் புத்தக அறிவு தோற்றுப் போவதும் உண்டு. இதைத்தான் " ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்று சொல்வார்களோ? ஒருமுறை ஒரு வேளாண்துறை உயர் அதிகாரி ஒரு கிராமத்திற்கு வந்திருந்தார். அவர் அங்குள்ள விவசாயிகளை எல்லாம் அழைத்து அதிக மகசூல் விளைய ...