பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை செல்லடுவு அந்த வட்டாரத்தில் பிரபலமான பெண். எந்த ஊரில் திருவிழா என்றாலும் டாண் என்று முதல் ஆளாக வந்து நிற்பாள். திருவிழா என்றாலே வீட்டுக்கு வீடு செல்லடுவு வந்தாளா? செல்லடுவு வந்தாளா? என்ற கேள்விதான் அடிக்கடி கேட்கும். " செல்லடுவுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா?... செல்லடுவுக்கு காப்பி கொடுத்தீர்களா? " கேட்ட பின்னர்தான் எல்லா வீட்டிலும் உள்ள ஆண்களும் சாப்பிடவே உட்காருவர். அந்த அளவுக்கு அனைவர் மனதிலும் இடம் பிடித்திருந்தார் செல்லடுவு. வீட்டுக்கு வீடு ஓடி ஓடி வேலை செய்வாள். ஒரு வீட்டுல வேலை செய்தாயிற்றே சற்று ஓய்வெடுப்போம் என்று ஒருபோதும் நினைப்பதில்லை. "கீழத்தெரு அண்ணன் வீட்டில் கூப்பிட்டாகள.... வடக்குத் தெரு சித்தி வந்து ஒரு எட்டு பார்த்துட்டுப் போ என்று சொன்னாகள.." இப்படி ஒரு வீட்டுக்கு இல்லை என்றால் இன்னொரு வீட்டிற்கு என்று கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பாள். ...