சிற்றூறல் உண்ணீராகி விடும்
சிற்றூறல் உண்ணீராகி விடும் ஒரு பொருளின் தரம் என்பது அதன் உருவத்தைப் பொருத்ததல்ல. அதன் பயன்பாடு மற்றும் செயல்பாடு இவற்றை வைத்துதான் அவற்றின் தராதரம் நிர்ணயிக்கப்படும். யாரையும் உருவத்தைப் பார்த்து மதிப்பீடு செய்ய வேண்டாம். அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து மதிப்பீடு செய்யுங்கள் இதைத்தான் வள்ளுவரும், "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" என்று சொல்லியிருப்பார். உருவம் சிறிதாக இருக்கும் அச்சாணி கூட பெரிய தேர் சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கும் திறன் கொண்டது. அதுபோல உருவம் சிறிதாக இருக்கும் மனிதர்களும் பெரிய காரியங்களைச் செய்யும் திறன் பெற்றவர்களாக இருப்பர். எங்கே? யார் ?எப்படி இருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவருடைய செயல்பாடு எத்தனைபேர் பயன்படும்படி அமைந்துள்ளது என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். இதைத்தான் ஔவையும், மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல் உண்ணீரு மாகி விடும்" மூதுரை : பாடல் : 12 என்கிறார்...