உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
அரசன் முதல் பாமரன் வரை அனைவருக்கும் அறிவுரையும் அறவுரையும் தந்து வழிகாட்டும் திருக்குறளையும் ஆத்திசூடியையும் படிக்காதவர் எவரும் இருக்க முடியாது. பேச்சுத் துணைக்கும் இவர்கள் வேண்டும். ஆட்சித்துணைக்கும் இவர்கள் வர வேண்டும். தமிழில் படிப்பதற்கும் பகிர்ந்து கொள்ளுவதற்கும் ஏராளமான நூல்கள் உள்ளன. எல்லா நூல்களிலும் உள்ள மொத்தக் கருத்தையும் கத்தையாக தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நூல் திருக்குறள். பயண நேரங்களில் பேச்சுத் துணைக்கு வைத்திருக்க வேண்டிய நூல். இன்று உலக நாடுகள் எல்லாம் உற்று நோக்கும் இந்திய பாராளுமன்ற உரையில் திருவள்ளுவரும் ஔவையும் ஆட்சி செய்கிறார்கள் என்பதை அறியும்போது மகிழ்ச்சி மேலிடுகிறது. அப்படி என்ன பெரிதாக ஆட்சி செய்துவிடப் போகிறது... ஏதோ போகிற போக்கில் ஒன்றிரண்டு வரிகளைச் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றும். அந்த ஒன்றிரண்டு வரிகளும் உலகம் முழுவதிலும் பேசுபொருளாகிவிடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வரிகள். இன்றைய சூழலுக்கும் உகந்ததாக இருப்பதில்தான் அதன் பெருமை நிலைநிறுத்தப்படுகிறது. இன்று நாட்டில் விவசாயம் சார்ந்த சிக்கல்கள் எழுந்துள்ளன. விவசா...