Posts

Showing posts from May, 2023

கனவுக்காரி

கனவுக்காரி நார்க்கட்டிலில்  நாடி வானம் பார்க்க மூடி கண்கள் இருக்க மெல்ல தொட்டதொரு விரல் விழிகள் திறக்க மறுக்க கைகள் மட்டும் சிலிர்க்க  கேள்வி கேட்க  மனம் நினைக்க நா எழும்ப மறுக்க செவிமடலுக்குக்குள்  ஒரு  சலசலப்பு சிற்றெறும்பு கடித்ததொரு  சிலுசிலுப்பு செவி மடலைத் தழுவி செவி தீட்டி கவனம் திரட்டி குரல் அடையாள வகுப்பு நடத்தி குழம்பிய மனதோடு   காத்திருந்தேன் வெற்றுக் காற்று  வெப்பமொடு வந்து முட்ட கண் முன் ஏதோ  அசைவாடும் உணர்வு கிட்ட யாரென்று  குரல் அதட்ட முட்ட வந்தவள்  இதழ் குவிக்க முத்துச் சிதற  வேசக்காரியோ  இவள் மோசக்காரியோ  என்று மயங்கிய வேளையில் தமிழ் மகள் நான்  வேசக்காரியுமல்ல மோசக்காரியுமல்ல  யாரென்று நீர் உரைத்தால் சாகா மருந்தொன்று தருவேன் வேகா வெயிலில்  சுட்டப் பழம் எடுத்து வந்தேன் சுவைத்திட விருப்பமோ  எனக் கரம் நீட்ட சாகா மருந்து தர இவள் சஞ்சீவி பர்வதத்துக் காரிகையா? முட்டுக் கொடுத்து நடக்கும் இவள் மூதுரை  தந்த முதுமகளோ? மனம் ஆறேழு  கேள்வி கேட்டு அலைக்கழிக்க  விடுகதை அவிழ்ப்...

திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து நன்றென இறைவன்  இணைத்திருக்க நல்மகன் அருண்ராஜ் கரம் பிடிக்க சிறு புள்ளாய் மனம் சிறகடிக்க தேவதை ஜூனோ உடன் நடக்க ஆல்போல் வாழ்வு தழைத்திருக்க அருகுபோல் பரம்பரை நிலைத்திருக்க மூங்கில் போல் சுற்றம் தழுவி நிற்க இல்லற இன்பம் இனித்திருக்க வாழ்வீர் என்றும்  இணையாக! வாழ்த்துகிறோம் உறவுகள் மகிழ்வாக! வாழ்க பல்லாண்டு நலமாக!             -செல்வபாய் ஜெயராஜ் 

பூசனிக்காயில் எத்தனை விதைகள் இருக்கும்?

Image
பூசனிக்காயில் எத்தனை விதைகள் இருக்கும்? நானும் தங்கையும் புளியம் முத்து கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.  என் கையில் எத்தனை முத்து இருக்கிறது சொல் என்றாள் என் தங்கை ஏழு என்றேன். இது தெரியாதா? இதற்குப் போய் கல்லூரியிலா படிக்க வேண்டும்? எப்படி கண்டு பிடித்தாய் சொல்லேன்....ப்ளீஸ் கெஞ்சினாள் தங்கை. மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. டொட்டொடொயிங்.... இவ்வளவு நேரம் ஏழுகல் சுட்டிதானே விளையாடிக்கொண்டிருந்தாய். இதனால் முத்தும் ஏழுதான் வைத்திருப்பாய் என்று ஒரு ஊகத்தில் சொன்னேன். சரியா என்றேன். இப்போது நான் ஒரு விடுகதை போடுகிறேன் நீ விடுவி பார்க்கலாம். ஆரஞ்சு பழத்தில் எத்தனை விதைகள் இருக்கும்? ஆரஞ்சுப் பழத்தில் ஆரஞ்சு விதை இருக்கும். விளையாடாதே....எத்தனை விதைகள் இருக்கும் சரியாகச் சொல். சரியாகத்தான் சொன்னேன். ஆரஞ்சு விதைகள் தான் இருக்கும். என்னை என்ன  கேணச்சி என்று நினைத்தாயா? சரியாகத்தான் சொன்னேன்.  ஆறு ஐந்து ஆரஞ்சு விதைகள் .மொத்தம் பதினொரு விதைகள் இருக்கும் அதனால்தான் அதற்கு ஆரஞ்சு என்று பெயர். புரிகிறதா?எனக்குப் பாடம் எடுத்தாள் என் தங்கை. இவளை எப்படியாவது மடக்க வ...

முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல்.....

முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல்... " முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு "                                 குறள் 1274 முகை - மலரும் பருவத்து அரும்பு மொக்குள் -மொட்டினுள் ‌உள்ளது - இருப்பது நாற்றம்போல் - மணத்தைப் போன்று பேதை - பெண் நகைமொக்குள் - நகைமுகிழ்பில்  உள்ளதொன்று  - குறிப்பொன்று உண்டு - இருக்கிறது மலரும்பருவத்து அரும்பிற்குள் பொதிந்திருக்கும் மணம்போல  இப்பெண்ணின் நகைமுகிழ்பில் உள்ளதாகிய குறிப்பொன்று உண்டு. விளக்கம்: பூவானது மலரும் பருவத்திற்கு முன்னர் அரும்பாக இருக்கும். அரும்பினுள் மணம் பொதிந்திருக்கும். அந்த மணம் வெளியில்  தெரிய வராது .எப்போது பூவானது தன்  இதழ்களை விரித்து மலர்கிறதோ அப்போது மணம் பரவ ஆரம்பிக்கும். அதுபோல இந்தப் பெண் இதழ் விரியாது மெல்ல இதழ் குவித்து புன்னகைக்கிறாள். இவள் நகைமொக்குள் மலரின் முகைமொக்குள் போன்றிருக்கிறது. அவளுடைய நகைமுகிழ்ப்பில் காதல் குறிப்பொன்று  மறைந்திருக்கிறது. முகைமொக்குளுக்குள் மணம் இருக்கிறது. நகை மொக்க...

அம்மா

அம்மா " தாயின்  மடியில்  தலை வைத்திருந்தால்     துயரம் தெரிவதில்லை    தாயின் வடிவில்     தெய்வத்தைத் கண்டால்     வேறொரு தெய்வமில்லை"  எவ்வளவு அனுபவப் பூர்வமாக   உணர்ந்து கண்ணதாசன் எழுதியிருக்கிறார்  பாருங்கள். . அம்மாவின் மடி:    துயரங்களுக்கு ஒரே மருந்து அம்மா. எத்தனை துயரங்கள் இருந்தாலும் தாயின் மடியில் படுத்த அடுத்த கணம் அவை அத்தனையும்    காணாமல் போய்விடும்  .அம்மாவின் மடிதான் அனைவருக்கும் சொர்க்கம். அம்மா வருடிக் கொடுத்த அந்த  நாட்கள்  கவலையில்லா பேரின்ப நாட்கள்.  எத்தனை வயதானாலும்..எவ்வளவு   தொலைவில் இருந்தாலும் அம்மாவின்  அன்பிற்காக...அம்மாவின் அரவணைப்புக்காக   அனைவர் உள்ளமும் ஏங்கும்.  இதுதான் உண்மை.   உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை.  அம்மாவின் மடி ஆறுதலும்  தேறுதலும் தந்து பேசா வார்த்தை எல்லாம்  பேசும்.பேசாமலேயே பேரின்பம் தரும்.        எல்லைக்கோடு வரைய முடியா   அன்புக்காரி அம்மா: ...

சாந்தனையும் தீயனவே செய்திடினும்

சாந்தனையும் தீயனவே செய்திடினும்..... "பல்லுக்கும் பல் கண்ணுக்குத் கண்" இப்படி பதிலுக்குப் பதிலடி கொடுத்திட வேண்டும். அல்லது சிலருக்குத் தூக்கமே வராது. ஆனாலும் எல்லோராலும் இப்படி நடந்திட முடியுமா? எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு. அதுபோல தீமைக்குத் தீமை  என்பதும் எல்லா இடங்களிலும்  எல்லா நபர்களிடமும் இருக்காது. நல்லோர் உள்ளம் நல்லவற்றையே சிந்திக்கும். பொறுத்துப் போதல், விட்டுக்கொடுத்துப் போதல் இப்படி ஆளாளுக்கு நற்பண்புகளோடு நடமாடும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மரத்தை வெட்டும் மனிதனுக்கும் நிழல் தரும் பண்பு  மரத்திற்கு உண்டு. நீ என்னை வெட்டிவிட்டாய். அதனால் நான் எதற்கு உனக்கு நிழல் தர வேண்டும்? என்று  மரம் வீம்பு பிடிப்பதில்லை. என் கடைசி கிளை இருக்கும் வரை நிழல் தந்துகொண்டுதான் இருப்பேன் என்று பிடிவாதமாக நிழல் தந்துகொண்டே இருக்கும். அதுபோல தீங்கு செய்பவரையும் தன்னால் இயன்றவரை காக்கும் நற்பண்பு அறிவுடைய மாந்தரிடம் இருக்கும் .  தீமைக்கு தீமை என்ற எண்ணம்  என்னிடம் எப்போதும் இருக்கப்போவதில்லை.  தீமையை தன்மையால் வெல்வதுதானே  நல்லோர் நற...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்         திருமிகு. மு. தவமணி B.Sc.B.Ed,        கே.டி.காய்க்வாட் தமிழ்ப் பள்ளி.       சயான்  கோலிவாடா        மும்பை. பணி ஓய்வு : 01.06.2023 மின்னணு மிகைபுகழ்  கூடங்குளம் பேருலா முன்னடிநாடார் பஞ்சுப்பழம் அம்மாள் இணையிலா முன்னவர் குலம் விளங்க வந்த பிள்ளைநிலா சின்னவர் செவியோதிய தவமணி பெயர் புகழுலா! கள்ளுலா ரதிலலிதா கண்ணுலா வந்தலா(ல்) காதலா(ள் ) கரம்பிடித்தலா கன்னி மனையாதலா கட்டிலா தொட்டிலா பிள்ளை நால்வராதலா(ல்) மட்டிலா  மகிழுலா மனையில் ஆட்சி நடத்தலா! கர்மவீரர் பள்ளியில் தடம் பதித்தலா (ல்) கர்மமே கண்ணெனக் கடுமையாய் உழைத்தலா வன்மம் கொள்ளா வாழ்க்கைத்துணை வழிகாட்டலா(ல்) தர்மமும் தயையும்  தவமணியின் கரம்பிடித்தலா! கலைகள் யாவும் உள்ளிலா தலைச் சோற்றிலா மலையாய் உயர்வுலா மாறா நேசரின் அருளிலா அலையிலா மனம் ஆர்ப்பரிப்பிலா ஆனந்தத் துள்ளலா விலையிலா நட்புலா காண்டலா(ல்) மனம் மகிழ்ச்சி கடலிலா! தவம் உன்றன் பெயரிலா செயலிலா அ...

உன்னால் முடியும்

உன்னால் முடியும் " நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் படி ஏறு" என்பார் மார்ட்டின் லூதர் கிங். ஆமாம் உன்மீது நம்பிக்கை வைத்து முதற்படியில் கால் வைத்தால் போதும். மீதிப் படிகளையும் ஏறி நீ சிகரம் தொட்டுவிடலாம். எத்தனைப் படிகள் என்பது முக்கியமல்ல. எப்படியும் நடந்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை மட்டும் போதும். என்னிடம் என்ன இருக்கிறது என்று எண்ண வேண்டாம்.  மரங்களைக் குடைய  மரங்கொத்தி கோடாரி கொண்டு  செல்கிறதா?  இல்லையே...தனது ஒற்றை அலகை நம்பி  வைரம் பாய்ந்த மரத்திலும்   கூடு அமைந்துவிடுகிறது... நம்மால் மட்டும் கூடாதா என்ன? போராட வந்த பின்னர் புறமுதுகிட்டு ஓடலாமா? கழனியில் இறங்கிய பின்னர் சகதியாகிறது என்று காலைத் தூக்கலாமா?  இருட்டினில் நடக்கும்போது கால் ஒலி கேட்கத்தான் செய்யும். மழையில் நடக்கும்போது குடை பிடித்தாலும்  கால் நினையத்தான் செய்யும். கால் நனைகிறதே என்றால் வெளியில் செல்வதெப்போது? கரை சேருவோம் என்ற  நம்பிக்கையில்தான் கப்பலில் ஏறுகிறோம். கடலில் கப்பல் கவிழ்ந்து விடுமோ என்ற ஐயம் ...

வெள்ளிவிழா வாழ்த்து

வெள்ளிவிழா வாழ்த்து வாழும் நாட்கள் வரமாக வாழ்க்கை என்றும் இனிதாக இணைத்தார் இறைவன் துணையாக இருபத்தைந்து ஆண்டுகள் உவப்பாக வந்தது வெள்ளிவிழா மகிழ்வாக வசந்தம் வீசும் நறுமணமாக   வாழ்வாங்கு வாழ்வீர் இணையாக  வாழ்நாள் எல்லாம் அருட்பணியாக வரமாய் தொடரட்டும்  அர்ப்பணிப்பாக ஸ்தேவான் திருச்சபை  சிறப்பாக செய்த பணிகள்  நினைவாக வாழ்த்தி மகிழ்கிறோம்  நிறைவாக!             -செல்வபாய் ஜெயராஜ் 

பால்கார பாலம்ம

பால்கார பாலம்ம  "பாலம்மக்கோ ....பாலம்மக்கோ...." கதவைத் தட்டினாள் அன்னப்பழம். "யாரு....செத்தப் பொறு.... நான் வளவுல மாட்டுக்குத் தீவனம் போட்டுட்டு நிற்கேன்" உரக்கக் கத்தினார் பாலம்ம. "ஒரு அவசரம்க்கோ....ஒரு தம்ளர் பால் வேணும்" "வருகிறேன் இரு "என்று குரல் கொடுத்தார் பாலம்ம. கேட்டதும் திண்ணையில் கையில்  கொண்டுவந்த லோட்டாவோடு  அப்படியே உட்கார்ந்தார் அன்னப்பழம். சற்று நேரத்திற்கெல்லாம்  வீட்டிற்குள் இருந்து வந்த  பாலம்ம..."என்ன அன்னப்பழம்  மணி நாலு தான் ஆவது  அதுக்குள்ள கையில்  லோட்டாவோடு வந்துருக்கா?" என்று கையை தோள் சீலையில் துடைத்தபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். "அது ஒண்ணுமில்லக்கோ....வீட்டுக்கு விருந்துக்காரவுக வந்துருக்காவ..." "யாரு உன் சம்பந்தி வூட்டுக்காரவுகளா?" "அதுகள் நம்ம வீட்டுக்கெல்லாம் வருமா? அதுகளோடு உறவ முறிச்சி ஆறு மாசம் ஆகுது. ஒரு பேச்சு  வார்த்தை இல்லை.." "அப்புறம் வேறு யாரு வந்திருக்காவ..?" "எங்க சின்னையா மகன். இந்தப்பக்கம் ஒரு சோலியா வந்தாவளாம். அதுதான் நம்ம அன்னப்பழத்தையும...