பதினாறும் பெற்று வாழ்க
பதினாறும் பெற்று வாழ்க "ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!" திருமண வீடுகளில் மணமக்களை வாழ்த்த அனைவரும் பயன்படுத்தும் அழகு கவிதை இது. எல்லோரும் வாழ்த்துகிறார்கள். நாமும் நன்றாக இருக்கிறது என்று கேட்டுவிட்டு வந்து விடுகிறோம். மறுபடியும் அதே பாட்டு இன்னொரு திருமண வீட்டில். இதுதான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. நமக்கும் மனப்பாடம் ஆகிவிட்டது. ஆல மரம் தெரியும். விரிந்து பரந்து கிளைகளைக் பரப்பி நிற்கும். அறுகம்புல் தெரியும் அது வெட்ட வெட்ட அறுகிப் போகாது. மறுபடியும் மறுபடியும் வளர்ந்து வந்து கொண்டே இருக்கும். மூங்கிலில் செய்த புல்லாங்குழலை சிறுவயதில் பூ...பூ..என்று ஊதிப் பார்த்து மற்றவர்கள் காதை செவிடாக்கி இருப்போம். மூங்கில் வளரும் இடத்தில் சுற்றி குத்தாக நிறைய மூங்கில்கள் வளர்ந்து வரும். இது என்ன பதினாறு? அதுவும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமாம். ஒற்றைப் பிள்ளையோடு படும்பாடு சொல்லி மாளவில்லை. ...