தமிழால் இணைவோம்
தமிழால் இணைவோம் " இமிழ் கடல் சூழ் உலகெங்கும் போய் வாழ்ந்தாலும் எந்தமிழர் தமிழ் மொழியால் இணைந்து கொள்க" என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். கண்டம்தாண்டி கண்டம் வந்தாலும் மொழியால் ஒன்றுபடுவீராக என்பது பாவலரேறு அவர்களின் வேண்டுகோள். இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் இல்லா நாடுகளே இல்லை என்னும் அளவுக்கு உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வாழ்வைத்தேடி ... வாழ்வாதாரத்தைத் தேடி உலகெங்கும் பணத்திற்காக பதவிக்காக குடியமர்ந்து விட்டோம். பெருமைக்குரியது. பெருமிதப்படக்கூடியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருக்கவும் முடியாது. . வீட்டை மறந்து நாட்டைத் துறந்து அந்நிய தேசத்தில் வந்து குடியமர்ந்து விட்டோம். அழகான அந்நியமொழியோடு நம்மைப் பிணைத்துக்கொண்டு விட்டோம். ஆனால் தாய்மொழியை மட்டும் நாம் மறந்திலோம் என்பதை அங்கங்கே காணப்படும் தமிழ்ச் சங்கங்கள் நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்காரர் என்றுகூட நமக்குத் தெரியாது. ஆனால் தமிழ்க் குரல் ஒன்று கேட்டுவிட்டால் போதும். திரும்பிப் பார்க...