கொன்றை மலர் சொன்ன பொய்
சங்க இலக்கியப் பாடல்களில் கொன்றை மலருக்கு என்று தனி இடம் உண்டு. காட்டில் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சியைத் தம் கவிதைகளில் கொண்டு வந்து காட்டி நம்மையும் கொன்றை மலர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமை பல புலவர்களுக்கு உண்டு. தத்தமது கற்பனைக்கு ஏற்ப தாம் சொல்ல வந்த கருத்தை தமது கதாப்பாத்திரங்கள் மூலமாக அழகுபடக் கூறி நிற்பர். அந்த வகையில் ஓதலாந்தையார் என்ற புலவர் கொன்றை மலரைப் பற்றிப் பாடிய பாடல் இப்படியும் பாடமுடியுமா? என வியக்க வைக்கிறது. கார்காலத்தை வரவேற்பதற்காக கொன்றை மரங்கள் பூக்களைத் தலையில் சுமந்து நிற்பது கண்கொள்ளாக் காட்சிதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தப் பூக்களின் புன்சிரிப்புக்குள் ஒரு பொய்யல்லவா மறைந்து கிடந்திருக்கிறது! கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள். அந்தப் பொய்யைக் கொன்றை மலருக்குள் பொதிந்து வந்து தந்த பெருமை ஓதலாந்தையாருக்கு உண்டு. கொன்றை மலர்கள் பூத்துவிட்டாலே கார்காலம் வந்துவிட்டது என்று நினைத்துவிட வேண்டியதுதான். தோழி ஒருத்தி தன் தலைவியோடு காட்டிற்குச் செல்கிறாள். காடெங...