குறமகள் இளவெயினி

குறமகள் இளவெயினி


தமக்கு வேண்டியவர் தவறு செய்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளும் பண்பு

எத்தனை பேரிடம் இருக்கும்?


வேண்டியவராகவே இருந்தாலும் தவறு செய்தால் வெட்டிவிட்டு ஓட நினைப்போம்.


பிறர் தவறு செய்தால்  அதற்காக

நாம் வருந்துவோமா?

இப்படி ஒரு தவறு நடந்து விட்டதே என்று வெட்கப் படுவோமா?

எல்லா இடத்திலும் வீரத்தை வெளிக்காட்ட

நம்மால் கூடுமோ?


பிறர் செய்யும் தவறுக்காக 

தான் நாணும் பண்பு எத்தனை பேரிடம்

இருக்கும்?

படைக்கலப் பணியில் வீரர்கள் 

இருந்தால் போதும் என்று நினைக்காது தானும் அவர்களுக்கு இணையாக தன் திறமையைக் காட்டும் பண்பு 

எத்தனை வேந்தரிடம் இருக்கும்?

அவையில் பெருமிதத்துடன் நடந்து கொள்ளுதல் எல்லா மன்னர்களிடமும் இருக்குமா?

 இவை எல்லாம் சாதாரணமாக

யாரிடமும் இல்லாத இயலாத பண்புகள்.


ஆனால் 

பெருமக்களே!

எம் அரசன் ஏறைக்கோன் இவை எல்லா பண்பும் ஒருங்கே பெற்றவன் ஏறைக்கோன்.

இவ்வாறு ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக  ஒரு பெண்பாற்  புலவர் பாடலொன்று பாடியுள்ளார்.


யாரந்த புலவர் என்று கேட்கிறீர்களா?

குறமகள் இளவெயினி தான் இந்த

ஏறைக்கோன் பெருமைகளைப் பற்றிப் பாடிய புலவர்.

அவர் பாடிய பாடல் இதோ உங்களுக்காக..


தமர் தற் தப்பின் அது நோன்றல்லும்,

பிறர் கையறவு தான் நாணுதலும்,

படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும்,

வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,

நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்,  

சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல்,

கோடல் கண்ணி, குறவர் பெருமகன்

ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை,

எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி,

கட்சி காணாக் கடமான் நல் ஏறு     

மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை

இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும்

பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே.

                                      - புறநானூறு 

             பாடியவர் :குறமகள் இளவெயினி


தன்னைச் சார்ந்தவர்கள் தனக்கு எதிராக தவறேதும் செய்தால் அதனை ஏறைக்கோன் பொறுத்துக்கொள்வான். பிறர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காகத் தான் நாணுவான். அவர்கள் செய்யும் தவறுகளுக்குத்  தானும் ஒரு காரணம் என்று எண்ணும் மனப்பாங்கு உள்ளவன்.

ஏறைக்கோன் தன் படைவீரர்களைப் பழிக்கமாட்டான். தான் முன்னின்று போர்புரிந்து வெல்வான்.


பகை வேந்தர்களின் அவையில் அஞ்சாது நடக்கும் ஆண்மை நிறைந்தவன்.

ஏறைக்கோன் கோடல் என்னும் வெண்காந்தள் மலரைத்  குடிப்பூவாகக் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பவன்.


இவனது மலைநாட்டில் 

ஆண்மான் பெண்மானை அழைக்கும் குரலை கேட்டு 

புலிகூட மகிழுமாம்.

அதாவது காட்டு விலங்குகள்கூட

இணையராய் இருக்கும் விலங்குகளுக்குத் தீங்கிழைக்காதாம்.

இதுதான்  ஏறை நாட்டுக்குகே பெருமை"

என்று பாடி மகிழ்ந்திருக்கிறார்  குறமகள் இளவெயினி .

மன்னன் நல்லவன். வல்லவன்..
இரக்க குணம் மிகுந்தவன்.
யாருக்கும் தீங்கிழைக்காதவன்.
இருக்கலாம். அவன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் மன்னனைப்.
 போலவே நல்லவர்களாக இருக்கலாம்.
உண்மை.
ஆனால் எதிரிகளாக இருக்கும் விலங்குகள் கூட இணையாக இருக்கும் உயிர்களுக்கும் தீங்கு செய்யாது .அப்படி ஒரு நற்பண்பு  ஏறைக்கோன் நாட்டில் வாழும் எல்லா உயிர்களுக்கும் உண்டு
என்று மான் இணையர் மகிழ்ச்சியாக எழுப்பும் குரலைக் கேட்டு புலி மகிழ்ந்து நிற்கும் காட்சியைக் கண் முன்னர் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்
குறமகள் இளவெயினி .

என்னவொரு அருமையான காட்சி!
ஏறைக்கோன் ஆட்சியின் மாட்சிக்கு இதுவே நற்சாட்சி !

 யார் அந்த ஏறைக்கோன் என்று நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்த அருமையான இலக்கிய நியமிக்கப் பாடல் இல்லையா!

ஏறு என்னும் பெயர் கொண்ட இந்த ஊர்

தற்போது  'காளையார் கோயில்' என்னும் பெயருடன் அறியப்படுகிறது.

Comments

Popular posts from this blog

நோவற்க நொந்தது அறியார்க்கு....

அம்மா நீ எனக்கு வேண்டும்

பயணங்கள் முடிவதில்லை