Posts

பிறந்தநாள் வாழ்த்து               விண்மீன்கள் ஒளிசிந்த விடிந்ததொரு பொன்னாளென வீசுஇளம் தென்றல் வந்து எடிசன் ஐயா காதோடு கவிபாட விசும்பின் வீழ்த் துளியென விடை காணா நாள்கள் வாழ்ந்தின்பம் காண்கவென வான்மழையும்  வாழ்த்துரைக்க கிண்கிணியெனக்  கைபேசியும் அணிவகுத்து நின்று அணிசெய் நாயகனுக்கு அணியம்செய் மொழியெடுத்து அழகாய் வாழ்த்தி நிற்க ஓய்விற்குப் பிறகும் ஓய்ந்திராது ஓய்ந்தவரென்று  எம்மையும் ஒதுக்கிடாது ஓரணியில் ஒருங்கிணைத்து ஓடி வந்து உதவி வரும் உயர்ந்த உள்ளம் பேருள்ளம் பெருமிதத்திற்குரிய உள்ளம் நெடுவரையன்ன நிலைத்த புகழடைந்து தொடர்பணி தொய்வில்லாது செய்துவர இறையருள் என்றென்றும்  இல்லம் தங்கிட இருகரம்கூப்பி வாழ்த்துகிறேன் வாழ்க  பல்லாண்டு ... பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு இன்றுபோல் என்றும் உவந்து !

நள்ளி

வள்ளல் நள்ளி புலவர் ஒருவர் கண்டீரம்  நாட்டுக்குட்பட்ட தோட்டி மலைப் பகுதியில் வந்து கொண்டிருக்கிறார். காதுகள் அடைத்து கண் மங்குவதுபோல தெரிகிறது. கால்கள் தள்ளாடுகின்றன. இதற்குமேல் நடக்க முடியாது என்ற நிலை. நடக்கமுடியாமல்  ஒரு பலாமரத்தடியில் அமர்ந்துவிடுகிறார்.   அப்போது வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு இளைஞன் ஒருவன் அந்த வழியாக வருகிறான் பார்ப்பதற்கு வசதியான வீட்டுப் பிள்ளை போல தெரிகிறது. யாராயிருக்கும்?.  இளவரசனாக இருப்பானோ? இருக்கலாம்....இளவரசனாக இருந்தால் ஒருவேளை உதவி கிடைக்கலாம் .இப்படி ஒரு எண்ணத்தில் புலவர் எழும்ப முயன்றார். இளைஞனும் புலவரைப்  பார்க்கிறான். பார்த்த மாத்திரத்தில் புலவரின் நிலைமை புரிந்து போகிறது. அதற்குள் புலவர் கையைக் குவித்துக்கொண்டே எழுந்தார்.  "ம்கூம்....அப்படியே இருங்கள்" என்று  இருக்கச் செய்தான் இளைஞன்.  அவனுடன் வேட்டைக்கு வந்த மற்ற இளைஞர்கள் இன்னும்  வந்து சேரவில்லை.  அங்குமிங்கும் பார்த்த இளைஞன் தானே தன் கையால் தீயை மூட்டினான்.  தான் வேட்டையாடிக் கொண்டு வந்த மானின் தசையை அதிலே வாட்டினான்.  "புலவர...

நின்றன நின்றன நில்லா...

நின்றன நின்றன நில்லா... இந்த வாழ்வு நிலையில்லாதது. நாம் நிரந்தரமாக இந்த உலகில்  வாழப் போகிறவர்கள் என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேற்று இருந்தது இன்று நம்மிடம் இல்லை. நாளை என்ன நடக்குமோ நமக்குத் தெரியாது. இப்படித்தான் வாழ்வோம் என்று யாரும் முடிவு செய்ய முடியாது. இங்கு நிரந்தரம் என்று எதுவும் இல்லை. விருப்பம் போல் வாழ்வது வாழ்க்கையல்ல. வாழுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் வாழும்போதே அறக்காரியங்களைச் செய்து வாழுங்கள். இதுதான் பட்டறிவாளர்கள் நமக்குச் சொல்லித்தரும் பாடம்.  நல்லது செய்வதற்கு நாள் பார்க்கக் கூடாது. நாள் பார்த்து ,காலம் பார்த்து செய்வேன் என்று காத்திருந்தால் நல்லது நடைபெறாமலேயே போய்விடலாம். சிறிது காலம் கழித்து நல்ல காரியங்கள் செய்துவிட்டு வருகிறேன் என்று கூறினால் கூற்றுவன் உங்களுக்காகக் காத்திருக்கப் போவதில்லை. இதனை உணர்த்தும் அருமையான நாலடியார் பாடல் உங்களுக்காக. ‘நின்றன நின்றன நில்லா’என உணர்ந்து,ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க-சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன்வந்தது வந்தது, கூற்று!           ...

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே வாழ்க்கை வாழ்வதற்கே!              அந்த வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அனைவரும்   ஒரு திட்டம் போட்டு வைத்திருப்போம்.  ஆனால் நாம் திட்டமிட்டது போல் எல்லாம் நடை பெறுகிறதா?              இடையில் எத்தனையோ குழப்பங்கள்... குளறுபடிகள்... ஏறுக்குமாறான நிகழ்வுகள். இப்படி நடக்கும் என்று  நினைக்கவில்லையே  என்ற புலம்பல். இதற்குமேல் எதுவுமே நல்லது நடக்காது என்று  ஒரு  முடிவுரை எழுதி வைத்துவிட்டு  விரக்தியில் அமர்ந்திருப்போம். திடீர் திருப்பமாக எல்லாமே தலைகீழாக மாறி நம்மை மகிழ்ச்சியில் திக்குமுக்காட  வைத்து விடும்.  இதுதான் வாழ்க்கை. நாம் நினைப்பது போல ஒன்றும் நடப்பதில்லை.    பத்து மணிக்கு ஒரு இன்டர்வியூ போக வேண்டும். வழியில்  போராட்டக்காரர்கள் வந்து ஆட்டோவை வழி மறிக்க  குறிப்பிட்ட நேரத்தில் இன்டர்வியூக்குப் போக முடியவில்லை.       ...

பசி நடக்காது

பசி நடக்காது  தமிழ்ப் புலவர்கள் என்றதும் கண்முன் வந்து போகும் பெயர்களில் முதன்மை இடத்தில் இருப்பவர்கள் கம்பரும் வள்ளுவரும் தான். இவர்களால் தமிழுக்கும் பெருமை. தமிழர்களுக்கும் பெருமை. ஏன் தமிழ் நாட்டிற்கே பெருமை. அதனால்தான் பாரதியார் தனது பாடலில் "கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு  .....    ..... ..... வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு" என்று பாடி கம்பரையும் வள்ளுவரையும் முதன்மைப்படுத்தியுள்ளார்.  கம்பர் என்றதும் நம் கண் முன்னர் வந்து போவது கம்பராமாயணம் என்பது யாராலும்  மறுக்க முடியாத உண்மை. ஆனால் கம்பர் ,கம்பராமாயணத்தோடு தன் படைப்பை நிறுத்தி விடவில்லை. இன்னும் பல நூல்களையும் படைத்துள்ளதாக அறிய முடிகிறது . சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், மும்மணிக்கோவை என்னும் நூல்களும் கம்பர் இயற்றிய நூல்களாகவே   அறியப்படுகின்றன.  இவை தவிரவ...

ஒட்டா ஒரு மதி கெட்டாய்

ஒட்டா ஒரு மதி கெட்டாய் போட்டியும் பொறாமையும் நிறைந்ததுதான் உலகம்.      ஐந்தறிவுள்ள விலங்குகள் உணவுக்காக மட்டுமே போட்டி போடுகின்றன.      ஆனால் ஆறறிவுள்ள மனிதன் மட்டும்தான் பெருமைக்காக, புகழுக்காகப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறான்.       தான்தான் பெரியவன் என்பதைக்  காட்டிக் கொள்வதற்காக  போட்டி போடுகிறான்.      போட்டி ...பொறாமை.... சண்டை... சச்சரவு....      இவை எல்லாம் சாதாரண மக்களிடையே காணப்படும் அன்றாட நிகழ்வு. ஆனால்    அப்படி இருங்கள் ....இப்படி இருங்கள் என்று நமக்கு அறிவுரை கூறும் பெருமதியாளரிடமும்  பொறாமை காணப்படும்போது அது சற்று  நம்மை  நெருடல் அடைய வைக்கிறது. இப்படியும் இருப்பார்களா என்று வியக்க வைக்கிறது. நகைக்க வைக்கிறது. சற்றே சிந்திக்க வைக்கிறது. "யாரிந்த போட்டியாளர்கள்?" "புலவர்கள்தான்." "புலவர்களிடையே அப்படி என்ன போட்டி?" "புலமையை மெய்ப்பிப்பதில் முந்தி நிற்பது நீயா நானா  என்பதுதான் போட்டி."  குறை கண்டு பிடி...

கார வீடு

கார வீடு  காலையிலிருந்தே அன்னக்கிளி ஒரு படபடப்போடு இருந்தார்.நடப்பதெல்லாம் கனவா இல்லை நனவா....எதையுமே நம்பமுடியவில்லை. எத்தனை ஆண்டு கனவு. கார வீடு கட்டிக் காலமெல்லாம் வாழ வேண்டும் என்ற கனவு கண்கள் கசக்கியதும் காணாமல் போனது போல இருந்தது. இதுதான் நமக்கு நிரந்தரம். கண்கள் கூரையைப் பார்த்தன. அந்தநாள் நினைவுகள் நெஞ்சை அழுத்த..... சிறுகச்சிறுக சேர்த்து வைத்தப் பணத்தில் கட்டிய வீடு. ஒவ்வொரு செங்கலுக்கும் ஒருநாள் உழைப்பு கொடுக்க வேண்டியிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகாலம் குடிசை வாழ்க்கை. வெயில் காலங்களில் ஓட்டைவழியாக சூரியவெளிச்சம் அத்துமீறி அடாவடித்தனம் பண்ணும். மழைக்காலங்களில் எங்கு எல்லாம் ஓட்டைத் தெரிகிறதோ அந்த இடங்களைத் தேடிப் பிடித்து தாராளமாய் தண்ணீர் ஊற்றுவதும் சொட்டுச் சொட்டாக சொட்டிச் சேட்டை செய்துவதுமாய் மழை விளையாட்டுக் காட்டும். இது பலநாள் நிகழ்வானதால்  இதை எல்லாம் அன்னக்கிளி பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருநாள் பாடென்றால் பெரிதாகத் தெரியும். நித்தம் நித்தம் இதே பாடுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டதால் எல்லாமே பழகி விட்டது. வெயில் அடித்தாலும்  தாங்கிக் கொள்ளும். குளிரும்...