அம்மாவுக்கு ஏது ஞாயிறு?
அம்மாவுக்கு ஏது ஞாயிறு? அதிகாலை நேரம் அசந்து தூங்கிக் கிடந்தேன் மெல்ல ஓர்அழைப்பு யாரென்றேன் பாரென்று சொல்லி மறைந்து போனது உருவம் விழிகளைத் திறந்து விட்டத்திலிருந்து அழைத்தவரைக் கண்கள் தேடின கண்ணுக்குள் அகப்படுவார் எவருமிலர் காட்சியில் பிடிபட நிழலும் இல்லாத அருவத்தைத் தேடலில் யாது பயன் உறுதிசெய்தபின்னர் மறுபடியும் இமைகள் மெல்லத் தழுவின. மறுபடியும் அதே அழைப்பு இம்முறை கண்கள் திறக்க மனமில்லாத நான் இமைமூடிக் கிடந்தபடி இல்லாத உருவத்தைத் தேடினேன் பொல்லாத அந்த உருவமும் சொல்லாது மௌனம் காத்து பொழுதைச் சுமையாக்கிப் போதையில் தேடலை உருவாக்கி மெப்புக் காட்டி மெல்ல விளையாட்டுக்காட்டி உள்ளுக்குள் வெதும்ப வைத்தது வேடிக்கைகள் காட்டி வெறுப்பேற்றி நின்றது. இம்முறை பொறுமை கை மீற பொசுக்கென்று எழும்பி வெடுக்கென்று நாலுவார்த்தைக் கேட்டுவிட நினைத்து எழும்ப என்ன ஐயாவுக்குக் கோபமோ என்று கேட்டது உருவம். பரிச்சயமான குரல். என் உணர்வோடு கலந்த குரல் அதுவரை இருந்த கோபமெல்லாம் தணிய ஒன்றுமில்லை சும்மாதான் என்று எழுப்பினேன். சரிசரி மழுப்பியது வழுக்கியது எல்லாம் போதும்...