திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினம் " கனியிடை ஏறிய சுளையும்_ முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் _காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும்_ தென்னை நல்கிய குளிரிள நீரும் இனியன என்பேன் எனினும் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்" என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அந்தத் தமிழுக்கு மணிமகுடம் சூட்டி அழகு பார்த்தவர் திருவள்ளுவர். " வான் பொய்த்தாலும் பொய்க்கலாம். வள்ளுவரின் வாய்மொழி பொய்க்காது "என பொய்யாமொழிக்கு மெய்யாய் முன்னுரை எழுதி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்தக் கொண்டாட்டம் எந்நாளும் தொடர வேண்டும். எல்லோராலும் அறியப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தை மாதம் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடி வருகிறோம். ஒன்றே முக்கால் அடியில் வாழ்வியல் உண்மைகளை நம் உள்ளங்களில் பதிய வைத்தவர். அறம் ,பொருள் ,இன்பம் என முப்பாலை முக்கனிச் சுவை கலந்து எக்காலத்திற்கும் உகந்ததாக்கி நம்மைத் தெம்பூட்டி வளர்த்துக் கொண்டிருப்பவர். " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு " என்று தமிழ்நாட்டின் அடையாளமே திருவள்ளு...